Monday, April 11, 2016

நுவரெலியாவில் இணையம் மூலம் அறைகளை ஒதுக்கீடு செய்பவர்களுக்கு பொலிசாரின் எச்சரிக்கை. i

(MN) இணைய தளத்தின் ஊடாக நுவரெலியாவில் அறைகளை வாடகைக்கு ஒதுக்கீடு செய்து கொள்ள வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வசந்த கால கொண்டாட்டங்களுக்காக உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தற்போது நுவரெலியா நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி இணையத்தின் ஊடாக மோசடி செய்யும் சம்பவங்கள் பதிவாவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த வீடுகள் மற்றும் விடுதிகளின் புகைப்படங்களைப் போட்டு அவற்றில் அறைகளை ஒதுக்கீடு செய்ய பணம் செலுத்துமாறு இணையத்தில் விளம்பரம் செய்து, கும்பலொன்று பணம் அபகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இணையத்தில் கணக்கு இலக்கத்திற்கு பணம் வைப்பிலிடுமாறு கோரி செய்யப்படும் விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என பொலிஸார் சுற்றுலாப் பயணிகளிடம் கோரியுள்ளனர்.

இணையத்தின் ஊடாக அறைகளை ஒதுக்கீடு செய்யும் போது பணம் செலுத்துவது மிகவும் அவதானத்துடன் செய்ய வேண்டுமென பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Disqus Comments