உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் வர லாற்றில் 2 தடவைகள் சம்பியனான முதலாவது நாடு என்ற பெருமையை மேற்கிந்தியத் தீவுகள் பெற்றுக்கொண்டது.
கொல்கத்தா ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் மகளிர் இறுதிப் போட்டியில் தொடர்ந்து நேற்று இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்ட மேற்கிந்தியத் தீவுகள் இருபதுக்கு 20 உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, மார்லன் சமு வெல்ஸ், கார்லோஸ் ப்ரத்வெய்ட் ஆகிய இருவரின் அதிரடியின் உதவியுடன் 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது.
நேற்றைய இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாடும்படி இங்கிலாந்தை அழைத்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டு, மத்தியில் திறமையை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து முதல் 5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 23 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் தடுமாற்றத்தை எதிர்நோக்கியது.
நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டி ஆட்டநாயகன் ஜேசன் ரோய் இரண்டாவது பந்தில் ஓட்டம் பெறாமல் வெளியேறினார். இரண்டா வது ஓவரில் அலெக்ஸ் ஹேல்ஸ்
ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 5ஆவது ஓவரில் அணித் தலைவர் மோர்கன் 5 ஓட்டங்களுடன் நடையைக்கட்டினார்.
இந்த இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த ஜோ ரூட்டும் ஜொஸ் பட்லரும் நான்காவது விக்கெட்டில் 34 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணிக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தபோது பட்லர் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பென் ஸ்டோக்ஸ் வேகமாக 13 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்க, துடுப்பாட்டத்தில் எதையாவது சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மொயின் அலி தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் ஓட்டம் எதனையும் பெறாமல் வெளியேறினார்.
9ஆம் இலக்க வீரர் டேவிட் வில்லி, துணிவே துணை என்பதற்கு அமைய அதிரடியில் இறங்கி 14 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கலாக 21 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் கார்லோஸ் ப்ரத்வெய்ட் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் ட்வேன் ப்ராவோ 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் சமுவெல் பட்றி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
அதன்பிறகு வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தைப் போன்றே தனது இன்னிங்ஸின் ஆரம்பத்தில் ஆட்டம் கண்டது. ஜோன்சன் சார்ள்ஸ் (1), கிறிஸ் கெய்ல் (4), இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஆட்டநாயகனான லெண்ட்ல் சிமன்ஸ் (0) ஆகியோர் வீரர்களின் ஆசனத்திற்கு திரும்பியிருந்தபோது மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கை வெறும் 11 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால் இலங்கைக்கு எதிராக 2012 உலக இருபதுக்கு 20 இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனான மார்லன் சமுவெல்ஸ் அபராமாக துடுப்பெடுத்தாட அவருக்கு பக்கத்துணையாக தனது விக்கெட்டை பாதுகாத்தவாறு பிராவோ நிதானத்துடன் துடுப்பெடுத்தாடினார்.
இதனிடையே லியாம் ப்ளன்கட்டின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் ஜொஸ் பட்லரிடம் பிடிகொடுத்து மார்லன் சமுவெல்ஸ் ஆட்டமிழந்ததாக மத்தியஸ்தர் தீர்ப்பு வழங்கினார். ஆனால் அந்தப் பிடியை பட்லர் முறையாக எடுக்கவில்லை என்பது தொலைக்காட்சி சலன அசைவில் தெரியவர மத்தியஸ்தர் தனது தீர்ப்பை மாற்றி சமுவெல்ஸை தொடர்ந்து துடுப்பெடுத்தாட அனுமதித்தார். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பிராவோ 25 ஒட்டங்களுக்கு ரூட்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து அண்டரே ரசல், அணித் தலைவர் சமி 2 ஓட்டங்களுடன் டேவிட் வில்லியின் ஒரே ஓவரில் வெளியேறினர்.
எனினும் மார்லன் சமுவெல்ஸுடன் ஜோடி சேர்ந்த கார்லோஸ் ப்ரத்வெய்ட் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி கடைசி ஓவரில் தேவைப்பட்ட 19 ஓட்டங்களை தொடர்ச்சியாக 4 சிக்ஸர்கள் மூலம் பெற்று மேற்கிந்தியத் தீவுகளை இருபதுக்கு 20 உலக சம்பியனாக்கினார்.
மார்லன் சமுவெல்ஸ் 66 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்களுடனும் கார்லோஸ் ப்ரத்வெய்ட் 10 பந்துகளில் 4 தொடர்ச்சியான சிக்ஸர்கள் அடங்கலாக 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். அத்துடன் இவர்கள் இருவரும் வீழ்த்தப்படாத 7ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகளின் இந்த வெற்றியோடு இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை இரண்டாவது முறை வெல்லும் முதல் அணி என்பதை மேற்கிந்தியத் தீவுகள் தனதாக்கிக்கொண்டது. அதேபோல இரண்டு முறை நாட்டுக்கு இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தைப் பெற்றுத்தந்த தலைவர் என்ற பெருமையையும் சமி பெற்றார்.
இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக மேற்கிந்தியத் தீவுகளின் மார்லன் சமுவெல்ஸ் தெரிவுசெய்யப்பட்டார். அதேபோல் தொடர்நாயகனாக இந்தியாவின் விராட் கோஹ்லி தெரிவானார்.