Saturday, May 14, 2016

வாக்குச் சாவடிகளுக்கு செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்


தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற திங்கட்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. 

அதன்படி தேர்தல் பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. 

234 தொகுதிகளிலும் மொத்தம் 3,776 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 320 பேர் பெண்கள். 1,566 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். 

இந்த தேர்தலில் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர். 

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

வாக்குப்பதிவு தினத்தன்று மழை பெய்தால் அதை சமாளிக்க வாக்குச்சாவடி முன்பு பிளாஸ்டிக் கூரை போட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக போதிய நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 

வாக்குச் சாவடிகளுக்குள் வாக்காளர்கள் செல்போன்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். 

வாக்குப்பதிவு தினமான 16ம் திகதி மாலை 6 மணி வரை மின்வெட்டு ஏற்படாமல் கவனமுடன் செயல்படுமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.
Disqus Comments