Saturday, September 17, 2016

ஏறாவூர் இரட்டைப் படுகொலை: சூத்திரதாரிகள் ஐவர் கைது:

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) ஏறாவூரில் கடந்த (11.09.2016) ஞாயிறன்று அதிகாலை இடம்பெற்ற படுகொலையுடன் சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகள் நால்வர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையாளிகள் கைது செய்யப்பட்ட செய்தி ஏறாவூர் நகரம் முழுவதும் தீயாகப் பரவியதும் பொது மக்கள் கொலையாளிகளைக் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பொலிஸ் நிலையத்தைச் சூழ்ந்து கொண்டனர்.
எனினும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோர் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பிரசன்னமாகி பொதுமக்கள் பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வண்ணம் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
அதற்கமைய பொதுமக்கள் கலைந்து சென்றனர். கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த தீவிர விசாரணைகளையடுத்து ஏறாவூரின் நகர மத்தியில் மறைந்திருந்த கொலைச் சூத்திரதாரிகள் நால்வர் சாதுர்யமாக மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனின் சகோதரன் கைது செய்யப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளான்.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் பொல்லால் தாக்கப்பட்ட நிலையிலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
படுகொலையாளிகளைத் தேடி பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கிணங்க 10 விஷேட பொலிஸ் குழுக்களும் 80 இற்கு மேற்பட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களும் இரவு பகலாக புலன் விசாரணைகளில் ஈடுபட்டிருந்தன.
படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகளது உடலங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏறாவூர் காட்டுப் பள்ளி மையவாடியில் ஒரேகுழியில் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட்டன. அங்கு ஆயிரக்கணக்கானோர் நல்லடக்க இறுதி நிகழ்வில் துயரத்தோடு கூடியிருநது பிரார்த்தித்தனர்.
பிரார்த்தனை நிகழ்வுகளின் போது உறவினர்கள், உறவினரல்லாதோர் என பலரும் விம்மியழுது புலம்பி நின்றதை அவதானிக்க முடிந்தது.
(Zajil News)
Disqus Comments