அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நிகாப் விவகாரத்தில் குறிப்பிட்ட ஒரு மத்ஹப் அல்லது அமைப்பின் நிலைப்பாட்டை பொதுமைப் படுத்தி தீர்மானம் (2007) எடுத்தமை ஒரு வரலாற்று/ இஜ்திஹாத் தவறாகும்.
மாற்றுக் கருத்தை மதிக்க வேண்டும் என (2009) ஜம்மியத்துல் உலமா எடுத்த சரியான முடிவின்படி தெளிவான ஒரு முடிவை 2016 இல் வெளியிடுவதில் எந்த தவறும் இருக்க முடியாது.
இலங்கையில் ஷாபியி மத்ஹபின் பிரபலமான கருத்தை தொன்று தொட்டு உலமாக்கள் பின்பற்றி வந்துள்ளார்கள், உலகிலும் கணிசமான பகுதியினர் பின்பற்றுகின்றார்கள்
இரண்டு நிலைப்பாடுகள் குறித்தும் வரலாறு நெடுகிலும் உலமாக்கள், இமாம்கள், புகஹாக்கள் விரிவாக ஆராய்ந்துள்ளார்கள், மென்மேலும் நாம் இவ்விடயத்தில் வாதப் பிரதி வாதங்களுக்குள் செல்வது அவசியமில்லை.
இந்த விடயத்தில் நான் உடன்படா விட்டாலும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடனும் அதில் அங்கத்துவம் பெற்றுள்ள குறிப்பிட்ட மத்ஹப் மற்றும் அமைப்பு சார்ந்தவர்களுடன் வாதப் பிரதி வாதங்களில் ஈடுபட விரும்பவில்லை, மாற்றுக் கருத்து உடையோரை நெறி பிரழ்ந்தவர்கள் என மட்டராகமாக விமர்சிப்பதை உடனடியாக நிறுத்துமாறு ஜம்மியத்துல் உலமா உலமாக்களை அறிவுறுத்த வேண்டும்.
இன்னும் ஒரு மஜ்லிஸுல் பிக்ஹ் தோன்றுவதற்கு எந்தவொரு தரப்பும் காரணமாக இருந்துவிடக் கூடாது.
அதேபோல் ஏனைய அமைப்புக்களும் தமது அங்கத்தவர்களை அறிவுறுத்த வேண்டும்.
அதேவேளை நிகாப் அணிவதற்கு விரும்பும், கடமை எனக் கருதும் ஒரு சாராரின் உரிமை மதிக்கப் படுவதோடு அதற்கு தடை கொண்டு வரப்படுவதற்கு நாம் எந்த வகையிலும் இடமளிக்கவும் முடியாது.
தேசிய அரங்கிலும் சர்வதேச அரங்கிலும் நிகாப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் மூன்றாம் தரப்பினரின் உள்நோக்கங்களை நாம் அறியாமலும் இல்லை, இங்குதான் கருத்து வேற்றுமைகளுக்கு மத்தியிலும் எமது சமூக ஒற்றுமை கட்டி எழுப்பப் பட வேண்டிய அவசியம் உணரப்படுகின்றது.
முரண்பாடுகளை தவிர்ப்பதற்கும் வரலாற்றில் மிக நெருக்கடியான ஒரு கால கட்டத்தில் உம்மத்தின் ஒற்றுமையை கட்டி எழுப்புவதற்கும் எல்லா தரப்பினரும் புரிந்துணர்வுடன் ஒத்துழைக்குமாறு அல்லாஹ்விற்காக மன்றாடி வேண்டிக் கொள்கின்றேன்.
