Monday, November 21, 2016

நாட்டில் இனக்கலவரமொன்றை ஏற்படுத்த திட்டமிட்ட நடவடிக்கைகள்-சிறுபான்மை மக்கள் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும்

நாட்டில் பாரிய  இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது அரங்கேற்றப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

தற்போது ஆங்காங்கே இடம்பெற்றுவரும்  இனவாத செயற்பாடுகள்  அதற்கான முன் ஆயத்தங்களாகவே  கருதுவதாகவும் இது குறித்து சிறுபான்மை சமூகத்தினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மாவடிப்பள்ளி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  இதனை தெரிவித்தார்.

சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இனக்கலவரங்களை ஏற்படுத்த திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதுடன் அதற்கு சிறுபான்மையினத்தவரை பலிக்கடாவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மோசமான நிலைமையை எதிர்கொள்ள சிறுபான்மை சமூகத்தினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் சிறுபான்மை அரசியல் தலைமைகளும் இந்த நிலைமையில் தாம் சார்ந்த சமூகத்தை சமயோசிதமாக வழி நடத்த வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன்  பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் இந்த தருணத்தில் பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை கூறி இனவாதிகளுக்கு தீனி போடும் விதமாக செயற்படுவதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரம் ஏற்படும் பட்சத்தில் மேலும் பத்து ஆண்டுகளுக்கு நாட்டின் அபிவிருத்தி தள்ளிப் போகும் என்பதுடன் இதனால்  அதிகம்  பாதிக்கப்பட போவது 70 வீதமான பெரும்பான்மையினத்தவரே என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

Disqus Comments