முஸ்லிம்களது உணர்வுகள் தூண்டப்படும் இவ்வேளையில் ஆத்திரம் கொண்டு வெகுண்டெழாது நிதானமாக சிந்தித்து சமயோசிதமாக செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
ஆக்ரோஷங்களையும் அடாவடித்தனமான செயற்பாடுகளையும் குறைத்து மாற்று மதத்தவர்களது மதங்களை நிந்திக்காது சமூக பிரச்சனைகளின் போது அதற்குரியவர்களை முறையாக அனுகி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் சாலச்சிறந்ததாகும். மாற்று மதத்தினர் சிரிக்குமளவு முஸ்லிம்களது இயக்க, குழுப் பிரச்சினைகளை சந்திக்குக் கொண்டுவந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்பது போன்று அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்காது எமது இஸ்லாமிய நற்பண்புகளை வெளிப்படுத்தி மார்க்கம் பற்றிய நல்லெண்ணெங்களை உருவாக்க முயற்சிப்போம்.
தொழுகை,பொறுமை,பிரார்த்தனை மற்றும் முறையான உரிய முயற்சிகள் போன்றவற்றைக் கையாண்டு தீர்வுகளுக்கான முன்னெடுப்புகளை மோற்கொள்வது தான் தற்போதைய சூழ்நிலை வேண்டிநிற்கும் அம்சமாகும். மனிதம் பேணி நாம் எமது இனத்தவர்களை காட்டிக்கொடுக்காது கருத்துமுரண்பாடுகளில் புரிந்துணர்வுகளை கைக்கொண்டு விவேகத்துடனும் சமயோசிதமாகவும் நடந்து ஏனைய சமூகத்தினருக்கு முன்மாதிரியாக வாழ எத்தனிப்போம்.
ஒரு முஸ்லிமின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக அவனை காட்டிக்கொடுத்து சந்தோசம் காணும் பட்சத்தில் அப்பிரதேசத்திலுள்எ ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் பாதிப்பும், பேராபத்தும், எதிர்பாராத விளைவுகளும் வந்தே தீரும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் மறந்திட முடியாது.எமது முன்னோர்கள் வாய்மை,நம்பிக்கைக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து மாற்று மத சகோதரர்களின் உள்ளங்களை வென்று அவர்களே விரும்பி எமது முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமான இடங்களை வழங்கிய வரலாறுகளும் உண்டு என்றால் நாம் எமது நாட்டில் சிறப்பாக வாழ்ந்த சமுதாயம் என்பதை பறைசாற்றுகின்றது, அத்தோடு இந்நாட்டின் கல்வி,பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள் என்றால் மிகையாகாது, எனினும் ஒருசிலரது நாகரிகமற்ற நடவடிக்கைகளினால் ஒட்டொமொத்த முஸ்லிம்களும் கொள்ளையர்கள், ஏமாற்றுக்காரர்கள், பயங்கரவாதிகள் என பெயர் சூட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வருந்தத்தக்கதாகும்.
இஸ்லாம் மென்மையையும், நற்பண்புகளையும் போதிக்கும் அழகிய மார்க்கம், எமது இஸ்லாமிய தனித்துவத்தைப் பேணுவதோடு மாற்று மதத்தவர்களை மதிக்கும்படி வலியுறுத்தும் எமது மார்க்கத்தின் வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி வாழ முயற்சிப்போம்.
வல்லவன் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிம்மதியான சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்தியருள்வானாக! ஆமீன்
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியாபுரம்-பாலாவி
20/11/2016