இராஜாங்க அமைச்சர்
ஹிஸ்புல்லாவின் பாராளுமன்ற உரைதான் அண்மைய சில நாட்களாக சமூக வலைத்தளங்களில்
முக்கிய இடத்தினை பிடித்துள்ளது. இதில் பலரும் பலவிதமான கருத்துக்களை
முன்வைக்கின்றார்கள்.
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும்,
இஸ்லாமிய மார்க்கத்துக்கும் எதிரான அழுத்தங்கள் பௌத்த தீவிரவாதிகளினால் தொடர்ந்து
முன்னெடுக்கப்பட்டால் அது எதிர்காலங்களில் முஸ்லிம் இளைஞ்சர்கள் ஆயுதம் ஏந்த
தவறமாட்டார்கள் என்றும், அவ்வாறானதொரு நிலைமை உருவாக்கப்படுகின்றது என்றும் ஒரு
யதார்த்தமான எதிர்வுகூறல் ஒன்றினை ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார். அது
பாராட்டப்பட வேண்டியதுதான்.
ஆனால் இது ஒரு பௌத்த நாடு
என்று பலதடவைகள் கூறியதன் மூலம் தனது பாராட்டத்தக்க உரையினை சைவரினால் பெரிக்கியுள்ளார்.
அதாவது முற்போக்காக பேசிவிட்டு தங்களது சமூகம் பௌத்தர்களுக்கு அடிமை என்ற உத்தரவாதத்தினை
தனக்கே உரித்தான பானியில் பிற்போக்குத்தனமாக கூறியதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத
கருத்தாகும்.
அத்துடன் இளைஞ்சர்கள்
ஆயுதம் ஏந்துவார்கள் என்று கூறினாரே தவிர, அந்த இளைஞ்சர்களுக்கு தலைமை வகிப்பது
யார் என்றும், அதில் தனது நிலைப்பாடு என்ன என்றும் கூற தவறியுள்ளார். இதிலும் ஒரு
நழுவல் போக்கே காணப்படுகின்றது.
1989 ஆம் ஆண்டு பாராளுமன்றம் சென்ற ஹிஸ்புல்லாஹ் அவர்கள், இவ்வளவு கால தனது
பாராளுமன்ற உரையில் இவ்வாறானதொரு பாராட்டினை பெற்றதில்லை. அதாவது மக்கள் அவரை
பாராளுமன்றம் அனுப்பி 27 வருடங்களுக்கு பின்புதான் உருப்படியான ஒரு விடயத்தினை
பேசியுள்ளார் என்பது அதன் அர்த்தமாகும். அப்படியானால் கடந்த 27 வருடங்களாக எதனை
பேசினார் என்ற கேள்விகள் எழாமலில்லை.
இவரது இந்த பாராளுமன்ற
உரையினைவைத்து முஸ்லிம்களுக்கு தலைமை வகிக்க ஹிஸ்புல்லாஹ்தான் தகுதி உடையவர்
என்றும் சிலர் கூறுகின்றார்கள். அதுவும் உண்மைதான். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது
கொள்கையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் இவர் தலைமைத்துவத்துக்கு மிகவும்
தகுதியானவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆரம்ப காலங்களில்
பிரதேசவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரசினுள் முதன்
முதலாக மீண்டும் பிரதேசவாதத்தினை இவரே உருவாக்கினார். அதாவது மட்டக்களப்பு
மாவட்டத்தில் ஏனைய கிராமங்களை புறக்கணித்துவிட்டு தனது ஊரை மட்டும்
முன்னிலைப்படுத்தி அனைத்து அபிவிருத்திகளையும் செய்தார். இவரை பின்பற்றித்தான்
பின்னாட்களில் சிலர் அரசியல் செய்ய முற்பட்டார்கள். இதன் மூலமாக தான் தேசிய
தலைமைத்துவத்துக்கு தகுதி அற்றவர் என்ற தோற்றப்பாட்டினை இவராகவே
உருவாக்கிக்கொண்டார்.
ஹிஸ்புல்லாஹ் அவர்கள்
எப்பொழுதும் எதிர்க்கட்சி அரசியலை விரும்பியதில்லை. முஸ்லிம் காங்கிரசின் மூலம்
அரசியல் அந்தஸ்தினை பெற்ற இவர், அதே முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசைக்கு
சென்றால் கட்சியை விட்டு விலகி சென்று அதிகாரா வர்க்கத்தினர்களுடன்
ஒட்டிக்கொள்வார். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் நடந்திருக்கின்றது.
இறுதியாக சிங்கள தேசிய
கட்சியான சிறி லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து, அக்கட்சியின் மூலமாக இராஜாங்க
அமைச்சர் பதவியினையும் பெற்றுக்கொண்டு, அக்கட்சிக்காக ஹிஸ்புல்லாஹ் அவர்கள்
உழைத்து வருகின்றார். அவர் எப்படித்தான் பேசினாலும் ஒரு சிங்கள கட்சியில்
இருந்துகொண்டு முஸ்லிம்களுக்கு தலைமை வழங்க முடியாது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது