Saturday, January 21, 2017

ஐந்தாவது நாளாக தமிழகமெங்கும் தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்

(BBC TAMIL) ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு அனைத்து அனுமதிகளையும் அளித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடந்துவருகிறது.
சென்னை மெரீனா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம், அலங்காநல்லூர், கோயம்புத்தூர் வ.உ.சி பூங்கா, திருநெல்வேலி, பெரம்பலூர், தஞ்சாவூர் என மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகின்றன.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசாக மழைபெய்துவரும் நிலையிலும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வேலூர் மாவட்டம் மேல்மனவூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
வியாழக்கிழமை மதியம் முதல் வைகை நதி பாலத்தின் மீது நின்றுவரும் கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போதும் போராட்டக்காரர்களால் அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகமெங்கும் தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்
Image captionதமிழகமெங்கும் தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்

அலங்காநல்லூரில் இன்று போராட்டக்காரர்கள் மௌனப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திரண்ட இளைஞர்கள் கூட்டம்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்ற முடிவுசெய்திருக்கும் நிலையில், இந்தச் சட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் உடனடியாக வழங்கியுள்ளன.
இந்த அவசரச் சட்டம் மாநில அமைச்சரவையினால் இன்று நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுனரின் ஒப்புதலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாநில பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ், மும்பையிலிருந்து இன்று மாலை சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக நேற்று ரயில் மறியல் போராட்டத்தை நடத்திய தி.மு.க. இன்று சென்னையில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகிறது.
Disqus Comments