இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்திற்கு அருகில் சற்றுமுன் 8.9 ரிச்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இதனால் இந்துசமுத்திர நாடுகள் பலவற்றில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.இப்பூகம்பத்தினால் இலங்கையின் கிழக்கு. மேற்கு, தெற்கு பிரதேசங்களிலும் கட்டிடங்களின் நடுக்கத்தை உணர முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆச்சே மாநில தலைநகர் பண்டா ஆச்சேவிலிருந்து 495 கிலோமீற்றர் தூரத்தில் கடலின் அடியில் 33 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடம்பெற்று சற்று நேரத்தில் இலங்கையில் பலவகையான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அவையாவன
- இலங்கையின் கரையோரப்பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ள அதேவேளை, கரையோரப்பகுதிகளுக்கான ரயில் சேவையும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் கூறியுள்ளது.
- பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு கரையோரப்பகுதிகளுக்கான தனியார் பஸ் சேவைகளும் 3 மணித்தியாலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.
- இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்றையதினம் வாகனங்கள் இலவசமாக பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
- கரையோர பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
- உல்லாச பிரயாணிகளின் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கரையோர பிரதேசங்களிலுள்ள குறிப்பாக தெற்கு, கிழக்கு, மேல் மாகாணங்களிலுள்ள உல்லாச ஹோட்டல்களை இலங்கை சுற்றுலா திணைக்களம் கோரியுள்ளது.