Thursday, June 19, 2014

உயிரே, உனக்கு விலை இல்லையா?c

றைவனின் படைப்பில் மிகவும் புனிதமானது மனிதனின் உயிர். உலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொரு உயிரும் தனது படைப்பின் நோக்கம் அறிந்து, தான் சார்ந்துள்ள சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் வாழ்ந்து சரித்திரம் படைக்க வேண்டும்.
உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிருக்கும் மரணமென்ற இன்னொரு முடிவும் தவிர்க்க முடியாததே!

மரணமென்ற அந்த முடிவும் படைத்தவனின் நாட்டப்படி இயற்கையாக நடக்க வேண்டும்.

ஒரு காலத்தில் 70வயதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனாலே, துக்கம் விசாரிக்க வருபவர்கள் "என்னாச்சு? நல்லாதானே இருந்தார்?" என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு இறந்தவரின் இழப்பை நினைத்து வேதனைப்படுவர்.

ஆனால் இன்றோ....இரண்டு வயதிலிருந்து 50வயது வரை ஒருவர் வாழ்வதென்பதே கேள்விக்குறியாகி விட்டது.

காலையில் கண் விழித்து அன்றைய தினசரி நாளிதழிலிருந்து தொலைக்காட்சி மீடியா வரை செய்திகளை உற்று நோக்கினால்..வாகன விபத்தில் உயிர் இழந்தவர்கள், கை, கால்களை இழந்தவர்கள் என்ற பட்டியலே நீளமாய் பதிவிடப்படுகிறது.

வாகனங்களின் எண்ணிக்கை பெருக்கத்திற்கு ஏற்ப மனித உயிர் இழப்பின் எண்ணிக்கையும் பெருகி வருவது வேதனையைத் தருகிறது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் மட்டும் சாலை விபத்துகளில் 5,078 பேர் இறந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டுமே 366 பேர் இறந்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த (03.06.14) செவ்வாய்கிழமை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே உயிரிழந்தார். அவர் சீட்பெல்ட் அணிந்திருந்தால், உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது.

சாலை விபத்துகளுக்கு 60 சதவீதம் ஓட்டுநர்களின் கவனக்குறைவும், 30 சதவீதம் மிதமிஞ்சிய வேகமும்தான் காரணம். 10 சதவீதம் மட்டுமே இதர காரணங்களாக உள்ளன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

வாகன பயணம் என்பது மனித குலத்தின் அவசிய தேவையாகி விட்ட இன்றைய காலத்தில், அத்தகைய பயணங்கள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமென்பது மிகவும் முக்கியமானதாகும்!

மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுவது, மிதமிஞ்சிய வேகத்தில் ஓட்டுவது, சாலை விதிமுறைகளை மீறுவது, சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, செல்போனில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களே அதிகமான உயிரிழப்புகளை உண்டாக்குவதாக போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர்.

மிக மோசமான விபத்தை நேரில் காண்பவர்கள் கூட தங்களது வாகன பயணத்தில் விதிமுறையைப் பின்பற்றுவதில்லை.

ஒரு சில நிமிட துளிகளின் கவனக்குறைவால் விலை மதிக்க முடியாத உயிரை இழப்பது நியாயமா?

வாகன விபத்தில் ஒரு உயிர் பலியாகி பல உயிர்களுக்கு வலியை ஏற்படுத்தி விடுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டாமா?

எவ்வளவு எடுத்து சொல்லியும் கவனத்தில் கொள்ளாத உயிரே, உன் விலை என்ன?

சமூக கவலையுடன்
கீழை ஜஹாங்கீர் அரூஸி
தம்மாம்.
Disqus Comments