Thursday, August 28, 2014

ஏழு வயது முதல் பாலியல் கல்வி அவசியம்; பிரித்தானியாவில் கோரிக்கை

பிரித்தானிய பாடசாலைகளில் உறவு முறைகள் மற்றும் பாலியல் கல்வியை ஏழு வயது முதலேயே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டுமென,  பிரித்தானிய ஆளும் கூட்டணி லிபரல் டெமோக்ரஸி கட்சி கோரியுள்ளது.

வயதுக்கு ஏற்ப மாணவர்களின் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றும் பணத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும் குடிமக்களுக்கு உரிய கடமை குறித்தும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

இந்த யோசனைகளை தாம் ஆதரிப்பதாக பிரதான எதிர்கட்சியான தொழிற் கட்சி கூறியுள்ளது. மாணவர்களுக்கு எத்தகைய விடயங்களை சொல்லித் தரவேண்டும் என்பதை ஆசிரியர்களே முடிவெடுக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி கூறியுள்ளது.

லிபரல் டெமோக்ரஸி தேர்தல் திட்டத்தின்படி, 7 முதல் 11 வயது வரையிலான பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் வளர்ச்சி நிலையை கருத்திற் கொண்டு அவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் உறவுமுறைகள் குறித்து கற்றுத் தரலாம் என்று லிபரல் டெமோக்ரஸி கட்சியைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மேவிட் லாஸ் கூறியுள்ளார்.

தற்போது உள்ளூராட்சியின் நிர்வாக அமைப்புக்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகளில் பாலியல் கல்வி கற்றுத்தரப்படுகிறது, ஆனால் பிரித்தானிய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகளிலும் தனியார் பாடசாலைகளிலும் பாலியல் கல்வி கற்பிக்கப்படுவதில்லை.

பாலியல் கல்வி ஆறாம் தரம் வரையிலான தொடக்கப் பாடசாலைகளில் கற்பிக்கப்படாவிட்டாலும், ஏழாம் தரம் முதல் கற்பிக்கும் உயர்தர பாடசாலைகளில் பாலியல் கல்வி கட்டாயம் கற்பிக்கப்படுவதாக கல்வித்துறை சார் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Disqus Comments