திருவாரூர்: தமிழகத்தில் மீண்டும் மத விவகாரங்கள் பரபரப்பு கிளப்பத் துவங்கியுள்ளன. ஒரு கோடி ரூபாய் வாங்க வேண்டுமா? என பெரிய எழுத்துக்களில் தமிழகம் முழுவதும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு ஒட்டிய போஸ்டர் திருவாரூரில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஓடி வருக! கோடி பெருக ! எனும் வரிகளில் துவங்கும் இந்த போஸ்டரில், இயல்பாக செய்ய முடியாத, அறி வியலால் கூட சாத்தியமில்லாத சில செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அற்புதம் மூலம் குருடரை பார்க்க வைத்தால், ஊமையை பேச வைத்தால், முடவரை நடக்க வைத்தால், இறந்தவருக்கு உயிர்கொடுத்தால் இதனை நிகழ்த்தி காட்டுகின்றவர்களுக்கு ஒரு கோடி ருபாய் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
போஸ்டரை கடந்து செல்பவர்கள் இந்த போஸ்டரை கண்ணுற்று ஆச்சர்யமாவதுடன் அருகில் வந்து சிறிய எழுத்தில் “கண்டிஷன் அப்ளை“ ன்னு இருக்கிறதா ? என உற்றுப் பார்ககின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலர் அப்துல் ரகுமானிடம் பேசினோம். “ மூட நம்பிக்கை, வரதட்சணை போன்றவைகளை தடுத்து நிறுத்த நாங்கள் முன்னிற்கிறோம். ஏற்கனவே பில்லி சூனியம் வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு 5௦ லட்சம் பரிசுதொகை அறிவித்திருந்தோம். அதற்கு முன் வந்தவர்களிடம் எங்கள் அனைத்து உடைமைகளையும் (முடி, ஆடை) போன்றவை தந்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நாற்பத்து எட்டு நாளில் தற்கொலை செய்து கொள்வார் என்று கூறி சபதம் செய்தார் ஒருவர். ஆனால் நாற்பத்து எட்டு நாட்களுக்கு பின்னும் தற்கொலை செய்ய வேண்டியவர் கம்பீரமாக நடமாடிக்கொண்டு தான் இருக்கிறார்.
எங்களின் இந்த முயற்சியின் நோக்கம் தவறான பிரச்சாரங்களால் யாரும் மக்களை முட்டாளாக்கக் கூடாது என்பதுதான். அப்படி யார் செய்தாலும், அதை பார்த்துக் கொண்டிருக்க இயலாது. கடவுளின் பெயரால் யாரும் ஏமாற்றவும் கூடாது, யாரும் ஏமாறவும் கூடாது. இது எந்த குறிப்பிட்ட மதத்தினரை குறிப்பிட்டு அல்ல. இந்த சலுகையை இந்து, இஸ்லாம், கிறித்துவம் என எந்த மதத்தைச் சேர்ந்தவரும் பயன்படுத்தி நாங்கள் சொல்லுகின்ற அற்புதத்தை நிகழ்த்தி ஒரு கோடி ருபாய் பரிசு தொகையை பெற்று கொள்ளலாம்“ என்றார்.
சாமானிய மக்கள் அதை சாதாரணமாக கடந்து சென்றாலும் அது எந்த வித பிரச்னையை கிளப்புமோ என மாவட்ட நிர்வாகம் கையை பிசைந்துகொண்டிருக்கிறது இந்த போஸ்டரால்.
அற்புதம் நடக்கிறதோ இல்லையோ விவகாரமாகாமல் இருந்தால் சரி.
- த. க. தமிழ் பாரதன்
(மாணவ பத்திரிகையாளர்)
.jpg)