Sunday, February 8, 2015

புத்தளத்தில் வாழும் யாழ், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற வேண்டுகோள்.

வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் யாழ், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை புதிய அரசின் நூறு நாள் துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக நிறைவேற்றித் தருமாறு அம்மக்களை பிரதிநித்துவப்படுத்தும் புத்தளம தில்லையடியில் இயங்கும் சமூக முன்னேற்ற அமைப்பினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  புத்தளத்தில் வாழும் யாழ், கிளிநொச்சி மாவட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகளான சமுர்த்தி நிவாரண முத்திரை, வீடமைப்பு, பாதை அபிவிருத்தி, மின்சார வசதிகள் போன்ற வற்றை நிறைவேற்றிக் கொள்ள சம்பந்தப்பட்ட அமைச்சுக்களைச் சந்தித்து இவை தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக அமைப்பின் தலைவர் என். எம். எம். முயீன் தெரிவித்தார்.

புத்தளத்தில் யாழ், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் பல்வேறு தேவைப்பாடுகள் உள்ளன. குடிநீர் வழங்கள், மின்சார வசதிகளை ஏற்படுத்துதல், வீதிகளை கொங்கிறீட், தார் பாதைகளாகப் புனரமைப்புச் செய்தல், சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளல் உட்பட உட்பட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ளல்,இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளல்  போன்ற விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதென நடைபெற்ற அமைப்பின் கூட்டத்தின் போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அதன் தலைவர் முயீன் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது புத்தளம் மாவட்ட அரசியல் தலைமைகளோடு இணைந்து செயற்பட்டு சமூக ஐக்கியத்தையும், அபிவிருத்திகளையும், அரசியல் பிரதிநிதித்துவத்தினையும் உறுதி செய்து கொள்வது என்ற தீர்மானமும் இதன் போது எடுக்கப்பட்டதோடு நடைபெற்ற ஜனாதிதித் தேர்தலின் போது பொது எதிரணி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதிக்கு புத்தளத்தில் வாழும் யாழ், கிநிநொச்சி மாவட்ட மக்களின் 90 சதவீதமான வாக்குகளை வழங்கி நல்லாட்சியும், புதிய அரசியல் கலாசாரமும் ஏற்பட பங்களிப்புச் செய்தமைக்காக அம்மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதெனவும் இதன் போது முடிவு செய்யப்பட்டதாக அதன் தலைவர் முயீன் மேலும் தெரிவித்தார்.
Disqus Comments