ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிரிசேன வெற்றிபெற வேண்டும் என தாம் வைத்த அபூர்வ வேண்டுதலை ஆனமடு நாகவில பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் நிறைவேற்றியுள்ளார். அப்பிரதேசத்தைச் சேர்ந்த சனத் குமார எனும் இவ்விளைஞரே நேற்று முன்தினம் மாலை இவ்வாறு தனது நேர்ச்சையை நிறைவேற்றியவராவார்.
தேர்தலுக்கு முன்னர் ஆனமடு சேருகலே எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள ஐயநார் தேவாலயத்திற்குச் சென்ற குறித்த இளைஞர் நடைபெறும் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிரிசேன வெற்றி பெற்றால் தான் வீதியில் மூன்று கிலோ மீற்றர் தூரம் வயிற்றால் இழுவிச் சென்று தனது நேர்ச்சையினை நிறைவேற்றுவதாக அவர் வேண்டிக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை ஐந்து மணியளவில் இவர் ஆனமடு சிலாபம் பிரதான வீதியில் நாகவில பிரதேசத்திற்கு வந்து அங்கு முதலில் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டார். பின்னர் வீதியில் தேங்காய் உடைத்து தனது நேர்ச்சையினை நிறைவேற்ற ஆரம்பித்தார்.
மாலை ஐந்து மணிக்கு தனது நேர்ச்சையினை நிறைவேற்ற ஆரம்பித்த அவர் இரவு 8.30 மணியளவில் வீதியில் வயிற்றால் இழுவிச் சென்று சேருகலே ஐயநார் தேவாலயத்தினையடைந்துள்ளார்.
இவரின் இந்த வேண்டுதலை நிறைவேற்றும் செயற்பாட்டின் போது அப்பிரதேசத்தைச் சேர்ந்த பலர் அங்கு கூடி அவருக்கு உற்சாகமளித்ததைக் காணக் கூடியதாக இருந்தது. அத்துடன் இந்த வினோதமான வேண்டுதல் நிறைவேற்றப்படுவதை வீதியோரங்களில் கூடி நின்ற மக்கள் பார்த்து நின்றனர்.



