புதிய அரசின் செயற்பாடுகளானது சர்வதேச மற்றும் உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு போஷனை அளிக்கும் வகையில் காணப்படுவதாக குற்றம் சுமத்தும் பொது பலசேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இத்தருணத்தில் எமது நாட்டின் அனைத்து மக்களும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த தயராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைக்கு எமது நாட்டை கொண்டு போகவா எமது இராணுவ வீரர்கள் உயிர் நீத்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது நாட்டில் மலர்ந்திருக்கும் புதிய அரசின் தொடர்ச்சியான கடந்த கால செயற்பாடுகளானது சர்வதேச ரீதியில் செயற்படும் பயங்கரவாத சக்திகளுக்கும் உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மன ரீதியாக தம்மை தயார்படுத்தி கொள்ளவும் தடையின்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஒரு சூழ்நிலை புதிய அரசினால் தோற்றம் பெற்றுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இன்று சர்வதேச ரீதியாக தொழிற்படும் தலிபான் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்பினது் செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதை அனைத்து மக்களும் உணரக் கூடியதாக உள்ளது. இது தொடர்பில் எமது அமைப்பினர் எமது நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் முகமாக கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்க கூறிய போது எம் மீது குறிப்பிட்ட சில தரப்பினர் நாட்டின் மத பிரிவினை வாதத்தை தூண்டுவதாகவும் மக்களிடையே ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும் பல்வேறு வகையில் சேறுபூசினர்.
கடந்த காலங்களில் பேருவளை அளுத்கமவில் அரங்கேற்றப்பட்ட வன்முறைகளுக்கு பொதுபல சேனா அமைப்பினரே காரணம் என பல்வேறு தரப்பினராலும் இதுவரை சேறுப்பூசப்பட்டு வருகின்றமையானது அர்த்தமற்றது.
நாம் புதிய அரசுக்கு கூறிக்கொள்வது என்னவென்றால் எம்மீது ஆதாரம் அற்ற குற்றங்களை பரப்பி சேறுப்பூசுவதை தவிர்த்து கடந்த இரண்டு வருட காலங்களில் பேருவளை வன்முறை சம்பவம் உட்பட முஸ்லிம் பள்ளிவாசல் விவகாரம் போன்றவை தொடர்பின் விசாரணைகளை நடத்துமாறு கோருகின்றோம். அதற்கு நாம் எமது முழு ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராக உள்ளோம். வெறுமனே ஆதாரங்கள் அற்ற குற்றங்களை சுமத்துவதா புதிய அரசின் நல்லாட்சி?
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த தயாராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளமை தொடர்பில் நாம் கடந்த காலங்களில் அறியப்பெற்றிருந்தோம் இவ்வாறான நிலைக்கு எமது நாட்டை கொண்டு போகவா எமது இராணுவ வீரர்கள் உயிர் நீத்தார்கள்? எனவே மக்கள் மனதில் எழுந்திருக்கும் குழப்பநிலையை போக்க புதிய அரசானது பொதுதேர்தலை நடத்துவது சிறந்தது என தெரிவித்தார்.
