Thursday, February 12, 2015

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : ஆரம்ப விழா இன்று

11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆரம்ப விழா அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளில் இன்று கோலாகலமாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 14 அணிகள் பங்கேற்கும் 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்  நாளை மறுதினம் சனிக்கிழமை 14 ஆம் திகதி தொடங்குகிறது.  மார்ச் 29 ஆம் திகதி வரை இடம்பெறும்  இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கவுள்ளன.
உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாக இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் தொடக்க விழா இன்று இரண்டு நகரங்களிலும் கோலாகலமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதன.
இதில் கிரிக்கெட் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கண்கவர் நிகழ்ச்சிகள், கிரிக்கெட் பிரபலங்களின் பேச்சு, இசைமழை, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெறவுள்ளன.
ஆரம்பவிழா  ஒருநாள் முன்னதாக இன்று அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலும், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரிலும்  இலங்கைநேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகிறது.
மெல்போர்னின் ‘சிட்னி மையர் மியூசிக் பவுல்’ என்ற திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் விழாவில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள், முன்னாள் ஜாம்பவான்கள் கலந்து கொள்கின்றனர்.
முதலில் வீரர்கள் அணிவகுப்பு அடுத்து தொடக்க விழா உரையை தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். 

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பொப் பாடகிகளான ஜெசிகா மௌபோய், டினா அரினா உள்ளிட்டோருடன் சிம்பொனி இசைக் கலைஞர் சோங் லிம்மும்  கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
நியூசிலாந்தில் நடக்கும் விழாவில் உள்ளூர் அணிகள் மற்றும் முன்னாள் ஜாம்பவான்களான ரிச்சர்ட் ஹாட்லீ, ஸ்டீபன் பிளமிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
முதலில் வரவேற்பு நிகழ்ச்சி, அடுத்து பூகம்பத்தில் இருந்து கிறைஸ்ட்சர்ச் நகரம் மீண்டெழுந்தது குறித்து காண்பிக்கப்படுகிறது.

நியூசிலாந்து பாடகி கினி பிளாக்மோர், ‘சோல் 3 மியோ’ குழுவினரின் இசை நிகழ்ச்சி அரங்கேறுகிறது. இறுதியில் கிறைஸ்ட்சர்ச் நகரம் இதுவரை கண்டிராத வகையில், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. 
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது . போட்டி ஆரம்பமாக இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில், 8,25,000 டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவிட்டன. 
இந்நிலையில் சனிக்கிழமை இடம்பெறும்  இரு போட்டிகளில்  ஒரு போட்டியான நியூசிலாந்து, இலங்கை ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. இதேபோல், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்குரிய  டிக்கெட்டுகள்,  கடந்த ஆண்டு விற்பனை தொடங்கிய 20 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments