-பாரூக் தாஜூதீன், லக்மால் சூரியகொட
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவியான ஷசி வீரவங்சவை எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, நேற்று (25) உத்தரவிட்டார்.
சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துவரப்பட்டே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த இரகசிய பொலிஸார், ஷசி வீரவங்சவின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் ஆராய அனுமதிக்குமாறு 19 வங்கிகளின் முகாமையாளர்களுக்கு உத்தரவிடுமாறு நீதவானிடம் கோரிநின்றனர்.
அத்துடன், சந்தேகநபரின் இரு கடவுச் சீட்டுக்களும் அடையாள அட்டைகளும் இன்னமும் அவரிடமே இருப்பதால் அவற்றை நீதிமன்றம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் கோரினர்.
வாதங்களை கருத்திற்கொண்ட நீதவான், ஷசி வீரவங்சவின் விளக்கமறியலை நீடிக்க உத்தரவிட்டதுடன் அவருக்கு போலி தேசிய அடையாள அட்டைகள் இரண்டைப் பெற்றுக்கொள்வதற்கும் போலி கடவுச்சீட்டுக்கள் இரண்டைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவிய நபர்கள், குடிவரவு குடியகழ்வு திணைக்கள மற்றும் ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் வழக்கை மார்ச் மாதம் 04ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, அவரின் இரு பிள்ளைகள் உட்பட பலர் மன்றுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -
.jpg)