Wednesday, April 22, 2015

மைத்திரியின் 100 நாட்கள் திட்டம் தோல்வியின் விளிம்பில்!!!!

அழகன் கனகராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கடைசி உறுதிமொழியும் புஷ்வானமாகிவிட்டதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், 100 நாட்கள் வேலைத்திட்டம் 2015ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி ஆரம்பமானது. அதன் 100 ஆவது நாள் நாளை வியாழக்கிழமையுடன் (23ஆம் திகதி) நிறைவடைகின்றது. 

இந்த நூறு நாட்களுக்குள் செய்து முடிப்பதாக புதிய அரசாங்கத்தினால் 24 உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. அந்த உறுதி மொழிகளில் பல நிறைவேற்றப்படாமைலேயே கிடப்பில் உள்ளன.  இந்நிலையில், புதிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளில் மிகவும் முக்கியமானதாக பேசப்பட்டது, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலமாகும். அந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனம் செய்தபோதிலும் அதனை 100 நாட்களுக்குள் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. 

பெரும்பான்மை பலமின்றியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால் அரசியலமைப்பில் மேற்கொள்ளவிருந்த 19ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் 100 நாட்களுக்குள் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போய்விட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.  இந்த சட்டமூலத்தில் சில உறுப்புரைகளை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வேண்டுமென் உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்திருந்தது. 

இந்நிலையில், 19ஆவது திருத்தத்தின் ஊடாக , ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கமுடியாது என்று எதிரணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். 19ஆவது திருத்தம் மட்டுமன்றி தேர்தல் மறுசீரமைப்பு சட்டமூலத்தையும் ஏககாலத்தில் நிறைவேற்றவேண்டும் என்று எதிரணியினர் கோரிக்கைவிடுத்தனர். இதனால், 20 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்படவிருந்த 19ஆவது திருத்த சட்டமூலம் மறுநாளான நேற்று 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

கடும் எதிர்ப்பை வெளிக்காட்டிய எதிரணியினர் நாடாளுமன்ற சம்பிரதாயங்களையும் மீறி  அவைக்குள்ளேயே விடியவிடிய படுத்திருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையால் அரசாங்கம் திக்குமுக்காடிபோனது.  இந்நிலையிலேயே, 19 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்தி 28ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

இதனால், புதிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 24ஆவது உறுதிமொழியான நாடாளுமன்றம் 23ஆம் திகதி கலைக்கப்படும் என்ற உறுதிமொழியும் புஷ்வாணமாகிவிட்டதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/144435#sthash.hQUU7FRy.dpuf
Disqus Comments