நேபாள நிலநடுகத்தில் பலியானோர் எண்ணிக்கை 3200 ஐ தாண்டியுள்ளது.
இந்தியாவையொட்டி இமயமலை பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த தேசமான நேபாளத்தை நேற்று முன்தினம் கடுமையான பூகம்பம் தாக்கியது.
தலைநகர் காட்மாண்டுவில் இருந்து வடமேற்கே 80 கிலோ மீட்டர் தொலைவி
ல் அமைந்துள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாக கொண்டு, 7.9 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் நேபாளத்தையே உலுக்கிவிட்டது.
2 கோடியே 80 லட்சம் மக்கள் வாழும் நேபாளத் தில் கடந்த 81 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய தேசிய அழிவாக இது கருதப்படுகிறது.
அங்கு மூன்றாவது நாளாக இன்றும் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 3218 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 6 ஆயிரம் காயம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்திய ராணுவமும், விமானப்படையும் மீட்பு பணியில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் மழை, மற்றும் புதிய பூமி அதிர்வுகளால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில் மின்சார விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தாய்நாடு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாலைகளில் நேற்று இரவு முழுவதையும் கழித்தனர்.