Tuesday, April 28, 2015

நேபாளம் பேரழிவு பூகம்பம்: 80 லட்சம் மக்கள் பாதிப்பு - ஐ.நா. அமைப்பு


காட்மாண்டு, நேபாளம் பேரழிவு பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.

இமயமலை நாடு என்று அழைக்கப்படுகிற நேபாளத்துக்கு கடந்த சனிக்கிழமை ஒரு கருப்பு நாளாக அமைந்து விட்டது. அழகான அந்த நாட்டை நில நடுக்கம் என்ற பெயரில் இயற்கை சீற்றம், சின்னாபின்னப்படுத்தியது. நிலநடுக்கம் நாடு முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி விட்டது. நேபாளத்தில் மட்டும் நிலநடுக்கத்தில் சிக்கி 4,310 பேர் உயிரிழந்து உள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

நில நடுக்கத்தின் தாக்கம், இந்தியாவிலும் உணரப்பட்டது. பீகார் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கின. இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் அகப்பட்டு, 70 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் இந்திய மீட்புக்குழுவினர் பூகம்பம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பூகம்பம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து நிலஅதிர்வு மற்றும் மழை காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டது. நிலஅதிர்வுகளும் நீடித்து வருவதால் மீட்பு பணிகளில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

இந்நிலையில் நேபாளம் பேரழிவு பூகம்பத்தில் 80 லட்சம்  மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது. நேபாளம் பேரழிவு பூகம்பத்தில் 8 0 லட்சம்  மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 லட்சம் மக்களுக்கு உணவு தேவை உள்ளது. என்று ஐ.நா. தெரிவித்து உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நேபாளம் நாட்டிற்கு நிவாரணப் பொருட்கள் வந்தாலும், அங்கு மின்சாரம், மருத்துவ கருவிகள், மருந்து பொருட்கள், உணவு பொருட்களின் பற்றாக்குறையும் நிலவுகிறது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கிராமப்புற பகுதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
Disqus Comments