இலங்கையில் தேசிய கீதம் சிங்கள மொழியிலே பாடப்பட வேண்டும் எனவும் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தைப் பாடுவதற்கு அனுமதியளித்துள்ளமை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனவும் தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் வெயவர சீலரத்ன தேரர் இவ் அனுமதியை வழங்கிய தேசிய நிறைவேற்றுச்சபை உறுப்பினர்களுக்கு எதிராக புத்தாண்டின் பின்பு வழக்குத் தொடரவுள்ளதாக கூறினார்.
நேற்றுக்காலை தெஹிவளை பெளத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்ட கருத்தினை வெளியிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் உலகில் எல்லா நாடுகளிலும் அந்நாட்டின் தேசிய மொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. இந்தியாவில் பல மொழிகள் பேசும் மக்கள் இருந்தாலும் அங்கு ஒரு மொழியிலே தேசிய கீதம் பாடப்படுகிறது. தமிழ் நாட்டில் 6 கோடி மக்கள் இருந்தும் அங்கு தமிழ் மொழியில் தேசியகீதம் பாடுவதற்கு உரிமை கோரப்படவில்லை.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி தேசிய கீதம் சிங்கள மொழியிலே பாடப்பட வேண்டும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டுமென்றால் அதற்கு 2/3 பெரும்பான்மை தேவை . தேசிய கீதம் சிங்கள மொழியிலே பாடப்பட வேண்டும் என்பதை சபாநாயகரைச் சந்தித்து விளக்கமளித்துள்ளோம்.
அமைச்சர் கருஜயசூரியவையும் சிங்கள ராவய அமைப்பு சந்தித்து கலந்துரையாடியுள்ளது. தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதை அனுமதிப்பதா என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்வதாக அவர் உறுதியளித்திருந்தார்.
தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டால் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் மீது குரோதம் ஏற்பட காரணமாக அமையும். இதன் மூலம் இனங்களுக்கிடையிலான உறவு பாதிக்கப்படும் எனவே சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம்.தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப்பாடுவதற்கு அனுமதி வழங்கியுள்ள தேசிய நிறைவேற்றுச் சபைக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் என்றார்.
-VK-