Saturday, February 20, 2016

டெஸ்ட் போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் அடித்து மெக்கலம் சாதனை.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்திற்கு இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், 2 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் இன்று தொடங்கியது.
நியூசிலாந்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா, பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
நியூசிலாந்தின் அணித்தலைவர் மெக்கல்லம் இந்தப் போட்டியுடன் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதால், மைதானத்தில் ரசிகர்கள் ஏராளமாய் இருந்தனர்.
நியூசிலாந்தின் ஆரம்ப வீரர் லதாம் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மற்றொரு வீரரான குப்தில் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த வில்லியம்சனும் நிக்கொலசும் 7 ஓட்டங்களுடன் வெளியேறினர்.
74 ஓட்டங்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து நியூசிலாந்து தடுமாறிய நிலையில், மெக்கல்லம் – அண்டர்சன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.
34 பந்துகளிலேயே அரை சதத்தைப் பெற்ற மெக்கல்லம், அடுத்த 20 பந்துகளில் மேலும் 50 ஓட்டங்களைக் குவிக்க, 54 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 16 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும்.
மறுபுறம் அண்டர்சன் 39 பந்துகளில் அரைச்சதம் அடித்தார். இருவரும் இணைந்து 5 ஆவது விக்கெட்டிற்கு 179 ஓட்டங்கள் குவித்தனர். 79 பந்துகளில் 145 ஓட்டங்களை (21 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்திருந்த போது மெக்கல்லம் பேட்டின்சன் பந்தில் ஆட்டம் இழந்தார்.
62 ஆவது ஓவரில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழந்து 345 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அண்டர்சன் 72 ஓட்டங்களுடன் (66 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழந்தார்.
54 பந்தில் சதம் விளாசிய மெக்கல்லம், டெஸ்ட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசியவர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன் விவியன் ரிச்சர்ட்ஸ், மிஸ்பா உல் ஹக் ஆகியோர் தலா 56 பந்துகளில் சதம் விளாசி 2வது இடத்தில் உள்ளனர்.
Disqus Comments