~ அ(z)ஸ்ஹான் ஹனீபா ~ மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் வருடந்தோறும் நடைபெற்றுவரும் ஓர் நிகழ்வே இப்புத்தகக் கண்காட்சி . இக்கண்காட்சி பல்கலைக்கழக கல்வி ஆண்டின் இரண்டாவது பருவகாலத்தில் நடைபெறுவது வழமை. இம்முறையும் இது 29/03/2016 செவ்வாய் அன்று வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
தற்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் கண்காட்சி 33வது கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது . இதில் அரபு நாடுகளில் பிரசித்த பெற்ற புத்தக சாலைகள் பங்கு கொண்டு தமது நூற்களை காட்சிப்படுத்தும் . அநேகமாக இஸ்லாமிய கற்கைகளோடு தொடர்பான நூற்கள் இக்கண்காட்சியை அலங்கரிக்கின்றன எனில் மிகையாகாது . அவ்வாறே சஊதியில் இருக்கும் அதி முக்கியம் வாய்ந்த பல்கலைக்கழங்களும் இங்கு கலந்து கொண்டு தமது பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யப்பட்ட நூற்கள் , தொகுக்கப்பட்ட இஸ்லாமிய சட்டங்கள் , தீர்மானங்கள் போன்றவை உள்ளடங்கிய புத்தகங்களையும் காட்சிக்கு உட்படுத்தும் . இவை மட்டுமல்லாது முழு உலகிற்குமான அல்குர்ஆனை அச்சுப் பிரதி செய்து அனுப்பும் சர்வதேச மன்னர் பஹ்த் எனும் அச்சகமும் இங்கு தமது சேவையை திறம்பட செய்து கொண்டிருக்கின்றது .
இங்கு புத்தகங்கள் , வழமையான விலையை விட சிறிதளவு குறைந்த விலைக்கு வாங்க முடியும் . இவ்வேற்பாட்டால் அநேகமாக மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் பிரயோசனம் பெறுவர் , ஒரே விதமான நூற்கள் இருக்கும் சந்தப்பத்தில் பல புத்தகக் கடைகளிலும் விசாரித்த பின் சிறந்த தரத்திலான தாள்களைக் கொண்ட ஒப்பீட்டளவில் விலை குறைந்த புத்தகங்களை வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும் . இக்கண்காட்சியை பார்வையிட ஏனைய பல்கலைக்கழகங்கள் , முன் பள்ளிக்கூடங்கள் , அரசு பாடசாலைகள் என்பனவற்றின் ஆசிரியர்களும் , மாணவர்களும் வந்து செல்கின்றனர் . இதனைப் பார்வையிடுவதற்கும் , புத்தகங்கள் கொள்வனவு செய்வதற்கும் தனி நபர்களுக்கு சில நாட்கள் ஒதுக்கப்பட்டிருப்பது போல் குடும்பங்கள் மாத்திரம் வந்து பார்வையிடவும் வியாழன் , வெள்ளி போன்ற நாட்கள் ஒதுக்கப்பட்டு , ஆண் பெண் கலப்பின்றி சிறந்த முறையில் புத்தகங்கள் கொள்வனவு செய்யவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .
ஏறத்தாழ இரண்டு கிழமைகள் நடைபெறும் இக்கண்காட்சி , சில தருணங்களில் கால அவகாசம் நீடிக்கப்படுவதும் உண்டு , முழு வசதிகளுடனும் பிரமாண்டமாக கண்காட்சி அரங்கேறுவதோடு இங்கு காண வரும் அனைவருக்குமான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன . தாகத்தைத் தீர்ப்பதற்குக் கூட ஸம்ஸம் நீர் வைக்கப்பட்டுள்ளமை சிறந்த கவனிப்பை சான்று பகர்கின்றது . சஊதியில் வருடந்தோறும் தொடராக நடைபெறும் கண்காட்சி என்றால் இப்புத்தகக் கண்காட்சி என்பது எல்லோரும் அறிந்ததோர் விடயம் .
எனவே நாமும் இவ்வாறான
சிறந்த சந்தர்ப்பத்தைத் தவற விடாது , கருத்தாளமிக்க பிரயோசனம் தரும் நூற்களை கொள்வனவு செய்து பயனடைவோம் .
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுசைனியா புரம் - பாலாவி



