1.1 மனித உரிமை
இயல்பான சுதந்திரத்தோடு வாழவும், தான் இசைந்து வாழும் சமுதாயத்திற்கான கடமைகளை முழுமையாகச் செய்ய மனிதன் முற்படும் வேளைகளில் விளையும் உரிமைகள் மறுக்கப்படும் போதோ, அல்லது அளிக்கப்பட்டு வந்த உரிமைகள் தடை செய்யப்பட்டாலோ மனித சமுதாயம் அப்படிப்பட்ட நிலைமைகளில் பொறுத்துக் கொள்வதில்லை. இதனால் தனது சமுதாயத்தின் மேல் கேள்விகளைத் தொடுத்தான். அத்தகைய உரிமைகள் மனித உரிமை எனப்படும்.
சிறுவர்கள் மனிதப் பிறவிகள் என்ற வகையில், மனித உரிமைகள் அனைத்தும் சிறுவர்களுக்கும் உரித்தானதாகும். சிறுவர் உரிமைகளிலிருந்தே மனித உரிமைகள் தோற்றம் பெற்றள்ளன. சிறுவர் உரிமைகள் என்றால் சிறுவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு அவசியமான நிபந்தனைகளே சிறுவர் உரிமைகளாகும். அதாவது சமூகத்தில் சிறுவர்களுக்கு உரித்தாக வேண்டிய வரப்பிரசாதங்கள் சிறுவர் உரிமைகளாகும். பிரத்தியேகமான முறையில் சிறுவர்களுக்கேயுரியவை என்று சர்வதேச ரீதியாக ஜக்கிய நாடுகள் தாபனத்தால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் சிறுவர் உரிமைகளாகும்.
உலகில் வாழ்கின்ற மக்களில் 1/3 பகுதியினர் சிறுவர்களாகக் காணப்படுகின்றனர். உலகலாவிய ரீதியில் நோக்கின், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள், உரிமை மீறல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. சிறுவர்களுக்கு எதிராக துஷ்பிரயோகங்கள், பாலியல் வன்புணர்ச்சி, சிறுவர் தொழிலும் வேலைப்பளுவும், சிறுவர்களை ஆயுதப் போராட்டங்களில் இணைத்துக் கொள்ளுதல், கடத்துதல் மோசடிகள், உள ரீதியான பாதிபுள்ளாக்குதல் என பல்வேறு வடிவங்களில் மிகக் கொடூரமான சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன. இத்தகைய நிலைமையில் இரண்டாம் உலகப் போரின் பின்னணியுடன் தோன்றிய ஜக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது.
சிறுவர்கள் தொடர்பாக ஜக்கிய நாடு சபையினால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களில் 1989 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனம் ஓக்டோபர் முதலாம்திகதியை பிரகடனப்படுத்தியுள்ளமை, யூன் மாதம் 12ஆம் திகதியை சிறுவர் தொழிலாளர்களுக்கெதிரான தினமாக பிரகடனப்படுத்தியுள்ளமையும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஜ.நா சபை செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாக எழுத்துருவில் பல்வேறு பிரகடனங்களும் சட்டங்களும், காப்பீடுகளும் ஆவணப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அன்றாடம் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களின் போக்கு அதிகரித்து வருகின்றன.
உலகின் எல்லாப்பாகங்களிலும் இருபது கோடிக்கு (200 மில்லியன்) அதிகமான சிறுவர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் பலர் முழுநாள் உழைப்பிலும் ஈடுப்பட்டிருப்பது அறியவந்துள்ளது. இதனால் அவர்களுக்கு போதுமான கல்வி கற்பதற்கான சந்தர்ப்பம், உடல்நலம், அடிப்படை சுதந்திரம் ஆகியவை இழக்க நேரிட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்தளவில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அரச கூட்டமைப்பில் பல்வேறு காப்பீடுகள் காணப்படுகின்ற அதேவேளை தேசிய சர்வதேச சிவில் அமைப்புக்களும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களாக கொலைச் சம்பவங்கள், கடத்தல்கள், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல், பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், பிள்ளைத் தாய் பிரச்சினை போன்றவை அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகின்றது. மலையகப் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த சிறுவர்களும் கடந்த காலங்களில் தொழிலுக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. நகர்ப்புறங்களில் வாழும் செல்வந்தர்களின் பிள்ளைகள் தனிப்பட்ட குரோதங்களுக்காகவும், பணத்திற்காகவும் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.
1.3 சிறுவர் உறுப்புரைகள்
ஜக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் 1989 ஆம் ஆண்டில் ஜக்கிய நாடுகள் பொதுச்சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை இலங்கை அரசானது 1991 ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியது. இந்தச் சமவாயம் சிறுவர்கள் சிறப்பான மதிப்புக்குரியவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டு அவர்கள் பெறவேண்டிய பாதுகாப்பு ஆகியவற்றை வரை முறைப்படுத்துகின்றது. இச்சமவாயத்தில் 54 உறுப்புரைகள் காணப்படுகின்றன. இதில் முக்கியமான 42 உறுப்புரைகளின் சாராம்சம் பின்வருமாறு.
18 வயதுக்குட்பட்ட ஒவ்வொருவரும் சிறுவர், சிறுமியர் ஆகக் கணிக்கப்படுவர். அவர் இந்த சமவாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா உரிமைகளையும் அனுபவித்தல் வேண்டும்.
உறுப்புரை 02:- பாகுபாடு காட்டாமை
எல்லா உரிமைகளும் வயது, பால், ஆற்றல், நிறம், இனம், மொழி அல்லது சமயம் என்பன எவ்வாறிருப்பினும் எல்லாச் சிறுவர் சிறுமியருக்கும் உரியன. சிறுவர்களை எல்லா வகையான பாகுபாடுகளிலிருந்து காப்பதும் அவர்களின் உரிமைகளைப் பரப்ப ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையாகும்.
சிறுவர் தொடர்பான சகல நடவடிக்கைகளும் முடிவுகளும் அவர்களின் உயரிய நலன்களை உயரிய நலன்களை முழுமையாக கருத்தில் கொள்ள வேண்டும்.
உறுப்புரை 04:- சமவாயத்தை நடைமுறைப்படுத்துதல்
சமவாயத்தில் அடங்கியுள்ள உரிமைகளை நிதர்சனமாக்குவதற்கு அரசாங்கம் தன்னாலான அனைத்தையும் செய்தல் வேண்டும்.
உறுப்புரை 05:- பெற்றோரின் வழிநடத்துதலும் குழந்தையின் வளர்ச்சியும்
குழந்தைக்கு அதன் பரினாம வளர்ச்சிக்கு இசைவான முறையில் வழிகாட்டும் பொறுப்பு பெற்றோருக்கும், குடும்பவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் உண்டென்பதை அரசாங்கம் மதித்தல் வேண்டும்.
உறுப்புரை 06:- உய்வும் மேம்பாடும்
ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர்வாழும் உரிமை பிறப்போடு கூடியதொன் றென்பதை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் உய்வையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்தும் கடப்பாடு அரசாங்கத்தினுடையதாகும்.
உறுப்புரை 07:- பெயரும் நாட்டினமும்
ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்ததும் ஒரு பெயரைப் பெறும் உரிமையுடையதாகும். அத்துடன் ஒரு நாட்டினத்தைச் சார்வதற்கும் தன் பெற்றோர் இன்னாரென்று அறிவதற்கும் அவர்களாற் பராமரிக்கப்படுவதற்கும் அது உரிமையுடையதாகும்.
உறுப்புரை 08:- தனித்துவத்தைப் பேணல்
குழந்தையின் தனித்துவ அடையாளத்தைப் பேணுவதும், அவசியம் ஏற்பட்டால் அதன் அடிப்படை அம்சங்களை மீள நிலைநாட்டுவதும், அரசின் கடமையாகும். இதில் குழந்தையின் பெயர், இனம், குடும்பபந்தங்கள் என்பன அடங்கும்.
உறுப்புரை 09:- பெற்றோரைப் பிரிதல்
(இம்சை, புறக்கணிப்பு முதலியன காரணமாக) குழந்தையின் நலனுக்கு அவசியம் என்று கருதப்பட்டாலன்றி, மற்றும்படி தன் பெற்றோருடன் வாழும் உரிமை குழந்தைக்கு உண்டு. தாய் அல்லது தந்தையரிடமிருந்து பிரிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் இவருடனும் உறவைப் பேணும் உரிமை பிள்ளைக்கு உண்டு.
உறுப்புரை 10:- குடும்பம் மீளச்சேருதல்
குடும்பத்தவர்களுடைய மீண்டும் சேர்ந்துகொள்ள பொருட்டோ, பெற்றோர் பிள்ளை உறவைப் பேணும் பொருட்டோ, வேறு ஒரு நாட்டை விட்டு வெளியேறித் தமது நாட்டினுள் நுழையும் உரிமை பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் உண்டு.
உறுப்புரை 11:- சட்டவிரோத இடமாற்றமும் மீளாமையும்
பொற்றோரோ மூன்றாம் தரப்பினரோ சிறுவர்களைக் கடத்துதலை அல்லது மறித்து வைத்தலைத் தடுப்பதும் நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையாகும்.
உறுப்புரை 12:- சிறுவரின் கருத்து
தனது கருத்தைத் தெரிவிக்கும் சுதந்திரம் பிள்ளைக்கு உண்டு. பிள்ளையைப் பாதிக்கும் எந்த விடயத்திலும் அதன் கருத்தைக் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
உறுப்புரை 13:- கருத்துச் சுதந்திரம்
பிறரின் உரிமைகளை மீறினாலன்றி மற்றும்படி தனது எண்ணங்களைத் தங்கு தடையின்றி வெளியிடவும் தகவல்கள் பெறவும், தன்கருத்தை அல்லது தகவலைத் தெரியப்படுத்தவும் ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிமை உண்டு.
உறுப்புரை 14:- சிந்தனை, மனசாட்சி, மதச் சுதந்திரம்
பெற்றோரின் முறையான வழி நடத்தலுக்கும் தேசிய சட்டத்துக்கும் அமைய, சிந்தனைச் சுதந்திரம், மனச் சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிமை உண்டு.
உறுப்புரை 15:- கூடும் சுதந்திரம்
பிறரின் உரிமைகளை மீறினாலன்றி மற்றும்படி பிறருடன் சேர்வதற்கும் சங்கங்கள் அமைத்தல், அல்லது அவற்றில் அங்கம் பெறுவதற்கும் சிறுவருக்கு உரிமை சிறுவர்களுக்கு உண்டு.
உறுப்புரை 16:- அந்தரங்கத்தைக் காத்தல்
பிள்ளைகளுக்குத் தங்களது அந்தரங்கத்தைப் பேணும் உரிமை உண்டு. தமது அந்தரங்கம், குடும்பம், வீடு, கடிதத்தொடர்பு ஆகியவற்றில் பிறர் தலையிடாதிருக்கும் உரிமை சிறுவர்களுக்கு உண்டு.
உறுப்புரை 17:- தகுந்த தகவல்கள் கிடைக்க வழி செய்தல்
வெகுசன ஊடகங்களின் முக்கியத்தை அரசாங்கம் அங்கீகரித்தல் வேண்டும். அத்துடன் பிள்ளை உள்ளுர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு தகவல்களையும் தகவற் சாதனங்களையும் குறிப்பாக அதன் சேமநலனை மேம்படுத்தும் சாதனங்களையும் பெறுவதற்கான வாய்ப்புகளையும் அளித்தல் வேண்டும். இதுவிடயத்தில் பிள்ளையின் கலாசாரப் பின்னணிக்கு மதிப்பளித்தல் வேண்டும்.
உறுப்புரை 18:- பெற்றோர் பொறுப்பு
பிள்ளையை வளர்க்கும் முக்கியத்தை அரசாங்கம் அங்கீகரித்தல் வேண்டும். அத்துடன் பிள்ளை உள்ளுர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு தகவல்களையும் தகவற் சாதனங்களையும் பெறுவதற்கான வாய்ப்புக்களையும் அளித்தல் வேண்டும். இதுவிடயத்தில் அவர்களுக்கு ஆதரவு அளித்தல் வேண்டும். பிள்ளைகளை வளர்ப்பதில் அரசாங்கம் பெற்றோருக்குத் தகுந்த உதவி வழங்குதல வேண்டும்.
உறுப்புரை 19:- இம்மை, புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு
சகல வகையான இம்மைகள் புறக்கணிப்பிலிருந்தும் பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. பிள்ளைகளைத் துன்புறுத்த பெற்றோருக்கோ பிற பராமரிப்பாளர்களுக்கோ உரிமை இல்லை. இது தொடர்பான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு அரசினுடையதாகும்.
உறுப்புரை 20:- குடும்பச் சூழலற்று வாழும் பிள்ளை விசேட பாதுகாப்புப் பெறும் உரிமை
அவ்வாறான சந்தர்ப்பங்களில் தகுந்த மாற்றுக் குடும்பப் பராமரிப்பினை அளிப்பதும் அல்லது பராமரிப்பு நிலையமொன்றில் இடம் தேடிக் கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும். இந்தக் கடமையை நிறைவேற்ற முயலும் போது பிள்ளையின் கலாசாரப் பின்னணியைக் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
உறுப்புரை 21:- சுவீகாரம்
பிள்ளையின் நலனை முன்னிட்டே அது மேற்கொள்ளப்படல் வேண்டும். அப்போது கூட, சட்டத்துக்கு அமைவாக அது நிறைவேற்றப்படல் வேண்டும்.
உறுப்புரை 22:- அகதிச் சிறுவர்கள்
ஒரு சிறுவன் அல்லது சிறுமி தன் சொந்த வீட்டிலோ நாட்டிலோ வாழ்வது பாதுகாப்பற்றது என்பதால் அவ்விடத்தை விட்டு அகன்று அநாதையானால் விசேட பாதுகாப்பும் உதவியும் பெறும் உரிமை அச் சிறுவன் அல்லது சிறுமிக்கு உண்டு.
உறுப்புரை 23:- ஊனமுற்ற சிறுவர்கள்
உள மற்றும் உடல் ஊனமுற்ற பிள்ளைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கும் முடிந்த வரை சிறப்பான முறையில் தம் சொந்தக் காலில் நிற்கவும் சமுதாயத்துடன் இணைந்து கொள்ளவும் வாய்ப்புப் பெறும் பொருட்டு விசேட பராமரிப்பு, கல்வி, பயிற்சி என்பனவற்றைப் பெறும் உரிமையுடைவர்களாகவர்.
உறுப்புரை 24:- சுகாதாரமும் சுகாதார சேவைகளும்
மிக உயர்ந்த தராதரமுடைய சுகாதாரத்தையும் பராமரிப்பையும் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. ஆரம்ப மற்றும் நோய்த்தடுப்புச் சுகாதாரப் பராமரிப்பு, பொதுச் சுகாதாரப் பராமரிப்பு, பொதுச் சுகாதரக்கல்வி, சிசு மரண விகிதாசாரத்தைக் குறைத்தல் ஆகிய சேவைகளைப் பெறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளித்தல் வேண்டும்.
உறுப்புரை 25:- தாபரிப்பிடத்தை அவ்வப்போது கண்காணித்தல்
பராமரிப்பு, பாதுகாப்பு அல்லது சிகிச்சைக்கெனத் தாபரிப்பு இடமொன்றில் அரசாங்கத்தாற் கையளிக்கப்பட்ட பிள்ளை, அவ்விடத்தில் முறையாகத் தாபரிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணிக்கும் கடமை அரசாங்கத்திற்கு உண்டு.
உறுப்புரை 26:- சமூகப் பாதுகாப்பு
சகல சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் உள்ள பயன்களைப் பெறும் உரிமை பிள்ளைக்கு உண்டு.
உறுப்புரை 27:- வாழ்கைத் தரம்
ஒவ்வொரு பிள்ளையும் இசைவான வாழ்க்கைத் தரத்தைப் பெறும் உரிமை உடையதாகும். பிள்ளை தகுந்த வாழ்க்கைத் தரத்தைப் பெறுவதை உறுதிப்படுத்தும் தலையாய பொறுப்பு பெற்றோரைச் சாரும். இந்தப் பொறுப்பை நிறைவேற்ற பெற்றோரால் முடியாதபோது அவர்களுக்கு உதவுதல் அரசின் பொறுப்பாகும்.
உறுப்புரை 28:- கல்வி
கல்வி பயிலும் உரிமை எல்லாச் பிள்ளைகளுக்கும் உண்டு. அரசாங்கத்தின் கடமை, ஆரம்பக் கல்வியாவது கட்டாயமாகவும் இலவசமாகவும் கிடைப்பதை உறுதிப் படுத்துதல் ஆகும்.
உறுப்புரை 29:- கல்வியின் நோக்கம்
பிள்ளையின் ஆளுமை, திறமை, உடல் மற்றும் உள ஆற்றல்கள் ஆகியவற்றை முழுமையாக விருத்தி செய்வதே கல்வியின் நோக்கம். சுதந்திரமான சமுதாயத்தில் பொறுப்புடனும், அமையுடனும் வாழ்வதற்கும் அடிப்படை மனித உரிமைகள், தமது சொந்தக் கலாசார, தேசிய ஆசாரசீலங்களை மட்டுல்லாமல் பிறரின் விழுமியங்களையும் கனம் பண்ணுவதற்கும் கல்வி சிறுவரைத் தயார் செய்தல் வேண்டும்.
உறுப்புரை 30:- சிறுபான்மை மக்களின் பிள்ளைகள்
தமது சொந்தக் கலாசாரத்தை அனுபவிக்கவும் தமது சொந்த மதம், மொழி ஆகியவற்றைப் பயிலவும் சிறுபான்மை இனத்தவர்களின் பிள்ளைகளுக்கு உரிமை உண்டு.
உறுப்புரை 31:- ஒய்வு, பொழுதபோக்கு, கலாசார நடவடிக்கைகள்
பிள்ளைகள் ஒய்ந்திருக்கவும் விளையாட்டு, கலாசார, கலை நிகழ்ச்சிகளிற் பங்குபற்றவும் உரிமையுடையவர்களாவர்.
உறுப்புரை 32:- பால்ய ஊழியம்
ஆரோக்கியம், கல்வி அல்லது மேம்பாடு ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வேலைப் பளுவிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. தொழில் புரியும் குறைந்த பட்ச வயதெல்லையை நிர்ணயிப்பதும் வேலை நிபந்தனைகளை நெறிப்படுத்துவதும் அரசின் கடமையாகும்.
உறுப்புரை 33:- போதைப் பொருட் துர்ப்பிரயோகம்
சட்ட ஷவிரோதமான மருந்துகளையும், வேறு போதை வஸ்துகளையும் உபயோகிப்பதிலிருந்தும் அவற்றைத் தயாரித்தல் அல்லது விநியோகித்தல் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாக்கப்படும் உரிமை சிறுவருக்கு உண்டு.
உறுப்புரை 34:- பாலியல் இம்சை
விபசாரம் மற்றும் ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படல் உட்பட, பாலியல் சார்ந்த சுரண்டல் அல்லது இம்சையிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை ஒவ்ஷேவொரு பிள்ளைக்கும் உண்டு.
உறுப்புரை 35:- விற்பனை, பரிவர்த்தனை, கடத்தல்
பிள்ளைகளை விற்பனை செய்தல், பரிவர்த்தனை செய்தல் அல்லது கடத்திச் செல்லுதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுதல் வேண்டும்.
உறுப்புரை 36:- ஏனைய இம்சைகள்
பிள்ளைகளின் சேமநலன் சார்ந்த உறுப்புரைகள் 32,33,34,35 ஆகியவற்றிற் குறிப்பிடாத மற்றெல்லா இம்சைகளிலிருந்தும் அரசாங்கம் பிள்ளையைப் பாதுகாத்தல் வேண்டும்.
உறுப்புரை 37:- சித்திரவதை சுதந்திரத்தை மறுத்தல்
எந்தப் பிள்ளையும் சித்திரவதை, துன்பம், தண்டணை, சட்டவிரோதக் கைது அல்லது சுதந்திரத்தை மறுத்தல் ஆகியவற்றுக்கு ஆளாக்கப்படலாகாது. தகுந்த சிகிச்சை, தடுப்புக் காவலில் உள்ள பெரியவர்களிடமிருந்து பிரிந்திருத்தல், குடும்மத்தவர்களுடன் தொடர்பு பேணல், சட்ட மற்றும் ஏனைய உதவி பெறும் உரிமைகளாகும்.
உறுப்புரை 38:- ஆயுதப் பிணக்குகள்
போர்க் காலங்களில் பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. 15 வயதுக்குட்பட்ட எந்தப் பிள்ளையும் சண்டைகளில் நேரடியாகப் பங்குகொள்ளவோ ஆயுதப் படைகளிற் சேர்க்கப்படவோ கூடாது.
உறுப்புரை 39:- புனர்வாழ்வு, பராமரிப்பு
ஆயுதமேந்திய சண்டைகள், சித்திரவதை, புறக்கணிப்பு, துன்புறுத்தல், சுரண்டல் ஆகியவற்றுக்கு இலக்கான பிள்ளைகள் குணமடைவதற்கான சிகிச்சை பெறுவதையும் சமுதாயத்தில் மீண்டும் இணைந்து கொள்வதையும் உறுதிப்படுத்தல் அரசின் கடமையாகும்.
உறுப்புரை 40:- பால்ய நீதி பரிபாலனம்
பிள்ளைகள் குற்றம் இழைதடதவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டால் சட்ட மற்றும் ஏனைய உதவிபெறும் உரிமை அவர்களுக்கு உண்டு.
உறுப்புரை 41:- நடைமுறையிலுள்ள நியமங்களை மதித்தல்
சிறுவர் உரிமைகள் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச சட்டத்தில் வரையப்பட்ட நியமங்கள் இந்தச் சமவாயத்தில் உள்ளவற்றிலும் உயர்ந்தனவாக விளங்கும் பட்சத்தில், உயர்ந்த நியமமே என்றும் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.
உறுப்புரை 42:- அமுலாக்கல்
இந்தச் சமவாயத்திற் சொல்லப்பட்டுள்ள உரிமைகளை வயது வந்தோருக்கும் சிறுவர்களுக்கும் பரவலாக அறியச் செய்தல் அரசாங்கத்தின் கடமையாகும்.
சமவாயத்தில் எல்லாமாக 54 உறுப்புரைகள் உள்ளன. 42 முதல் 45 வரையான உறுப்புரைகள், இச் சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னோற்றத்தை 5 வருடத்துக்கு ஒரு முறை ஜக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கையிடும் பொறுப்புப் பற்றியன. 46 முதல் 54 வரையான உறுப்புரைகள் அரசுகள் சமவாயத்திற்குத் தம்மை அர்பணிக்கும் விடயத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறையை விளக்குகின்றன.
1.4 சிறுவர் தொழிலாளர்கள்
1956 ஆண்டில் 47ஆம் இலக்க சட்டத்தினாலும், 1984 ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க சட்டத்தினாலும் திருத்தப்பட்டதன் பிரகாரம் 18 வயதிற்குட்பட்ட இளம் சிறுவர்களை வேலைக்கமர்த்துவது குற்றமாகக் கருதப்படுகின்றது.
சிறுவர் தொழிலாளர்கள் உருவாவதற்கான காரணங்களை ஆராயும் போது சிறுவர் தொழிலாளர்களுடன் தொடர்புடைய முதன்மையானதும் மிக முக்கியமானதுமான காரணி வறுமையாகும். தொழிலாளர்களின் தோற்றதிற்கு சிறுவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்னணியும், அவர்கள் வாழும் சூழலுமே காரணமாக அமைகின்றது. அத்தோடு மிக முக்கிமாக மலையக மக்களின் கீழ் மட்ட உழைப்பே அவர்களை வறுமை நிலைமைககு இட்டுச்சென்றுள்ளது. இதன் காரணமாக பெருந்தொகையான சிறுவர்கள் வீடுகளிலும், கட்டிட நிர்மாணத் தலங்களிலும், கடைகளிலும், கல்லுடைக்கும் நிலையங்களிலும் வேலைக்கமர்த்தப் படுகிறார்கள். இவ்வாறு சிறுவர்களை வேலைக்கமர்த்துவதனால் அவர்களின் கல்வி சம்பந்தமான உரிமைகள், பொழுது போக்குகளில் ஈடுபடுவதற்கான உரிமைகள் இது போன்ற இன்னோரன்ன பல உரிமைகள் மீறப்படுகின்றன.
கல்வி கற்பதோடும், விளையாடிக் கொண்டு இருக்க வேண்டிய சிறுவர்கள் தொழில்களில் ஈடுபடும் போது உடல், உள வளர்ச்சிக்கான சந்தர்ப்பம் இல்லாமல் செய்யப்படுகின்றது. இதனால் சில வேளைகளில் சிறுவர் தொழிலாளர்களின் இயல்பு ஊனமுறுவதற்கும் சில வேளை மரணிப்பதற்கும் காரணமாகலாம். அவர்கள் தொடர்ந்து உயிர் வாழ்ந்தாலும் அது குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் சுமையாக அமையலாம். இதன் பேறாக இந்தச் சிறுவர் தொழிற் செயற்பாடுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிள்ளைகளின் வாழ்க்கையில் தாழ்வான சமநிலையையே தோற்றுவிக்கும். இதன் காரணமாக கல்வி அறிவற்ற, உடல், உள ரீதியாக பலவீனமானதோர் எதிர்கால சமுதாயம் தோன்றக் காரணமாக அமையும்.
அத்தோடு சிறுவர் தொழிலாளர் பிரச்சினைகளுக்கும், அதனோடு தொடர்பு பட்ட வறுமைப் பிரச்சினைக்கும் மிக முக்கியமானதொரு காரணியாக விளங்குவத போதைப் பொருள் பாவனையாகும். மலையகத்திலுள்ள அனேகமானோர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இதன் காரணமாக அவர்களின் வருமானத்தில் 1/3 பங்கினை மது அருந்துவதற்காகச் செலவு செய்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகளினால் வருமானப் பற்றாக்குறை ஏற்படுவதனால் சிறுவர்களை வேலைக்கமர்த்த வேண்டிய நிர்ப்பந்த நிலை தோன்றுகிறது.மேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளினால் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன. ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடும் போது மலையகத்தில் பாடசாலைக்குச் செல்ல வேண்டிய சிறுவர்கள் தொழிலில் ஈடுபடும் எண்ணிக்கை மிக அதிகம். போதிய கல்வி வசதியின்மை இச்சமூகத்தில் தோன்றும் முக்கிய பிரச்சினையாகும். இது சிறுவர்கள் பாடசாலை செல்லாமலிருப்பதற்கும் சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கும் ஏதுவாக அமைகின்றது.
இது இவ்வாறு இருக்க பெற்றோர்களால் தம் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப, முடியாமைக்கான முக்கியமான காரணம் போதிய பாடசாலைகள் அண்மையில் இல்லாமையும், தூர இடங்களுக்கு அனுப்புவதற்கான சுமையைத் தாங்க முடியாமையுமாகும். தோட்டப்பகுதிகளில் பிள்ளைகளினால் பாடசாலை செல்வதிலுள்ள நிலமைகள் ஏற்றனவாக இருப்பதனால் அவர்களின் கல்வித் தகைமையை அடைய முடியாதுள்ளது. அதுவே அவர்களை அண்மைக் காலத்தில் தாழ்மட்டக் கல்வித் தரத்திற்கு இட்டுச் செல்கிறது. இந்நிலைமைகள் மாற வேண்டிய அவசரமும் அவசியமும் உடனடித் தேவையாக உள்ளது. அத்தோடு பெற்றோர்கள் தம் பிள்ளைகளைக் கல்வியின் பக்கம் திசைதிருப்புவதோடு கல்வித் தாகத்தை ஏற்படுத்த வேண்டும்.
சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் சட்டத்திற்கமைவாக 14 வயதுக்குக் குறைந்த எந்த சிறுவர்களையும் வேலைக்கு அமர்த்த முடியாது. இந்த வயதெல்லையானது நாட்டுக்கு நாடு, சமூகம் வேறுபடுகின்றது. அந்த வகையில் இலங்கையை எடுத்து நோக்கும் பொழுது 12 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களை வேலைக்கமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். 12 – 14 வயது வரையான சிறுவர்களை பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் 2 மணித்தியாலங்கள் வேலையில் ஈடுபடுத்தலாம். 14- 16 வயதுக்கிடைப்பட்டவர்களைக் கடுமையான வேலைகளில் ஈடுபடுத்த முடியாது. மேலே குறிப்பிடப்பட்ட சட்டங்களை மீறுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். சிறுவர்களை வேலைக்கமர்த்துவதற்கு எதிராக சட்டங்கள் இருந்தாலும் அவை செயலிழந்தனவாகக் காணப்படுகின்றன.
02. கல்வியும், சிறுவர் உரிமையும்:
2.1 கல்வி பற்றிய வரைவிலக்கணங்கள்:
மனிதர்களின் சிறந்த வாழ்கைக்கு மிக அத்தியாவசியமான ஒன்றாக கல்வி காணப்படுகின்றது. எனவே இக் கல்வியும் கல்வியின் முக்கித்துவம் பற்றியும் உலகின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள அறிஞர்கள் காலத்துக்குக் காலம் பல சிந்தனைக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். இக் கல்வியின் முக்கித்துவத்தினை உணர்ந்து உலகிலுள்ள நாடுகள் இதற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றன.
- கிரேக்க தத்துவ ஞானியான பிளேட்டோ (கிமு 428 – 348 ) என்பவர் “ உண்மை, நன்மை, அழகு இம் மூன்றினையும் உணர்த்தும் கல்வியே கல்வி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
- அமெரிக்க கல்வி அறிஞரான ஜோன் டூயி (1859 – 1952 ) “பிள்ளைகளுக்குரிய சூழலையும் அங்கு வாழ்வதற்கு உதவும் அனுபவங்களையும் பெற்றுக் கொடுத்தல் கல்வியாகும் என்றார்.
- அறிவுப் புரட்சியை ஏற்படுத்திய 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜின் ஜாக்ஸ் ரூசோ (1712 -1778) “கல்வி இயற்கைக்கேற்ப விருத்தியடையும் செயற்பாடு” என்றார்.
- பெஸ்டலாசி (1746 – 1827) என்ற அறிஞரின் வரைவிலக்கணமானது “ கல்வி என்பது மனிதனது எல்லாத் திறன்களும் வன்மைகளும் இயல்பாகவும் படிப்படியாகவும் இசைந்து வளர்ச்சி பெறுதலே ஆகும்” என்பதாக அமைகின்றது.
- அதே போன்று அமெரிக்க கலைக்களஞ்சியம் கல்வி பற்றி குறிப்பிடுகையில் “ மனிதனிடம் ஏற்கனவே பொதிந்திருக்கும் முழுமை பெற்ற நிறைவினை மலரச் செய்வது கல்வியாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆன்மீக ரீதியாக கல்வியை நோக்கிய சுவாமி விவேகானந்தர் அவர்கள் “ மனிதனிடம் ஏற்கனவே பொதிந்திருக்கும் முழுமை பெற்ற நிறைவினை மலரச் செய்து கல்வியாகும்” என்று குறிப்பிடுகின்றார்.
- கல்வியியல் அறிஞரான பிரொபெல் “ குழந்தையின் இயல்பான செயல்களிலிருந்து தொடங்கும் கல்வியே அதன் நல்லொழுக்கத்தின் உண்மை வளர்ச்சிக்கு வழி செய்யும்” என்றார்.
- மெட்டின் என்பவர் “ கல்வி என்பது முதியோர் இளையோர் மீது செலுத்தும் செல்வாக்கு” எனக் கூறுவார்.
- தொம்சன் என்பவர் கல்வி பற்றி கூறும் போது “ ஒரு தனியாளின் வாழ்கையில் நடத்தை, சிந்தனை, மனபாங்கு என்பனவற்றில் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் செல்வாக்கே கல்வி” என்றார்.
- மகாத்மா காந்தி “ கல்வி என்பது உள்ளிருந்து வெளியே வருவதன்றி பிள்ளையினுள்ளே செலுத்துவது அன்று என தெளிவாக கூறுகிறார்.
மேலே கூறப்பட்ட வரைவிலக்கணங்கள் முழுவதையும் ஆராய்ந்து பார்க்கும் பொழுது கல்வி என்பது ஓர் ஆய்வு என்ற முடிவுக்கு வரலாம். ஒருவன் தன்னையும் தான் வாழும் சூழலையும் அறிந்து கொள்ள துணை நிற்பது கல்வி ஆகும். தான் வாழும் சமூகத்தையும், அதன் பாரம்பரியத்தையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும் ஆராய்ந்து உணரவும் அவற்றைப் பேணிப் பாதுகாக்கவும் கல்வி பயன்படுகின்றது. சுருக்கமாக கூறுவதானால் சமுதாயம் காண விளைகின்ற சான்றோனை உருவாக்கிச் சிறந்த ஒரு குடிமகனை நாட்டுக்கு அளிக்க உதவுவதே கல்விப் பயனாகும்.
2.2 இலங்கையில் கல்வி
“எல்லோருக்கும் கல்வி” என்பது இன்று பரவலாக பேசப்படும் ஒரு பொருள். யாவருக்கும் ஆரம்பக் கல்வி, யாவருக்கும் இடைநிலைக்கல்வி என்ற நிலைகளினூடாக இக் குறிக்கோளை அடைவதற்குரிய முயற்சிகள் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையில் எழுத்தறிவின்மையை முற்றாக இல்லாமல் செய்தல் பொருட்டு யாவருக்கும் எல்லா மட்டங்களிலும் கல்வியைப் பெறுவதற்குரிய சமசந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என நாட்டின் அரசியலமைப்பில் 27 ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது.
எமது சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்பற்ற கல்வி வகுப்பறைகளின் திணிக்கப்படும் பொது குழந்தை திணறுகின்றது. இந்த திணிப்பு அதிகாரம், அடக்குமுறை, பணிவு என்ற வடிவில் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. குழந்தையின் இயல்பான உற்சாகமாக அறிவதில் உள்ள ஆர்வத்திற்கு புறம்பாக மூளையில் புகுத்த முயற்சிக்கும் போது அவலம் தவிர்க முடியாது. இக்கல்வி முறைமையினாலும் கூட பெரும் தொகையான சிறுவர்கள் இலங்கையில் இடைவிலகுகின்றனர்.
2.3 மனித உரிமையில் கல்வி :
உலகில் 774 மில்லியன் வளர்நதவர்கள் எழுத வாசிக்க முடியாதவர்களாக உள்ளனர். 75 மில்லியன் பிள்ளைகளுக்கு ஒரு போதும் பாடசாலை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எழுத வாசிக்க தெரியாததால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வறுமையில் சிக்குண்டு வாழ்கையினைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ஆவர்.
ஐ.நா பொதுச்சபையின் பிரகடனமானது மனித உரிமைகளின் உறுப்புரை 26 (1), (2) இல் கூறப்பட்டுள்ளவாறு ஓவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமை, ஆரம்பக் கல்வியின் அவசியம், கல்வி மனிதனது ஆளுமைவிருத்தியில் முழுமையாக வியாபித்து உள்ளது. ஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனம் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்றும் உறுப்புரை 28 சிறுவர்களின் கல்வி உரிமையையும் வலியுறுத்துகின்ற போதிலும் இலங்கையில் 5 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி வழங்கப்பட்ட போதிலும் கூட மேற்குறித்த சம்பவங்கள் சிறுவர்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துகின்றன. இத்தகைய சிறுவர் கொலைகள் சம்பவங்களுக்கு சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்துதலும், வறுமையும் பொருளாதார நெருக்கடியும் காரணம் என்று கூறலாம்.
2.4 சிறுவர்களின் கல்வி உரிமை
சிறுவர்களின் கல்வி பெறுவதற்கான உரிமை பற்றிய சரத்து 28,29 களில் கூறப்பட்டுள்ளது. சிறுவர் உரிமைகள் சமவயத்தின் சரத்து 32 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தம் ஆரோக்கியம், கல்வி வளாச்சி என்பனவற்றின் மேம்பாட்டிற்கு அச்சுறுத்தலாய் அமையக் கூடிய வேலைகளில் இருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைக்குண்டு.
இலங்கையின் கல்விக் கொள்கையாக சிறுவர்கள் என்ற பதினான்கு வயதிற்குட்பட்ட சகலருக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்படவேண்டுமென்று உள்ளது. அதே போன்று அவ் வயதிற்குட்பட்ட பிள்ளைகளை வேலைக்கமர்த்துவதும் குற்றமென்று சட்ட விதி கூறுகின்றது. அறிக்கைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சிறுவர் உரிமை தினத்திலே இலங்கையில் சகல சிறுவர்களும் தமக்குரிய அடிப்படை உரிமைகளை இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுதல் என்பது சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாக உள்ளது.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று சொல்லப்படுகின்றது. சிறுவர் உரிமைகள் பற்றி பேசப்படுகின்ற போதிலும் கூட இன்று பலகாரணங்களால் சிறுவர்கள் பல இன்னல்களை எதிர் நோக்கி வருகின்றனர். கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய கல்வியும் கூடப் பாதிப்படைகின்றது. இன்று பாடசாலைகளை விட்டு இடைவிலகுகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை பல்வேறுப்பட்ட அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கின்ற போதிலும் சில காரணங்களினால் மாணவர்கள் இடைவிலகும் வீதம் குறைந்ததாகத் தொரியவில்லை.
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான உரிமை மீறல்களுக்கு வடக்குக் கிழக்கில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்ப துயரங்கள் வார்த்தைகளால் விபரிக்க முடியாது. குறிப்பாக பெருந்தோட்டக் கிராமங்களில் வாழும் பொருளாதாரப் பின்னடைவுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி விட்டு செல்வந்த வீடுகளுக்கும் கடைகள் போன்ற பல இடங்களுக்கு வேலைக்கு அனுப்புகின்றனர்.
03. இலங்கையில் இடைவிலகல்
3.1 இடைவிலகல்
பாடசாலையில் சேரும் பிள்ளைகள் முழுமையான கல்வியைப் பெறாது இடையில் பாடசாலையை விட்டு விலகல் இடைவிலகல் எனப்படும். இவ்வாறான இடைவிலகல் ஒரு கல்விப் பிரச்சினையாகக் காணப்படுகின்றது. பிள்ளைகள் தேவையான கல்வியைப் பெறாதிருப்பது நாட்டின் வளத்தை வீணவிpரயம் செய்யும் செயலாக இருக்கின்றது. அத்துடன் வாழ்க்கையில் கிடைக்கும் நல்ல சந்தர்ப்பம் கிடைக்காமல் விடுவதுடன் இளம் வயதில் கிடைக்கக் கூடிய அனுபவங்களையும் தவற விடுகின்றனர். இடைவிலகும் பிள்ளைகள் சமூகத்தில் காணப்படும் தீய சக்திகளினால் கவரப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன.
இடைவிலகலினால் அரசும், பெற்றோரும் செலவிடும் முதலிற்குரிய சரியான விளைவு கிடைக்காமல் போகின்றது. மேலும் பாடசாலையை விட்டு விலகியோரில் பிள்ளைப்பருவ கல்வியை மீண்டும் புனரமைப்பு செய்தல் எனும் புதிய பிரச்சினையை இடைவிலகல் தோற்றுவிக்கின்றது. பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடையில் விலகிச் செல்வதற்கான காரணங்களை நோக்க வேண்டியது அவசியமானதும் முக்கியமானதுமான விடயமாகும். 1979 ஆம் ஆண்டு யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வொன்றில் மாணவர்கள் விலகுவதற்குரிய காரணங்களாக பின்வருவன அமைந்தன எனக் கூறப்பட்டுள்ளது.
இடைவிலகலினால் அரசும், பெற்றோரும் செலவிடும் முதலிற்குரிய சரியான விளைவு கிடைக்காமல் போகின்றது. மேலும் பாடசாலையை விட்டு விலகியோரில் பிள்ளைப்பருவ கல்வியை மீண்டும் புனரமைப்பு செய்தல் எனும் புதிய பிரச்சினையை இடைவிலகல் தோற்றுவிக்கின்றது. பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடையில் விலகிச் செல்வதற்கான காரணங்களை நோக்க வேண்டியது அவசியமானதும் முக்கியமானதுமான விடயமாகும். 1979 ஆம் ஆண்டு யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வொன்றில் மாணவர்கள் விலகுவதற்குரிய காரணங்களாக பின்வருவன அமைந்தன எனக் கூறப்பட்டுள்ளது.
1.பொருளாதாரக் கஷ்டம் காரணமாக தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இருத்தல்
2.ஏதாவதொரு தொழிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருத்தல்.
3.பெற்றோர்களின் தொழிலுக்கு உதவ வேண்டியிருத்தல்.
4.நோயுற்றிருத்தல் ( உடல், உள ரீதியாக )
5.பிறப்பிலுள்ள குறைபாடு
6.வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையிலான தூரம்
7.பிள்ளைகளுக்கு பாடசாலை மீது வெறுப்பு ஏற்படல்
8.பெற்றோர்களுக்கு பாடசாலை மீது நம்பிக்கை இல்லாதிருத்தல்
9.சில வேளைகளில் பாடங்களிலோ அல்லது ஆசிரியர் மீதோ வெறுப்படைந்து பாடசாலையை விட்டு வெளியேறல்
10.ஒழுக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக பாடசாலையிலிருந்து வெளியேறல்
11.பாலியல் குற்றவாளியாக இருப்பதினால் பாடசாலையிலிருந்து வெளியேறல்
12.சமவயதுப் பிரிவினரிடையே உள்ள செல்வாக்கு காரணமாக கல்வி மீது வெறுப்படைதல்
மாணவர்கள் கல்வியை தொடர்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அப்பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர். இதனால் சமூகத்திலும் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுகின்றன. மாணவர்கள் இடைவிலகுவதற்கான காரணங்களாக பின்வருவன காணப்படுகின்றன. பொருளாதாரப் பிரச்சினை, பெற்றோர்களின் கவலையீனம், பரம்பரைத் தொழிலில் ஆர்வம் காட்டுகின்றமை, சாதிப் பாகுபாடு, இளம் வயதில் திருமணம் செய்தல், அதிபர்,ஆசிரியர்களின் பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகம், பாடசாலைகளின் இறுக்கமான நிர்வாகம், சூழலின் தாக்கம், வெளிநாட்டு மோகம், சிறு குழந்தைகளைப் பராமரித்தல், பாடசாலைகள் மாணவர்களை ஊக்குவிக்காமை, பாடசாலைக்கும் பெற்றோருக்குமிடையே தொடர்பு குறைவாகக் காணப்படல், முன்பள்ளிக் கல்வி குறைவாகவும் ஒழுங்கான முறையிலும் இல்லாமை, ஆசிரியர் வளப்பற்றாக்குறை போன்றன காணப்படுகின்றன.
3.2 இடைவிலகலுக்கான காரணங்கள்
1. பரீட்சை முறைகளும் கலைத்திட்டமும்
2. மாணவர்களின் வரவின்மை
3. ஒரே வகுப்பில் தங்கியிருத்தல்
4. கல்விக்கான பிரிவுச்செலவு உயர்வடைதல்
5. கற்றவர்களிடையே தொழிலின்மை
6. வளப்பற்றாக்குறையும், வளப்பாவனையும்
2. மாணவர்களின் வரவின்மை
3. ஒரே வகுப்பில் தங்கியிருத்தல்
4. கல்விக்கான பிரிவுச்செலவு உயர்வடைதல்
5. கற்றவர்களிடையே தொழிலின்மை
6. வளப்பற்றாக்குறையும், வளப்பாவனையும்
7. பரீட்சை முறைகளும் கலைத்திட்டமுடம்
பரீட்சை முறைகளும் கலைத்திட்டமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. இவற்றின் நோக்கங்கள், பாடவிடயங்கள், மதிப்பீட்டு முறைகள் ஆகியவை இயல்பிலேயே ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படுகின்றது. பரீட்சை முறை ஏதோ ஒரு வகையில் பிரச்சினைக்கு உரியதானால் கலைத்திட்டத்தின் உள்ளடக்கத்திலும் உபயோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கலைத்திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது பரீட்சை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும். பொதுப் பரீட்சைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது பாடசாலை மட்டத்தில் மதிப்பீடுகளை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கு ஒழுங்கான முகாமைத்துவம் தேவைப்படுகின்றது. அத்துடன் ஆசிரியர்கள் மனப்பாங்குகளையும், திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பரீட்சைகளில் எழுத்துமுறைப் பரீட்சை நம்பிக்கை உரியதாகவும் இலகுவானதாகவும் காணப்படுகின்றது. உயர்கல்விக்கும் தொழிலுக்கும் போட்டி காரணமாக உள்ளதால் பின்வரும் நிகழ்ச்சிகள் மூலம் பிரச்சினைகள் உருவாகின்றன.
வகுப்பறைக் கற்பித்தல் பாடவிடயங்களை மட்டும் வழங்குவதுடன் நின்று விடல், எழுத்து மூலம் வெளிப்படுத்தக் கூடிய விடயங்களும், நினைவில் வைத்திருக்கக் கூடிய அம்சங்களும், கவனத்தில் கொள்ளப்படல், சோதனைக்கு ஏற்ற விதத்தில் பொறிமுறைப் பயிற்சியளித்தல், பரீட்சையில் குறைந்த மட்டத்தில் பெறுபேறுகளை பெறுபவர்கள் மீது கவனத்தை செலுத்தாது இருத்தல், தேசிய கல்விக் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வசதி இல்லாதிருத்தல், போதனாமுறை என்பவற்றிற்கு வழங்கும் முக்கியத்துவம் குறைவடைதல் ஆகிய காரணங்களால் பரீட்சை முறையை தவறான ஒன்றாக கருதாது ஏற்ற முறையில் நிலை நிறுத்திக் கொள்ள பொருத்தமான வழிவகைகளைக் காண வேண்டும்.
2.மாணவர்களின் வரவின்மை
மாணவர்களின் வரவின்மை காலப்போக்கில் அவர்கள் பாடசாலைகளில் இருந்து நீங்கிச் செல்வதற்கு வழி வகுக்கும். தொடர்த்தேர்ச்சியாக பாடசாலைக்கு வருகை தராத மாணவருக்கு பாடங்களை உரிய முறையில் கற்க முடியாது போவதால் பாடசாலையிலிருந்து விலகி விடுவான். வரவின்மையானது ஒழுக்கக் கட்டுப்பாட்டை சீர்குலைப்பதுடன் வகுப்பறைக் கற்பித்தலையும் சீர்குலைத்து வகுப்பறைகளில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
மேலும், பரீட்சைகளிலும், மதிப்பீடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்விச் சீர்திருத்தத்தின்படி கணிப்பீடு செய்வதற்கு வரவின்மை பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மாணவர்களின் வரவு குறைவடைவதால் முகாமைத்துவப் பிரச்சினைகளும் ஏற்படும். வெற்றிகரமான முகாமைத்துவத்திற்கு மாணவர்களின் பங்களிப்பும் ஒத்துளைப்பும் அத்தியாவசியமானவை. மாணவர்களின் வரவில் வீழ்ச்சி ஏற்படின் பாடசாலைக்கு கிடைக்கும் வளங்களும் குறைவடையும். மாணவர்கள் பாடசாலைக்கு வருதல் கல்விக்கு சமூகமளிக்கும் ஆரம்பக் கட்டமாகும். எனவே இது முழுக்கல்வியமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
3.ஒரே வகுப்பில் தங்கியிருத்தல்
பாடசாலையில் அனுமதிக்கப்படும் மாணவர்கள் ஒவ்வொரு வருட இறுதியிலும் அடுத்து வரும் மேல் வகுப்பிற்கு சாதாரணமாக சித்தியடைய வேண்டும். அடுத்த வகுப்பிற்கு செல்வதற்கான கல்வியடைவை ஒரு மாணவன் பெறாது விட்டால் அவ்வகுப்பில் மீண்டும் கற்றல் வேண்டும். இவ்வாறு தங்கியிருந்து கற்பதற்கு வருட இறுதிப் பரீட்சையில் சித்தியடையாமையே காரணமாகும். ஒரு பிள்ளை சித்தியடையாமைக்கு காரணமாக கற்றல் வேகம், உளர் உளச் சார்பு என்பன குறைவாகக் காணப்படல் காரணமாக அமைகின்றது. இவற்றினை நிவர்த்தி செய்தல் ஆசிரியரின் கடமையாகும்.
ஒரே வகுப்பில் தங்கியிருந்து கற்றலில் பின்வரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
1 மீண்டும் ஒரே வகுப்பில் தங்கியிருக்கும் மாணவர்களால் கல்விக்கு செலவிடப்படும் பணத்தின் அளவு கூடி மேலதிக செலவு ஏற்படுகின்றது.
2.ஒரு வருடத்தில் பாடசாலையில் இடவசதி அளிக்கக் கூடிய மாணவர் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பதால் சேர்க்கப்படுபவர்களுக்கு இடவசதி குறைவாக இருக்கும்.
2.ஒரு வருடத்தில் பாடசாலையில் இடவசதி அளிக்கக் கூடிய மாணவர் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பதால் சேர்க்கப்படுபவர்களுக்கு இடவசதி குறைவாக இருக்கும்.
3. மீண்டும் தங்கிக் கற்கும் மாணவர்களிடையே விரும்பத்தகாத மனவெழுச்சி நடத்தைகளான வெட்கம், உதாசீனம், முரட்டு சுபாவம் போன்றவை உருவாகின்றன.
4.மீண்டும் தங்கியிருக்கும் பிள்ளைகளினால் பெரும்பாலும் வகுப்புக்களில் ஒழுக்கக் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகள், வகுப்பறை நிர்வாகப் பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
5. மாணவர் சமூகமயமாக்கப்படுவதிலும் மீண்டும் தங்கியிருத்தல் தாக்கத்தினை ஏற்படுத்தும். இவர்கள் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து பழக மாட்டார்கள். இதனால் கூட்டுறவு மனப்பான்மை இல்லாமல் போகின்றது.
4.கல்விக்கான பிரிவுச் செலவு உயர்வடைதல்
பாடசாலையில் அனுமதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு மாணவனுக்காகவும் செலவிடப்படும் பணம் பிரிவுச் செலவாகக் காணப்படுகின்றது. இச்செலவுகளாக ஆசிரியர் கொடுப்பனவுகள், ஏனைய உத்தியோகஸ்தர்களுக்கான செலவுகள், கட்டடங்கள், நிலம், தளபாடம், புத்தகங்கள், சீருடைகள், பொறி இயந்திரங்கள் ஆகியன காணப்படுகின்றன.
பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப இச்செலவுகளும் அதிகரிக்கப்படுகின்றது. கல்விக்காக செலவிடப்படும் பணம் நேரடியாக இலாபம் தரக்கூடிய ஒன்றல்ல. உற்பத்தி அல்லது வியாபார நிறுவனங்களில் இடப்படும் மூலதனம் திரும்பப் பெறப்படுகின்றது. இதனால் வரவு செலவை சமப்படுத்திக் கொள்ளலாம். கல்விச் செலவு அவ்வாறு இருப்பதில்லை. எனவே பிரிவுச் செலவுத் தொகை உயர்தல் ஒரு பிரச்சினையாக அமைகின்றது. கல்வியில் வீண்செலவுகள் ஏற்படும் போது பிரிவுச் செலவுத் தொகை அதிகரிக்கின்றது.
அரசு மாணவர்களுக்காக செலவினைச் செய்வது போன்று பெற்றோர்களும் செலவிடுகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. தேவைகள் சிக்கல் வாய்ந்ததாக காணப்படும் இக்கட்டத்தில் பெற்றோர்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு செலவு அதிகரித்துச் செல்கின்றது. அப்பியாசப் புத்தகங்கள், வேறு உபகரணங்கள், பாடசாலைக்கு பல்வேறு வேலைகளுக்காக வழங்கும் பணம், போக்குவரத்துச் செலவு, விளையாட்டு வெளி வேலைகளுக்கான செலவு, பரீட்சைக் கட்டணங்கள் போன்றவை இதில் உள்ளடங்குகின்றன. இவ்வாறு கல்விச் செலவு உயர்வது மிகச் சிக்கல் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
கல்விக்காக செலவிடப்படும் தொகை அதிகரிப்பதனால் அபிவிருத்திக்கான செலவைக் குறைக்க வேண்டியுள்ளது. ஆனால் அரசினால் மேற்கொள்ளும் கல்விக்கான செலவு குறைக்கப்பட்டால் நாட்டின் பெரும்பகுதியான மக்களுக்கு கல்வி கற்கும் சந்தர்ப்பம் அற்றுப் போகும். அப்போது கல்வித்துறையில் மேலும் பல பிரச்சினைகள் ஏற்பட வழி வகுக்கும்.
5. கற்றவர்களிடையே தொழிலின்மை
முறையான கல்வியைப் போதிய அளவு மட்டத்திற்கு வெற்றிகரமாக பெற்றுக் கொண்டவர்கள் கற்றவர்களாகக் கருதப்படுகின்றார்கள். க.பொ.த. (சா/த), க.பொ.த (உ/த), கலைமாணிப்பட்டம் ஆகிய கல்வித் தரங்களைப் பெற்றவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் தொழிலின்றி உள்ளனர். அல்லது தகுதிக்கு குறைந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பாடத்தொகுப்பினூடாக கல்வியைப் பூரணப்படுத்தி தராதரப்பத்திரங்களை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் போதியளவு தொழிலுக்கான சந்தர்ப்பங்களை நாட்டின் பொருளாதார முறையின் கீழ் வழங்க வேண்டியிருப்பது பெரிய பிரச்சினையாக உள்ளது.
1960 ஆம் ஆண்டின் பின்னர் கலைமாணிப் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை தேவைக்கும் அதிகமாகி விட்டது. மேலும், விஞ்ஞான, வைத்திய, பொறியியல் ஆகிய துறைகளில் கற்றவர்களுக்கும் பட்டம் பெற்றவர்களுக்கும் தொழில் பெறுவது கடினமாக உள்ளது. கற்றவர்களில் அதிகமானோர் அரச தொழிலை எதிர்பார்ப்பதும் தொழிலில்லாப் பிரச்சினைக்குரிய காரணங்களில் ஒன்றாகும். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் தொழில்களை செய்யக் கூடியவர்களை உருவாக்கக்கூடிய சரியான கலைத்திட்டம் இல்லாதிருப்பது தொழிலில்லாப் பிரச்சினைக்குரிய காரணங்களில் ஒன்றாக விளங்குகின்றது.
6. வளப்பற்றாக்குறையும், வளப்பாவனையும்
கல்விக் கொள்கையானது பின்வரும் இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
1. எல்லோருக்கும் இலவசமாகக் கல்வியளித்தல்
2. கல்வியில் சமசந்தர்ப்பம் அளித்தல்
2. கல்வியில் சமசந்தர்ப்பம் அளித்தல்
ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு அளிக்கக்கூடிய அதியுயர் செல்வத்தினை அளிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. உண்மையில் கல்வியை செயற்படுத்துகையில் இது நிறைவேறாமையை நாம் காணக்கூடியதாக உள்ளது. இதில் ஒரு காரணமாக வளப்பற்றாக்குறை காணப்படுகின்றது. கல்வியின் தரத்தை அதிகரிப்பதற்குரிய ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்தல் வேண்டும். இதற்குப் பெருந்தொகைப் பணம் தேவைப்படுகின்றது. பாடசாலைப் புத்தகங்களை அச்சிடல், விநியோகித்தல், பாடவிதான மாற்றம், ஆசிரியர் பயிற்சி, கல்வியை நவீனமயப்படுத்தல் போனறவற்றுக்கு கூடுதலான அளவு பணம் தேவைப்படுகின்றது. இவற்றைப் பெற்றுக் கொள்ளல் பெரும் பிரச்சினையாக உள்ளது.
மேற்போன்றவற்றுக்கான வளங்களை அதிகரித்தல், உள்ள வளங்களில் இருந்து உச்சப்பயனைப் பெறல், வளப்பகிர்வு போனறவற்றை முறையாகச் செய்ய வேண்டும். இம் மாவட்டத்தில் வளங்களின் உபயோகம் அவற்றை வௌ;வேறு துறைக்கு ஒதுக்குதல் போன்ற நடவடிக்கைகளில் பல குறைபாடுகள் உள்ளன. கல்வித்துறையில் உள்ள மனித வளம் பௌதீகவளம் என்பனற்றிலிருந்து அனேக சந்தர்ப்பங்களில் உரிய பயன் பெறப்படுவதில்லை. தகுதியும் திறமையும் உள்ள அனைவருக்கும் பதவிகள் கிடைப்பதில்லை. திறமையின் அடிப்படையில் அன்றி வேறு அடிப்படையிலும் தெரிவு இடம்பெறுவதையும் அவதானிக்கலாம்.
கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான வளங்கள் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. சில பாடசாலைகளில் ஆய்வுகூட கருவிகள் உள்ளன. ஆனால் ஆய்வுகூடமோ அல்லது விஞ்ஞான அறிவோ இல்லை. விஞ்ஞானம் கற்பிக்க ஆசிரியர்களும் இல்லை. சில பாடசாலைகளில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர்கள் இருந்தும் விஞ்ஞான ஆய்வுகூட கருவிகள் இல்லை. சில பாடசாலைகளில் வாசிப்பதற்கு புத்தகங்களோ வாசிகசாலையோ இல்லாமல் இருக்கும். ஆனால் மாணவர்கள் வாசிக்க ஆர்வம் உள்ளவர்களாக இருப்பர். வாசிப்பதற்கு ஆர்வமில்லாத பாடசாலைகளில் புத்தகங்கள் இருக்கும்.
மேற்கூறப்பட்டவைகள் இலங்கையின் கல்விப் பிரச்சினைகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
3.1 இடைவிலகலுக்கான பொதுவான சில காரணிகளும் தீர்வுகளும்
1. பொருளாதாரப் பிரச்சினை
கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அன்றாட நாளாந்த அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடிவதில்லை. அத்துடன் உடலை வருத்தி வேலை செய்யும் தொழிலாளர்கள் உடல் வருத்தத்திற்கு என்ற போர்வையில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியினை மது அருந்துவதற்காக செலவிடுகின்றனர். அத்துடன் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்து தங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனுக்கு பாவிப்பதற்கு நினைப்பதில்லை. மேலும் வேளாண்மைத் தொழில் செய்யும் பருவ காலங்களில் கிடைக்கும் வருமானத்தினை அக்காலத்திலேயே தேவையற்ற செலவுகளைச் செய்து செலவளித்து விடுவர். இந்நிலையில் தமது பிள்ளைகளுக்கு கல்விக்காக செலவிட முடியாமல் இருப்பர். இதனால் மாணவர்களும் தங்களது உணவு, பாடசாலை, உபகரணங்கள் போன்றவற்றை பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு கல்வியின் மேல் அக்கறை காட்டும் அளவினை குறைத்துபாடசாலையை விட்டு விலகுகின்றனர். இவ்வாறு விலகும் மாணவர்கள் விரும்பத்தகாத கூட்டதித்தினருடன் சேர்ந்து காலத்தை வீணடிப்பதுடன் எதிர்கால வாழ்க்கையை சீரற்ற நிலைக்கு தள்ளி விடுகின்றனர்.
தீர்வுகள்
விவசாயிகளுக்கும், மீன்பிடித் தொழிலாளர்களுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி எடுத்துக் கூறி தமது வருமானத்தில் ஒரு பகுதியை நாளாந்தம் அல்லது வாராந்தம் அல்லது மாதாந்தம் என்ற அடிப்படையில் சேமிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதற்கு சீட்டுப்பிடித்தல், வங்கி சேமிப்பு, காப்புறுதி திட்டம், ஓய்வூதியத் திட்டம் என்பவற்றின் மூலம் சேமிக்க நடவடிக்கை எடுத்து வைத்தல் வேண்டும். மேலும் மதுபானம் அருந்துவதனால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறி அதற்காக செலவிடும் பணத்தினை பிள்ளைகளின் கல்விக்காக செலவிட வைத்தல் வேண்டும்.
மேலும் நிரந்தர வருமானத்தினைப் பெற்று பிள்ளைகளின் கல்விச் செலவினை ஈடுசெய்யும் வகையில் பருவகாலங்களில் கிடைக்கின்ற வருமானத்தில் ஒரு பகுதியை வங்கிகளில் சேமிப்பில் இடுவதன் மூலம் அல்லது சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதன் மூலம் வட்டி, இலாபம் போன்ற வருமானங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் தங்கள் தேவைகளுடன் பிள்ளைகளின் தேவைகளையும் நிறைவேற்றி இடைவிலகலைக் குறைக்க முடியும். மற்றும் இப்பிரதேசத்தில் இயங்கும் உலக தரிசனம் போன்ற நிறுவனங்களிடமும் பணம் படைத்த நபர்களிடமும் உதவி பெற்று மாணவர்களின் இடைவிலகலைக் குறைக்க பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. பெற்றோர்களின் கவலையீனம்
பெற்றோர்கள் கல்வியறிவின்னை காரணமாகவும், வறுமை காரணமாகவும், தங்கள் பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துவதில்லை. மாணவர்கள் பாடசாலைக்கு சென்று வருகின்ற வேளைகளில் அவர்களின் தேவைகளை மட்டும் கவனித்து வசித்து வருகின்றனர். சாதாரணமாகவே எழுத, வாசிக்கத் தெரிந்தால் மட்டும் போதுமானது என்று ஒரு சில பெற்றோர்கள் நினைத்து விடுகின்றனர். படித்தவர்கள் எல்லோருக்கும் அரசாங்கத் துறைகளில் வேலை கிடைப்பதில்லை. எனவே பிள்ளைகளை ஏன் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என நினைக்கும் பெற்றோர்களும் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றனர். சுமார் 10 வீதமான மாணவர்கள் பெற்றோரின் கவலையீனம் காரணமாகவே இடைவிலகுகின்றனர்.
தீர்வுகள்
கல்வியின் முக்கியத்துவம் பற்றி பெற்றோர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி ஊக்குவிப்பாளர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் போன்றோர் கல்வியின் முக்கியத்துவத்தினை எடுத்துக் கூற வேண்டும். கல்வி என்பது ஒரு அழியாச் சொத்து எனவும் இது ஒரு நீண்டகால முதலீடு எனவும் படித்தவர்கள் எல்லோருக்கும் அரச உத்தியோகம் கிடைக்கும் என எதிர்பார்க்கக் கூடாது எனவும் எடுத்துக் கூற வேண்டும். 14 வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட வயதினரே கூடுதலாக இடைவிலகுகின்றனர். எனவே இக்கால கட்டத்தில் பெற்றோர்களை கூடிய கவனம் எடுக்க வைக்க வேண்டும்.
3.பரம்பரைத் தொழிலில் ஆர்வம் காட்டல்.
மீன்பிடித் தொழில், விவசாயம், நகை வேலை போன்ற தொழில்கள் பரம்பரைத் தொழிலாக காணப்படுகின்றன. மாணவர்கள் பாடசாலை செல்வதில் அக்கறை காட்டாமல் தொழிலில் ஈடுபடுகின்றனர். ஓந்தாச்சிமடம் பாடசாலையை எடுத்துக் கொண்டால் இடைவிலகுவோரில் 75 வீதமானவர்கள் ஆண்களாகக் காணப்படுகின்றனர். படிப்பதை விட இவற்றை செய்வது நல்லது என மாணவர்கள் இடைவிலகுகின்றனர்.
தீர்வுகள்
பரம்பரைத் தொழிலைச் செய்வதற்காக இடைவிலகும் மாணவர்களுக்கு பாடசாலை மூலமும் பெற்றோர்களும் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும். அத்துடன் கற்கும் வேளையில் தொழில் செய்யும் வல்லமையை ஏற்படுத்த வேண்டும். மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் வேலை செய்யக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
4. சாதிப் பாகுபாடு
இடைவிலகும் காரணங்களில் ஒன்றாக சாதிப் பாகுபாடு அமைகின்றது. இது மாணவர் மத்தியிலும் சமூகத்தின் மத்தியிலும் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. ஆரம்ப காலங்களை விட தற்காலத்தில் ஓரளவு இது குறைவடைந்திருந்தாலும் முற்றுமுழுதாக நீங்கவில்லை.
தீர்வுகள்
பொது மக்களிடத்திலும் மாணவர்கள் மத்தியிலும் மக்கள் எல்லோரும் சம உரிமைகள் படைத்தார்கள் என்றும் மனிதன் பிறக்கும் போது சம உரிமையுடன் பிறக்கின்றான் என்றும் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். எல்லா மாணவர்களையும் சம அந்தஸ்துடன் பாடசாலையில் கவனிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதியடிப்படையில் பாடசாலை அமைக்காமல் ஒருமித்த பாடசாலைகளை அமைக்க வேண்டும்.
5. இளம் வயதில் திருமணம் செய்தல்
பாடசாலை மாணவர்களும் மாணவிகளும் திருமணம் முடிப்பதற்காகவும் இடைவிலகுகின்றனர். குறிப்பாக 14 வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட மாணவிகள் திருமணம் முடிப்பதனால் இடைவிலகுகின்றனர். இவ்வாறு அவர்கள் இளவயதில் திருமணம் முடிப்பதற்கு பெற்றோர்களும், மூத்த சகோதரர்களும் ஒரு வகையில் காரணமாகின்றனர். இதனால் கல்வி கற்கும் வாய்ப்பு குறைவதுடன் கல்வி அறிவற்ற சமூகம் தோன்றவும் காரணமாக அமைகின்றது. மேலும் திருமணம் முடிக்கும் நோக்கத்துடன் அல்லாது முறையற்ற பாலியல் நடத்தைக்கு உட்பட்டு தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணம் முடிக்க வேண்டிய அல்லது தனிமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டோ இடைவிலக வேண்டி ஏற்படல். இதன் காரணமாக இளமையான வயதில் திருமணம் முடிப்பதினால் சிறிய வயதில் பெற்றோராகி வாழ்க்கையை நடாத்த முடியாமல் பொருளாதார கஸ்ரங்களுக்கும் மற்றோர்களால் மதிக்கப்படாமலும் முகம் கொடுத்து வாழ வேண்டி ஏற்படுகின்றது.
தீர்வுகள்
கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் சிறு வயதில் திருமணம் முடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பெற்றோரும், ஆசிரியர்களும் எடுத்துக் கூற வேண்டும். முறையற்ற பாலியல் நடத்தையால் ஏற்படும் நோய்கள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும். பெற்றோர்கள் வீடுகளில் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். மகரகம தேசிய கல்வி நிறுவகத்தால் வெளியிடப்பட்ட யௌவனப் பருவம் போன்ற நூல்களை வெளியிட்டு மாணவர்களுக்கு நல்ல விடயங்களை விளக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. அதிபர், ஆசிரியர்களின் பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகம்
அதிபர், ஆசிரியர்கள் சிலர் மாணவர்களுடன் அன்பாகப் பழகாமல் பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்களையும் பொருத்தமற்ற தண்டனைகளையும் மாணவர்களுக்கு வழங்குவதனால் மாணவர்கள் இடைவிலகுகின்றனர். குறிப்பாக 14 தொடக்கம் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இடைவிலக காரணமாகின்றது. பெண் மாணவிகளிடம் ஆண் ஆசிரியர்கள் பொருத்தமற்ற வினாக்களை கேட்கும் பொழுது அதனை சகித்துக் கொள்ள முடியாமல் இக்கிராமப்புற பெண் மாணவிகள் இடைவிலகுகின்றனர். இத்தகைய மாணவர்கள் சமூகத்தில் விரக்தி அடைந்தவர்களாக காணப்படுகின்றனர்.
தீர்வுகள்
அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களுடன் அன்பாகப் பழக வேண்டும். பொருத்தமற்ற தண்டனைகளை வழங்காமல் மாணவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தண்டனைகளை வழங்க வேண்டும். பெண் மாணவிகளிடம் ஆண் ஆசிரியர்கள் பொருத்தமற்ற வினாக்களைக் கேட்பது தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களை ஆண் ஆசிரியர்களும் மாணவிகளை பெண் ஆசிரியர்களும் ஒழுக்கம் சார்பான நடவடிக்கைகளை கவனித்தல் வேண்டும். இதன் மூலம் இடைவிலகலைக் குறைத்து நற்பிரஜைகளை உருவாக்கலாம்.
7. பாடசாலைகள் மாணவர்களை ஊக்குவிக்காமை
பாடசாலைகளுக்கு மாணவர்கள் கல்வியை மட்டும் பெறுவதற்காக அல்லாமல் விளையாட்டு, கலை ஆற்றல், ஒழுக்கம் போன்ற பல்வேறு விடயங்களையும் பெறுவதற்காகவே வருகின்றனர். எந்தவொரு விடயத்திலும் ஊக்குவித்தல் அவசியமாகும். ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்காமையும் இடைவிலக காரணமாகும். இவ்வாறான ஊக்குவிப்புக்கள் இல்லாமை காரணமாகவும் மாணவர்கள் இடைவிலகுகின்றனர்.
தீர்வுகள்
பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக மாதாந்தமாகவோ, ஒரு தவணைக்கு ஒரு தடவையாகவோ மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து பரிசில்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடசாலை ரீதியாக வருடாந்த விளையாட்டுப் போட்டி, பரிசளிப்பு விழா போன்றவற்றை நடாத்தி பரிசில்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசளிப்பு விழாவில் பாட ரீதியாக புள்ளிகளை கூடுதலாக எடுத்த மாணவர்களுக்கும், ஒழுக்கத்தை கடைப்பிடித்த மாணவர்களுக்கும், தொடர்ந்து பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்க வேண்டும். இதற்கு பாடசாலை அதிபர் சங்கம், விளையாட்டுக் கழகங்கள் போன்றவற்றில் நிதி உதவியினைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் இடைவிலகலைக் குறைத்து எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்த முடியும்.
8. மத்தியகிழக்கு நாடுகளுக்கு செல்வதில் ஆர்வம்
16 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் இடைவிலகுவதற்கான காரணங்களில் ஒன்றாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதனை நம்பியிருத்தல் காணப்படுகின்றது. கல்வியறிவு குன்றிய மாணவர்களும் கல்வியில் ஆர்வமில்லாத மாணவர்களும் பொருளாதார கஸ்ரத்திற்குட்பட்ட மாணவர்களும் இவ்வாறான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சில பெற்றோரும் இதற்கு உடந்தையாக இருப்பதனை ஆய்வு மூலம் அறியக் கூடியதாக உள்ளது. 10 ஆம், 11 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் வெளிநாடு போவதற்காக இடைவிலகுகின்றனர்.
இதற்காக தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான வீடு வளவு போன்ற சொத்துக்களை கூடிய வட்டிக்கு அடைவு வைத்துப் பணம் பெறுகின்றனர். இவ்வாறு பெறப்படும் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவர்களிடம் கையளிக்கின்றனர். இதில் சில முகவர்கள் பணத்தை ஏப்பமிடுகின்றனர். சிலர் பொருத்தமற்ற வேலைக்கும் அனுப்புகின்றனர். இதனால் பணத்தினைக் கொடுத்தவர் மேலும் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சிலருக்கு மட்டுமே நல்ல வேலை வாய்ப்புக் கிடைக்கின்றது. இங்கும் படித்தவர்களுக்கும் தொழில் பயிற்சி பெற்றவர்களுக்குமே பொருத்தமான வேலை வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. தொழில் பயிற்சி இன்றி செல்பவர்கள் கஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டு தங்கள் வளத்தையும் வாழ்க்கையையும் விணடிக்கின்றனர்.
தீர்வுகள்
கல்வியில் பின்னடைவான மாணவர்களுக்கும் கல்வியில் ஆர்வமில்லாத மாணவர்களுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூற வேண்டும். வெளிநாடு போவதானால் குறைந்தது க.பொ.த (சா/த ) தோற்றி உயர்தரக் கல்வியை கற்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படும் பொழுது தொழிற்பயிற்சியைப் பெற்று வெளிநாடு செல்ல நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இதற்கு கிராம அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களின் உதவியைப் பெற முடியும்.
9. சூழலும் வரவின்மையும்
சில காலங்களில் மாணவரின் வரவின்மை கூடுதலாகக் காணப்படுகின்றன. இது காலப் போக்கில் இடைவிலக வழி வகுக்கின்றது. வேளாண்மை செய்யப்பட்டு அறுவடை செய்யப்படும் காலங்களில் அறுவடை செய்வதற்காகவும் கதிர் சேகரிப்பதற்காகவும் மாணவர்கள் செல்கின்றனர். . இதனால் பாடசாலை வரவு குறைவடைகின்றது. கடலில் மீன் கூடுதலாக பிடிபடும் காலங்களில் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வது குறைவாகக் காணப்படுகின்றது.
தீர்வுகள்
மாணவர்கள் தங்கள் எண்ணப்படி நடப்பதற்கு விடாமல் அவர்கள் மேல் அன்பு கலந்த கட்டுப்பாட்டை ஏற்படுத்தி பாடசாலை செல்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். பருவ கால வேலைகளின் போது மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் மாணவர்களை அதில் ஈடுபடுத்த வேண்டும். மாறாக பாடசாலை நேரங்களில் வேலையில் ஈடுபடுவதனை பெற்றோர் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்வதனால் வீண் செலவுகள் குறைக்கப்பட்டு கல்விக்கான செலவினை அதிகரிக்க முடிவதுடன் மாணவர்களும் ஒழுங்காக பாடசாலை சென்று கல்வியை தொடர முடியும்.
3.3 சர்வதேச இடைவிலகல்:
சர்வதேச ரீதியாகப் பார்க்கும் போது கிட்டத்தட்ட 60 000 மாணவர்கள் ஆரம்ப காலங்களிலேயே வறுமையின் நிமித்தம் இடைவிலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3.4 இலங்கையில் இடைவிலகல்:
3.4.1 இலங்கை:
பாடசாலைக்கு அறவே செல்லாது விடுதல் இலங்கையில் பொவான ஒரு நிலைப்பாடாக இல்லாவிட்டலும் சமூகப்பொருளாதார அந்தஸ்தில் குறைந்த பின்தங்கிய பகுதிளை அது மிகக் கூடிய அளவில் காணப்படுகின்றது. இவ்வாறான பகுதிகள் குறிப்பிட்ட பிரதேசங்களுக்குள் அடங்குகின்றன. பெருந்தோட்டப்பகுதிகள், மிகப் பின்தங்கிய பிரதேச நகரங்களை அடுத்து வரும் சேரிப்பகுதிகள் ஆகிவற்றின் இவ்வாறான நிலைமையைக் காணலாம்.
பாடசாலையில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள் பொதுக்கல்வி முடிவடைய முன்னர் பாடசாலையை விட்டு விலகுதல் இடைவிலகுதல் எனப்படும். கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் மாணவர்கள் பல்வேறு காரணங்களால் இடைவிலகுகின்றனர். இதனால் இலங்கையின் கல்வி வளர்ச்சியில் பல்வேறு வகையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கையில் இலவசக் கல்வியை செயற்படுத்துவதற்காக நாட்டின் வருமானத்தில் பெருந்தொகைப் பணம் ஆண்டு தோறும் ஒதுக்கப்படுகின்றது. அவ்வாறு ஒதுக்குவது சகல மாணவர்களையும் கருத்தில் கொண்டேயாகும். ஆனால் பிள்ளைகள் கல்வியை பூர்த்தி செய்யாமல் இடையில் விலகுவதனால் மூலதனம் வீண்விரயம் செய்யப்படுகின்றது.
இலங்கையில் உள்ள எல்லா கல்வி மாவட்டங்களிலும் இடைவிலகியோர் காணப்படுகின்றனர். ஆனால் இடைவிலகியோர் தொகை மாவட்டத்திற்கு மாவட்டம் பொருளாதார நிலைக்கும் புவியியல் நிலைக்கும் நகர, கிராம அளவிற்கு ஏற்பவும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. 1982 / 83 ஆம் ஆண்டு கணிப்பின் படி மாணவர் தொகை அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் இடைவிலகியோர் மிகக் கூடியளவில் காணப்படுகின்றது. இரண்டாவது இடத்தில் இரத்தினபுரி மாவட்டமும், மூன்றாவது இடத்தில் காலி மாவட்டமும், நான்காவது இடத்தில் நுவரெலியா மாவட்டமும், ஐந்தாவது இடத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் காணப்படுகின்றது.
3.4.2 வடக்கு, கிழக்கு மாகாணம்:
இலங்கையைப் பொறுத்தவரை எமது சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுகினற வீதம் அதிகமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளிலே தான் இந்நிலை அதிகமாகக் காணப்படுகின்றது.இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வந்த அரசியல் நெருக்கடி இப்பிரச்சினை காரணமாக எழுந்த பல்வேறுப்பட்ட பிரச்சினைகளையடுத்து சிறுவர்களும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். சில சிறுவர்கள் கட்டாய வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு போதுமான கல்வி கற்பதற்கான சந்தர்ப்பம் இழக்க நேரிட்டுள்ளது. வடக்கிலே ஏற்பட்டுள்ள போர் சூழலினால் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படடுள்ளதோடு அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
போர்சூழலினால் கடந்த மூன்று தசாப்த காலமாக பல இலட்சக்கணக்கான மாணவர்கள் இடைவிலகியுள்ளனர். இப்பகுதியில் வாழும் சிறுவர்கள் காலாகாலமாக இடைவிலகி வருகின்றமை கண்கூடு. இப்பகுதியில் கல்வியை விட உயிரினைப் பாதுகாப்பதனையே கூடிய கவனம் செலுத்த வேண்டிய நிலையில் கல்வியில் கவனம் செலுத்த முடிவதில்லை.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாகம் செயலிழந்துள்ளதும் குறிப்பிப்பட வேண்டிய குறைபாடாகும். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தழிழ் பாடசாலைகள் நிர்வாக மட்டப் புறக்கணிப்புக்கு இலக்காகி வருவதும் கூடிய கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுவும் கூட இடைவிலகலுக்கு வழிவகுக்கின்றது.
3.5.3 மலையகம்:
மலையக மக்களிடையே காணப்படும் வறுமை, வேலையில்லாத் தாண்டவம் என்பன காரணமாக பல மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலக நேரிடுகின்றது.
அண்மையில் மலையக்த்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி பாடசாலை செல்லாமல் தவிர்க்கும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை 42 வீதமாக ஆண் பிள்ளைகளின் எண்ணிக்கை 20 வீதமாகக் காணப்படுகின்றது. பாடசாலை செல்லாத 10-17 வயதிற்கிடைப்பட்டோரின் எண்ணிக்கை இலங்கையில் அதிகமாக இருப்பதும் மலையகப் பகுதியினிலே என பதிவுசெய்யப்படடுள்ளதும் குறிப்பித்தக்கது.மலையகப் பாடசாலைகளில் மாணவர் தொகை வெகுவாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. இன்னும் பத்தாண்டுகளில் மாணவர் தொகை 40000 ஆல் வீழ்ச்சியடையும் என்னும் அதிர்ச்சித் தகவல்கள் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது.
மலையகத்தல் ஆண்பிள்ளைகளை விட பெண்பிள்ளைகளேகல்வியைப் பாதிக்கின்றது. ஏனெனில் மற்றவர்களின் சுகயீனம், தாய்மார்களின் பிள்ளைப்பேறு, விருந்தினர் வருகை, திருவிழாக்களின் போது சம்மந்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக பாடசாலை செல்வதை தடை செய்தல், வீட்டு வேலைகள் அனைத்தையும் தாயோடு பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தப்படுவதால் வீட்டில் படிக்க நேரமின்மை, விசேடமாக பெண்கள் பருவமடைந்ததும் சடங்கு சம்பிரதாயம் என்ற பேரில் மூன்று மாதங்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு மூன்று மாதங்கள் பாடசாலை செல்லாதவிடத்து பாடசாலையை விட்டு இடைவிலகிவிடுகின்றனர்.
3.5 இலங்கையில் இடைவிலகலும் பெண்களின் கல்வித் தரமும்:
இலங்கையில் செயற்படுத்தப்பட்டு வந்த இலவச, ஆரம்ப, நடுத்தர மற்றும் உயர்கல்வி போன்ற சாதகமான கல்விக் கொள்கைகள் கல்வி வாய்ப்புக்கள் துரிதமாக பெருகுவதற்கு வழி கோலின. இது அனேகமாக பொதுக்கல்வி பங்கேற்பில் ஆண், பெண் ஏற்றத்தாழ்வுகளை இல்லாதொழித்திருந்த போதிலும் கூட இலங்கை முழுமையான ஆரம்பக் கல்வியை சாதித்துக் கொள்ளவில்லை. அனைத்து சிறுவர்களையும் பொதுக் கல்வி முறையின் கீழ் எடுத்து வருவதிலான முன்னேற்றம் அண்மைய வருடங்களில் குறிப்பாக மிக மெதுவாகவே இடம் பெற்று வந்துள்ளது.
விலைவாசி உயர்வு, பாடசாலை வசதியின் பகிர்வில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், உயர் கல்விக்கான போதிய வாய்ப்பின்மை, பெண்களை குறிப்பிட்ட சில கலாசார ரீதியான பாடநெறிகளுக்கும், தொழில்களுக்கும் தள்ளிவிடும் பால் அடிப்படையிலான பாரபட்ச அணுகுமுறை என்பன கல்வியிலும் பயிற்சியிலும் பல்வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் இடைவிலக வழிவகுத்த காரணிகளாகும்.
எளிதில் சென்றடையக் கூடிய பாடசாலைகள் வசதியான தூரத்தில் இல்லாதிருத்தல் போன்ற நிலை ஆண்களைவிட பெண்கள் கூடுதலாக இடைவிலக வழிவகுக்கின்றன. பெற்றோர் தமது பெண் பிள்ளைகளை நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு பொதுவாக அனுமதிப்பதில்லை. மேலும் தனியார் விடுதிகளில் தங்கி படிப்பதற்கும் கூடுதலான அளவு இடமளிப்பதில்லை. பெண்கள் எளிதில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படக் கூடியதாக இருப்பது இதற்கான காரணமாகும்.
ஆரம்ப மற்றும் நடுத்தர பாடசாலைகளில் இருந்து கல்வியை இடைவிட்டுச் செல்வோர்களில் பெண்களின் விகிதம் உயர்வாக இருந்து வருகின்றது.
04. முடிவுரை
இலங்கையினைப் பொறுத்தவரையில் சிறுவர்களின் உரிமை மீறல்களும் அதனை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை இடைவிலகல்களும் காலா காலமாக குறிப்பிட்ட சில பகுதிகளில் இடம்பெற்று வருவது கண்கூடு. இடைவிலகுகின்ற மாணவர்களின் நலன் கருதி கூடுதலான வரை எம்மாலான முயற்சிகளை எடுப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. எனவே, பின்வரும் நடைமுறைகளை ஓரளவுக்கேனும் கடைப்பிடித்தல் சாலச் சிறந்ததாகும்.
பெற்றோர்கள் மத்தியில் கல்வி கற்பதில் உள்ள நன்மைகளை எடுத்துக் கூறுவதன் மூலம் பெற்றோர்களின் மேலதிக செலவைக் கட்டுப்படுத்தவும் இதனால் கல்விக்கு கூடிய தொகையை செலவிடவும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கான நல்லுறவை ஏற்படுத்தி பெற்றோர்களை பிள்ளைகளில் அக்கறை உள்ளவராக மாற்றுதல், மற்றும் பெற்றோர்கள் முடிந்தளவிற்கு பிள்ளைகளைக் கல்வி பயிலும் வயதில் வருமானம் உழைக்கும் தொழில்களை நாடிச் செல்வதில் ஆர்வத்தைக் குறைத்து இவர்களின் நலனில் தம்மை அர்ப்பணிப்பவராக மாற்றுதல். பாடசாலையில் உள்ள பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய வழிகோலுதல் வேண்டும்.
ஆசிரியர் வளப்பற்றாக்குறையை தீர்க்க தொண்டர் ஆசிரியர் அடிப்படையில் பாடசாலை வசதிக்கட்டுப்பணத்தில் ஊக்குவிப்புக்களை வழங்கி பொருத்தமானவர்களை அல்லது ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கலாம். அத்துடன் நகர்ப்புறங்களுக்கு ஆசிரியர் செல்வதைத் தடுக்கும் வகையில் ஒரு பாடசாலையில் குறித்த காலம் பணியாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தல். மற்றும் கணித, விஞ்ஞான, பட்டதாரி ஆசிரியர்களை குறிப்பாக இப்பிரதேசத்தை சேர்ந்தவர்களை அல்லது வேறு இடங்களில் இருந்து ஆசிரியர்களை சேவைக்கு அமர்த்துதல் வேண்டும்.
பாடசாலையை விட்டு இடைவிலகலை தவிர்க்கும் நோக்கில் சில கட்டாய நடவடிக்கைகளை கொண்டுவர வேண்டும். பாடசாலை விட்டு இடைவிலகுவோருக்கு முறைசாராக் கல்வியை வழங்க வேண்டும். இதற்கு அரசாங்க தொழிற்பயிற்சித் திணைக்களம், சிறு கைத்தொழில் திணைக்களம், தொழிநுட்பக் கல்லூரிகள் என்பன இம்மாணவர்கள் மீது கூடிய கவனம் எடுக்க வேண்டும். பாடத்திட்டங்களை மாற்றும் போது அதுபற்றி ஆசிரியர்களுக்கு முறையான விளக்கம் கொடுக்க வேண்டும். சேவைக்கால ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆழமாக விளக்கும் வகையில் நுட்ப முறைகளை கையாள வேண்டும். விவசாயம் அதிகமானோரால் மேற்கொள்ளப்படுவதால் பாடத்திட்டத்தில் விவசாயம் சம்மந்தமான படிப்பு புகுத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் நாடிச் செல்லும் சினிமா, தேவையல்லாத பிரச்சினைகள் என்பவற்றில் இருந்து நீக்கும் முகமாக கிராமங்களில் நூலகம், விளையாட்டு மைதானம் என்பவற்றை அமைக்க வேண்டும்.
மனிதர்களின் சிறந்த வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒன்றாக கல்வி காணப்படுகின்றது. எனவே இக்கல்வி பற்றியும் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் உலகின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள அறிஞர்கள் காலத்துக்குக் காலம் பல சிந்தனைக் கருத்துக்களை கூறியுள்ளனர். இக்கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்ந்து உலகிலுள்ள நாடுகள் இதற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றன. ஆகவே, சிறுவர்களின் முக்கிய உரிமையான கல்வி உரிமையை வழங்குவதில் எந்தவித பாராபட்சமும் காட்டாது அனைத்துச் சிறுவர்களுக்கும் சமனாக கல்வியை வழங்குதல் அவசியமாகும்.
(இணையம்.)