இனங்களுக்கிடையில் சகோதரத்துவத்துவத்தைக் கட்டியெழுப்பும் வகையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுவர்கள் கலந்து கொண்ட சிங்கள ஹிந்து புதுவருட விளையாட்டுப் போட்டி ஒன்று கொட்டுக்கச்சி நவோதயா பாடசாலையில் இடம்பெற்றது. இந்த இன நல்லிணக்கத்திற்கான விளையாட்டுப் போட்டிகள் புத்தளம் கல்வி வலயத்தின் சமாதான கல்விப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இந்நிகழ்வில் புத்தளம் இந்து மத்திய கல்லூரி மற்றும் மணல்குண்டு முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த இரு பாடாசலைகளின் மாணவர்களும் கொட்டுக்கச்சி நவோதயா பாடசாலை மாணவர்களால் மிகவும் உற்சாகமான முறையில் மலர் கொத்துக்கள் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். இந்த இன நல்லிணக்க புதுவருட விளையாட்டுப் போட்டிகளுக்கு பிரதம அதிதியாக புத்தளம் கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் டப்ளிவ். எஸ். பி. கே. விஜேசிங்க கலந்து கொண்டதோடு பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ. எச். எம். அர்ஜூன உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களின் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு ஒவ்வொரு இனங்களுக்குமான கலசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். இந்த சிறப்புமிகு நல்லிணக்க விளையாட்டுப் போட்டியை புத்தளம் கல்வி வலயத்தின் சமாதான கல்விப் பிரிவைச் சேர்ந்த பீ. ஏ. டப்ளிவ். பண்டாரவின் வழிநடாத்தலில் கொட்டுக்கச்சி நவோதயா பாடசாலை அதிபர் ஏ. எச். எம். பிரியந்த சமன் குமார தலைமையிலான பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மிகவும் ஆர்வத்துடன் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
எம். எஸ். முஸப்பிர்
மதுரங்குளி நிருபர்
12.05.2016