மதுரங்குளி, கடையாமோட்டையில் இயங்கும் அர்றஷீதிய்யா அரபுக்கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை முதல் (14/05/2016) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் பீ. எம். பைசல் முனீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா கடந்த 2008ம் ஆண்டில் இடம்பெற்றது. நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டாவது பட்டமளிப்பு விழாவின் போது நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த 59 பேர் மௌலவிப் பட்டங்களையும், 35 பேர் ஹாபிழ் பட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். எம். நவவி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், வட மேல் மாகாண சபை உறுப்பினர் என். டி.. எம். தாஹிர், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும் புத்தளம் காசிமிய்யா அரபிக் கல்லூரியின் அதிபருமான அப்துல்லாஹ் மஃமூத் ஆலிம், அக்கரைப்பற்று பிரதேச ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எஸ். எம். எம். சரீப், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எஸ். ஏ. எஹியா, ஏ. எச். எம். றியாஸ் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக ஜாமிய்யா நளீமிய்யாவின் பணிப்பாளர் சபை உறுப்பினரும், விரிவுரையாளருமான கலாநிதி ஏ.சி.அகார் முஹம்மது கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எம். எஸ். முஸப்பிர்
மதுரங்குளி நிருபர்
15.05.2016