மிகத்தீவிரமான கடலரிப்புக்ககுள்ளாகியிருக்கிறது ஒலுவில். ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பிற்பாடு இது உச்சத்தை தொட்டிருக்கிறது. ஒலுவில் மக்களின் வாழ்வாதாரம்,எதிர்காலம் மற்றும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் “அமைவிடம்சார் பௌதீக இருப்பு” என்பனவற்றை கேள்விக்குறியாக்கியிருக்கிறது இந்த கடலரிப்பு.
நான் பல்கலைக்கழகம் நுழைந்த போது இருந்த கரையோரத்தில் தற்போது சுமார் 2௦௦ மீற்றர்கள் அளவு கடல் உள்வாங்கியிருக்கிறது. தற்போதைய நிலைமையின் படி பல்கலைக்கழக வளாகத்திற்கும் கடலுக்கும் வெறும் 2௦௦ மீற்றர்கள் அளவிலான தூரமே எஞ்சியிருக்கிறது. இதன் பிறகும் இந்த அரிப்பு தடுக்கப்படவில்லையானால் அது நிச்சயம் பல்கலைக்கழகத்தின் ”பௌதீக இருப்பை” கேள்விக்குறியாக்கும்.
எதிர்காலத்தில் எப்படியாவது இப்பல்கலைக்கழகத்தை அம்பாறைக்கு மாற்றி விட வேண்டும் எனும் நீண்ட காலத்திட்டமிடல் ஒன்றுடன் சிங்கள மாணவர்களும் சில சிங்கள அரசியல் வாதிகளும் இயங்கி வருவதை நம்மில் பலர் அறியாமல் இல்லை. அனால் இத்திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை தான் என்றாலும், பல்கலைக்கழக வளாகத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் இந்த கடலரிப்பானது காலப்போக்கில் அதை சாத்தியமாக்கிவிடும் வாய்ப்பு ஓரளவுக்கு இருக்கிறது என்பதையும் நாம் மனதிற்கொள்ள வேண்டும். அவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறுமாக இருந்தால் முஸ்லிம்களின் தனித்துவமாக விளங்கும் இப்பல்கலைக்கழகத்தில் நமது தனித்துவம் இல்லாமல் போகும் என்பதை நான் கூறி நீங்கள் அறிய வேண்டியது இல்லை.
இவ்வாறாக ஒரு கிராமத்தினதும் ஒரு பல்கலைக்கழகத்தினதும் இருப்பு கேள்விக்குறியாகி நிர்கதிக்குள்ளாகியிருக்கும் இந்நிலையில் நமது அரசியல் வாதிகள் இதையும் அரசியலாக்கி அரசியல் இலாபம் தேடும் அவல நிலையை பார்க்கும் போது மிகுந்த கவலை ஏற்படுகிறது இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதியினால் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் இருவரையும் உள்ளடக்கிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழுவானது ஒரு ஆரோக்கியமான முன்நகர்வு தான். இருந்தபோதிலும் “நீயா நானா” என்கிற அரசியல் போட்டிகளை விட்டுவிட்டு இரண்டு தரப்பும் ஒன்றிணைந்து இப்பிரச்சினையின் வீரியத்தை அரசாங்கத்திற்கு அழுத்திக் கூறி பாரிய திட்டமிடலுடன் உறுதியான ஒரு அணைத்தடுப்பை ஏற்படுத்துவதனூடாகத் தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமே ஒழிய, அங்கே கொஞ்சமும் இங்கே கொஞ்சமுமாக கற்களைக் கொண்டு வந்து கொட்டுவதனூடாக இதனை தடுத்துவிட முடியாது.
ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் கொட்டப்பட்ட கற் குவியல்களைத் தாண்டி பல மீற்றர்கள் கடல் வந்துவிட்டது. அத்துடன் சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் கரையோரத்தை ஒட்டி அடுக்கப்பட்ட கற்களையும் தாண்டி கடல் முன்னேற முயற்சிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எனவே சிறிய கற்களை கொட்டுவதனூடாக தற்காலிகமாக “அரிப்பினை” மட்டுமே தடுக்க முடியும். புவியியலாளர்கள் புத்திஜீவிகள் மற்றும் துறைசார் வல்லுனர்களை உள்ளடக்கிய குழுவொன்று களநிலவரத்தை உன்னிப்பாக ஆராய்ந்து இதற்கான உரிய தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும்.
Oluvil.
எனவே இலங்கையில் முஸ்லிம் மாணவர்களை பெரும்பானமையாகக் கொண்ட ஒரேயொரு பல்கலைக்கழகமான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அமைவிடம் மற்றும் ஒலுவில் கிராமத்தின் எதிர்காலம் என்பவற்றை தீர்மானிக்கக் காத்திருக்கும் இந்தக் கடலரிப்புக்கான தடுப்புத் திட்டங்கள் வினைத்திறனாக அமைய அனைவரும் உங்கள் பிரார்த்தனைகளில் இவ்விடயத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.