2018ஆம் ஆண்டுக்கான பல்வகைமை விசா சீட்டிழுப்பு (கிறீன் கார்ட் லொத்தர்) நிகழ்ச்சித்திட்டத்துக்காக, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04) இரவு 9.30 மணிமுதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி இரவு 9.30 மணிவரை விண்ணப்பிக்க முடியுமென, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பதில் கவுன்சிலர் டேவிட் வாக்னர் தெரிவித்தார்.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையத்தில், நேற்று (04) இடம்பெற்றது. அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
“இந்த வருடம், இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளிலிருந்து எழுந்தமானமாகத் தெரிவுசெய்யப்படுவோர், 2017ஆம் ஆண்டு நேர்முகத்தேர்வுக்கு தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு 2018ஆம் ஆண்டிலேயே கிறீன் கார்ட் வழங்கப்படும். இது 2018ஆம் ஆண்டுக்கான சீட்டிழுப்பு என அழைக்கப்படுகிறது.
தகுதிபெற்றுள்ள நாடுகளின் பிரஜைகள், இந்த லொத்தருக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான தகைமைகளாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், ஆங்கிலம் தவிர்ந்த மூன்று பாடங்களில் சித்தி அல்லது பட்டம் பெற்றவர் அல்லது ஏதாவதொரு வேலையில் இரண்டு வருடங்கள் பணியாற்றியிருத்தல் என்பன காணப்படுகின்றன.
இதுதொடர்பான மேலதிக விவரங்களை அறிய, lk.usembassy.gov/visas/immigrant-visas/diversity-visa/ என்ற இணையத்தள முகவரிக்குச் செல்லவும். சீட்டிழுப்புக்கு விண்ணப்பிதற்காக www.dvlottery.state.gov என்ற இணையத்தளத்துக்கு செல்லவும்.