'சூரிய ஒளியற்ற, இயற்கை காற்றோட்ட வசதியற்ற அடைக்கப்பட்ட ஜன்னல்கள், கதவுகள் கொண்டதாக இருக்கின்றன' பெரும்பாலான பச்சிளம் குழந்தைகள் வளரும் அறைகள். அங்கு ஏசி(air conditioner) காற்றுதான் குழந்தைகளின் சுவாச ஆதாரமாக இருக்கிறது. பிறந்த சில மாதங்கள், சில வருட சூழலிலேயே செயற்கையாக குளிரூட்டப்பட்ட ஏசி காற்றினைச் சுவாசிப்பது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதுதானா என பல பெற்றோர்களுக்கும் எழக்கூடிய சந்தேகத்திற்கு பதிலளிக்கிறார், பவானியைச் சேர்ந்த அரசு பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன்.
* அதிக வெப்பநிலை சூழலில் நாம், அதிலிருந்து விடுபட்டு குளிர்ந்த சூழலை ஏற்படுத்திக்கொள்ள ஏசியை பயன்படுத்துகிறோம். அப்படி பயன்படுத்தும் ஏசியை 26-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்து பயன்படுத்தும்போது, பெரியவர்கள், குழந்தைகள் என யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வராது.
* அதேநேரம் வெயில் அதிகமாக இருக்கிறது என 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் குறைவாக ஏசியை வைக்கும்போது, குளிர்பிரதேசத்தில் இருப்பதுபோன்ற சூழல் இருக்கும். இதுபோன்ற சூழலை பெரியவர்களால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், குழந்தையால் அந்த குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாது. அதனை அவர்களால் வெளிப்படுத்தவும் முடியாது. திடீரென உடல் நடுக்கம், பசி உணர்வு குறைந்து தூங்கிக்கொண்டே இருப்பது போன்ற அறிகுறிகள்தான் குழந்தையிடம் இருந்து தெரியும்.