மலையக சமூக ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் புறக்கோட்டை ஐந்து லாம்பு சந்திப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைநகர் கொழும்பில் பணிபுரியும் பெரும் எண்ணிக்கையிலான ஆண்களும் பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் உறவுகளுக்காகக் குரல் எழுப்பினார்கள்.
இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தினக்கூலியை ரூ. 730-யாக அதிகரிக்கத் தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும் கூட்டு ஓப்பந்தத் தொழிற்சங்களுக்கும் இடையே இணக்கம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரு தரப்பினருக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படலாம் என்று தொழில் அமைச்சும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது
அதனை நிராகரித்து தொழிலாளர்களின் போராட்டங்கள் இன்று வெள்ளிக்கிழமையும் மலையகத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றுள்ளன.
போராட்டத்தை கைவிடுமாறு அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தும் அவர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன.
தற்போது வழங்கப்படுகின்ற ரூ. 620 சம்பளம் ரூ. 1000-மாக அதிகரிக்கப்பட வேண்டும். புதிய கூட்டு ஓப்பந்தம் நடைமுறைக்கு வரும் 01.04.2015 தொடக்கம் நிலுவையுடன் அந்த அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடருகின்றன.
தங்களின் இந்த இலக்கை அடைவதற்கு மலையக அரசியல் தலைமைகள் மற்றும் தொழிற்சங்க தலைமைகள் ஒருமித்து செயல்பட முன் வர வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் கோரிக்கை வலியுறுத்துகிறது.