மாத்தளை அரபுக் கல்லூரி பட்டமளிப்பு
விழாவில் அமைச்சர் றிசாத்.
அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால்
சமுதாய நலனுக்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளும், உலமாக்களும், புத்திஜீவிகளும்,
இணைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளதாகவும், அகில இலங்கை ஜம்இய்யதுல்
உலமா இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாரிய கடப்பாட்டைக்
கொண்டிருப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மாத்தளை, உக்குவெல உம்மு சலாமா பெண்கள்
அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக்
கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்
ரிஸ்வி முப்தி மற்றும் இஸ்லாமியப் பெரியார்கள், உலமாக்கள் கலந்துகொண்ட இந்த
நிகழ்வில் அமைச்சர் உரையாற்றியதாவது,
அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறை
சீர்திருத்தம், அதிகாரப் பகிர்வு ஆகியவை தொடர்பில் முனைப்பான முயற்சிகள்
மேற்கொள்ளப்படும் இந்தக் காலகட்டத்தில், முஸ்லிம்களுக்கு இந்த விடயங்களால் எந்த
ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதில், அரசியல்வாதிகளாகிய நாங்கள் தெளிவாக
இருக்கின்றோம். எனினும், எல்லோரும் இணைந்து குரல் கொடுப்பதன் மூலமே நமது
சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அமெரிக்கா, இந்தியா, பிரித்தானிய நாட்டுத்
தலைவர்களும், சர்வதேச நாடுகளும் இலங்கையின் அதிகாரப்பகிர்விலே உன்னிப்பான கவனம்
செலுத்தி வருகின்றன. எனினும், அவர்களின் அழுத்தங்கள் மூலம் நடைபெறப்போகும்
மாற்றங்களால் முஸ்லிம் சமூகத்துக்கு நன்மைகள் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியே.
ஏனெனில், சர்வதேசம் எந்தக் காலத்திலும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில்
கரிசனை கொண்டதில்லை. இந்த நிலையில் அரபுலக நாடுகளோ, முஸ்லிம் நாடுகளோ எம்மைப்
பற்றி கவனத்திற்கொள்வதுமில்லை.
நமது சமுதாயத்தின் அரசியல் பலம்,
பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மற்றும் இன்னோரன்ன அம்சங்கள் சிதைந்து விடாமல் இருப்பதற்கான
முயற்சிகளில் நாம் ஈடுபட்டு, நமது சமுதாயம் ஆபத்துக்கு ஆளாகிவிடாத வகையில் முன்னேற்பாடுகளை
மேற்கொள்ள வேண்டும்.
ஜம்இய்யதுல் உலமா கடந்த காலங்களில் நமது
சமுதாயத்துக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து, அதற்குத் தலைமைதாங்கி,
அதில் வெற்றியும் கண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஜம்இய்யதுல் உலமா தனது ஆளுமையை
நிரூபித்துக் காட்டியது போல, தற்போதைய இக்கட்டான காலகட்டத்திலும் இந்தப் பணியை செவ்வனே
மேற்கொள்ளுமென நான் நம்புகின்றேன்.
இன்று உலக நாடுகளிலே ஏகப்பட்ட
பிரச்சினைகள். அநேகமான முஸ்லிம் நாடுகளிலே குண்டுவெடிப்புக்களும், போராட்டங்களுமே
இடம்பெற்று வருகின். அந்த நாடுகள் செல்வத்தால் மேலோங்கி உள்ள போதும், அந்த நாட்டு
மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். மேற்கத்தேய நாடுகள் குறிப்பாக, இஸ்ரேலிய
சியோனிசவாதிகள் தமது ஊடகப் பலத்தையும், ஏனைய வளங்களையும் பிரயோகித்து முஸ்லிம் நாடுகளுக்குள்
குழப்பங்களை உருவாக்கி வருகின்றனர். “ஜிஹாத்” என்ற புனிதமான சொல்லைத் திரிபுபடுத்தி
முஸ்லிம்கள் போராட்டக்காரர்கள், யுத்த வெறியர்கள் என்ற ஓர் எண்ணத்தை உலகிலே
ஏற்படுத்தி, முஸ்லிம்களுக்கு பல்வேறு கஷ்டங்களை உருவாக்கி வருகின்றனர். மிகவும்
நுணுக்கமாக, சூட்சுமமாக இவ்வாறான காரியங்களை அவர்கள் திட்டமிட்டு மேற்கொள்கின்றனர்.
முஸ்லிம் நாடுகளில் வாழும் மக்களின்
பண்பாட்டினை, பழக்கவழக்கங்களை அறிந்து, பலர் இஸ்லாத்தை தழுவுவதை நாம்
பார்க்கின்றோம். ஆனால், இலங்கையில் வாழும் முஸ்லிம்களில் சிலர் இந்த நிலைக்கு மாற்றமாக
செயற்படுகின்றனர். இதனால் பிற சமூகத்தினர் எம்மை வேற்றுக்கண்ணோடு பார்க்கின்றனர்.
தொழிலில், வியாபாரத்தில் ஏனைய பல்வேறு துறைகளிலும் நாம் நேர்மையுடனும்,
நாணயத்துடனும் செயற்பட்டால் பிற மதத்தினர் எம்மைப் பின்பற்றி முன்னுதாரணமாக
செயற்படுவர். பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டிலே நாம் புரிந்துணர்வுடனும்,
விட்டுக்கொடுப்புடனும் செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
அரபுக் கல்லூரிகள் மற்றும் மதரசாக்கள்
நடத்துவது என்பது இலகுவான காரியம் அல்ல. சில மதராசாக்கள் எடுத்த எடுப்பிலே
திட்டமிடப்படாமல், ஆரம்பிக்கப்படுவதால் அதே வேகத்திலே மூடவேண்டிய துர்ப்பாக்கிய
நிலை ஏற்படுவதை காண்கின்றோம். காதியானிகளும், வேறுபல நாடுகளிலிருந்து இங்கு
வருபவர்களும், கலாசாரத் திணைக்களத்திலும், பிரதேச சபைகளிலும் எவ்வாறோ தம்மைப்
பதிவு செய்துவிட்டு மதரசாக்களை ஆரம்பிக்கும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் மதரசாக்களை ஆரம்பிக்கும்போது, ஜம்இய்யதுல் உலமாவின்
அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான ஒரு சட்டத்தை, நாம் உருவாக்க வேண்டிய தேவை
ஏற்பட்டிருக்கின்றது. இலங்கை முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட
உயரிய சபையாக ஜம்இய்யதுல் உலமா திகழ்வதால் அந்தச் சபை, சமுதாயத்தை மிக நேரிய
வழியில் நடத்தும் பொறுப்பை அதிகரிக்க வேண்டுமென நான் உலமா சபைத் தலைவரிடம், இந்த
சந்தர்ப்பத்தில் அன்பாய் வேண்டுகின்றேன்.
மதராசக்களுக்கு பொதுவான, பொருத்தமான ஒரு
பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியை ஜம்இய்யதுல் உலமா மேற்கொள்ள
வேண்டுமென, நான் கோரிக்கை விடுக்கின்றேன். உக்குவெல உம்மு சலாமா பெண்கள்
அரபுக்கல்லூரியை நடாத்தும் மௌலவி ரயீஸ் அவர்கள், அவரது தந்தையின் வழியில் மிகவும்
சிறப்பாக இந்தப் பணியை மேற்கொள்கின்றார்.
இன்று மதராசாக்களைப் பற்றி இனவாதிகள் தவறான
பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். பெண்களின் இஸ்லாமிய உடை பற்றி அவர்கள்
பிழையான கருத்தைப் பரப்பி வருகின்றனர். பாரம்பரிய இஸ்லாமியர்கள், புதிய
இஸ்லாமியர்கள் என்றெல்லாம் எம்மை வகைப்படுத்தி பிழையான கதையைக் கூறி வருகின்றனர்.
இஸ்லாமிய அழைப்புப் பணிகளால், முஸ்லிம்கள் சிறந்த
முறையிலும், ஒழுக்கமான முறையிலும் வாழுவதனால்தான், இவ்வாறான பிரச்சினைகளை அவர்கள்
ஏற்படுத்துகின்றனர். நமது சமூகத்தைச் சேர்ந்த சிலர் தங்களது அற்ப சொற்ப இலாபங்களுக்காக
அவர்களுடன் சேர்ந்து, எங்களைக் காட்டிக்கொடுக்கும் ஒரு கவலையான விஷயத்தையும் நாம்
காண்கின்றோம்.
இஸ்லாம் வலியுறுத்திய சகாத் வரியை நாம்
முறையாக வழங்கினால், நமது சமூகத்திலே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்கலாம்.
இந்த விடயத்திலும் முஸ்லிம்களாகிய நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டுமெனவும்
அமைச்சர் றிசாத் கூறினார்.
அமைச்சரின் ஊடகப்பிரிவு