Monday, October 3, 2016

கிழக்கு மாகாண 45 உள்ளூராட்சி மன்ற நிருவாகத்துக்குள்ளிருக்கும் ஏழை மக்களுக்கு 2,250 வீடுகள் தேவை -முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய குடும்பங்களுடன் வாழும் கிழக்கு மாகாண மக்களுக்கு வீடுகள் தேவையாக உள்ளதுடன்,  இதனை அரசாங்கம் பாராபட்சமின்றி நிறைவேற்ற வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார். 

உள்ளுராட்சிமன்றம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அலுவலர்களுடனான சந்திப்பு ஏறாவூரில் இடம்பெற்ற போதே இஅவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

 அங்கு  அவர் மேலும் தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புக்கான தேவை இருந்தும்,  அதனை மத்திய அரசாங்கம் நிறைவேற்றாத  குறைபாட்டை நாம்; சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. யுத்தத்துக்குப் பின்னரான மீள்குடியேற்றம் கூட கிழக்கு மாகாணத்தில் முழுமையாகவும் திருப்தியாகவும் இடம்பெறவில்லை' என்றார்.   'யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அல்லது ஏனைய  பாதிப்புக்களுக்கு உள்ளான மக்களில் எத்தனையோ பேர், இன்னமும் அதற்கான நிவாரணத்தைப் பெற முடியாத நிலையில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒரு சில குடும்பங்கள், சுயமுயற்சியில் தம்மை மறுசீரமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். 

மேலும், யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட இம்மாகாண மக்களுக்கு மத்திய அரசாங்கம் மூலமாக பாரிய ஒதுக்கீட்டுத் திட்டம் இன்னமும் அமுல்படுத்தப்படாமை வருத்தமளிக்கிறது. நாம் எமது மாகாண சபை ஊடாக ஒவ்வொரு உள்ளுராட்சிமன்ற நிர்வாகப் பிரிவிலும் வீட்டுத்திட்டத்தை அமைப்பதற்குரிய நிதி ஒதுக்கீட்டைப்; பெறுவதற்கான வழிவகையைச் செய்கின்றோம். இது கைகூடினால், அடுத்த ஆண்டு ஒவ்வொரு உள்ளுராட்சிமன்றப் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 50 வீடுகளையாவது நிர்மாணித்தால், இம்மாகாணாத்திலுள்ள 45 உள்ளூராட்சி நிர்வாகங்களிலும் மொத்தமாக 2,250 வீடுகளை ஏழை மக்களுக்கு நிர்மாணித்துக் கொடுக்க முடியும்.

 கிழக்கு மாகாணத்தை முன்னேற்றுவதற்காக நாம் பரிந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் கரிசனையாக உள்ளார்கள். அதிகமான நிதி ஒதுக்கீடுகளைச் செய்து வருகின்றார்கள்' எனவும் அவர் கூறினார்.




Disqus Comments