Wednesday, December 14, 2016

மாகாணங்களுக்கான நிதியொதுக்கீடு எழுத்துக்களில் மாத்திரமே உள்ளது-நஸீா் அஹமட்

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மாகாண சபைகளுக்கான நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளமை சரியானதே என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.

அத்துடன் நிதியமைச்சரது இந்தக் கருத்தினால் அனைத்து மாகாண சபைகளும் பல்வேறு காரணங்களினால் பாரியநெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன.

இம்முறை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அனைத்து மாகாணங்களுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டுஒதுக்கப்பட்ட நிதியில் 46 வீதம் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு கிழக்குமாகாணத்தின் அபிவிருத்திக்கு மூவாயிரத்து 297 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்ட போதும் 2017 ஆம் ஆண்டுக்கு 1544மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளுக்கு குறைக்கப்பட்ட நிதியை மத்திய அமைச்சின் அமைச்சுக்களுக்கு அதிகரித்து வழங்கியதன்மூலம் சமப்படுத்தியுள்ளதாகவும் இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்ட நிதியில் மாகாண சபை உறுப்பினர்கள் வெளிநாட்டுபயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் வீண் செலவு செய்துள்ளதாக கௌரவ நிதியமைச்சர் ரவி கருணாநாயக்ககுற்றம் சுமத்தியிருந்தார்.

கௌரவ நிதியமைச்சர் அவர்களுக்கு கௌரவத்துடன் மேற்கூறிய விடயங்கள் தொடர்பில் சில விடயங்களைசுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்தக் குற்றச்சாட்டை பொதுமைப்படுத்த முடியாது என்பதுடன் தனிப்பட்ட ரீதியில் நான் அறிந்த வகையில் கிழக்குமாகாண சபையின் எந்தவாரு உறுப்பினரும் மாகாண சபை நிதியை விரயப்படுத்தி வௌிநாட்டுப் பயணங்களைமேற்கொள்ளவில்லை என்பதுடன் பணத்தை வீண் செலவு செய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நிதிக் மோசடி விசாரணைப் பிரிவு, குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் மோசடிகளை விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றினூடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் பெரும்பாலும் அரசியல்வாதிகள் மற்றும் கடந்த அரசாங்கத்தின் அதிகாரத்துவவாதிகளுக்கு எதிராகவேமுன்னெடுக்கப்பட்டிருந்ததன என்பதை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.

குறித்த நபர்கள் தவறாக அரச நிதியை பயன்படுத்தியமை, நிதிக் கையாடல் மற்றும் பில்லியன் கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே அத்தனை நிதிக்குற்றங்களும் மத்திய அரசின் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலேயேமேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுடன் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வித குற்றச்சாட்டுக்களும்சுமத்தப்படவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆகவே மாகாண சபைகளுக்கான நிதியை குறைப்பதற்கு கௌரவ நிதியிமைச்சர் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் ஆதாரமற்ற நொண்டிச்சாட்டுக்களாகவே கொள்ள வேண்டியுள்ளது என்பதுடன் இதனை மாகாண ​சபைகளை செயற்திறன் அற்றதாக்கும் முயற்சியாகவும் கருத வேண்டியுள்ளது.

மாகாண சபைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் மற்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான முழு அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் கிழக்கு மாகாணமக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் உறுதியாகவுள்ளனர். எவ்வாறாயினும் மாகாண சபைகளுக்கு போதிய நிதிவழங்காமல் முழுமையான அதிகாரப் பகிர்வு என்பது அசாத்தியமான விடயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் அமைச்சுக்களினூடாக கடந்த மூன்று தசாப்தங்களாக ஒதுக்கப்பட்ட நிதியை விட குறைவான நிதியையே மாகண சபைகள் பெற்றுவந்துள்ளமை நிதர்சனம், அது மாத்திரமன்றி மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டநிதி வருட இறுதியில் மீண்டும் திறைசேரிக்கு திரும்பி்ச் செல்லும் நிலையிமையினால் மாகாண சபைகளுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திராணியில்லை என்ற கருத்து முன்வைக்கப்படலாம். ஆனால் கிழக்கில் அதற்கான நிலைமை நேர்மாற்றமாக இருக்கின்றது. திறைசேரியினால் முன் பணம் செலுத்தப்படாமல்மற்றும் வேறு சில காரணங்களுக்காக வருட இறுதியில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிறைவடைந்து எம்மிடம்பணம் செலுத்த வேண்டிய பல்லாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான பற்றுச் சீட்டுக்களே காணப்படுகின்றன.

உதாரணமாக இந்த வருடத்தை எடுத்துக் கொண்டால் இந்த வருடத்திற்கான முன்பணத்தை ஜூன் மாதமே பெற்றுக்கொண்டோம். பின்னர் எம்மிடம் 1200 மில்லியன் ரூபாய்க்கான பற்றுச் சீட்டுக்கள் உள்ளமையினால் அதற்கானபணத்தை உடனே செலுத்த வேண்டும் என நான் கோரியமையினால் கடந்த நவம்பர் மாதம் 500 மில்லியன் ரூபாமாத்திரம் எமக்கு செலுத்தப்பட்டது. எனவே மாகாணங்களுக்கான நிதி வழங்கப்படாமல் நிதியொதுக்கீடு எழுத்துக்களில் மாத்திரம் உள்ளதால் மாகாணங்களுக்கு உரிய நன்மையை பெற்றுக் கொள்ள முடிவதில்லை என்பதைசுட்டிக்காட்ட விரும்புகின்றறேன்.

இறுதியாக கிழக்கு மாகாண மக்கள் சார்பாக நான் அரசாங்கத்திடம் ஒரு விடயத்தை கேட்டுக்கொள்கின்றேன். அரசாங்கம் இதய சுத்தியுடன் அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தில் நம்பிக்கை கொண்டிருக்குமேயானால் மாகாண சபைகளுக்கான நிதியை நேரடியாக மாகாணங்களுக்கு வழங்க முன் வரவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

மாகாண சபைகளுக்கு தாக்கம் செலுத்தும் விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கே வழங்க வேண்டும் என்ற கொள்கையை மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும் ஆனால் இன்று அதற்கு மாற்றமாகவே இடம்பெறுகின்றது. எவ்வாறாயினும் மாகாண மக்களின் உண்மையான தேவையினை அறிந்து மாவட்ட மற்றும் இன சமநிலையினைப் பேணி திறம்பட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான திராணி மாகாண சபைகளிடமே உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஹாபிஸ் நசீர் அஹமட்

கிழக்கு மாகாண முதலமைச்சர்
Disqus Comments