ஐந்தறிவு கொண்ட மிருகங்கள், பறவைகள் தமது இனங்களைக் கட்டிக்காப்பதில் எடுக்கும் முயற்சிகளிலிருந்தும் அதீத அக்கறையிலிருந்தும் ஆறறிவு கொண்ட மனிதன் நிறையவே படிப்பினைகள் பெறவேண்டியுள்ளது.
பகுத்தறிவுள்ள மனிதன் இனம்,நிறம்,மொழி,பிரதேசம்,தேசி யம் என பிரிவுபட்டு ஒரு சாரார் மற்றுமொரு சாராரை கொன்று குவிப்பதில் முழு மூச்சாக செயற்படுகின்றனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.சர்வதேச நாடுகள் ஒருமித்து பல சட்டதிட்டங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் உடன்பட்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட போதும்,நாடுகளுக்கிடையில் காணப்படும் அரசியல் உறவுகள் இருந்த போதும்,ஒவ்வொரு நாட்டிலும் மனித உரிமைகள் ஆணைக் குழுக்கள்,மற்றும் இணக்கப்பாட்டு சபைகள் அமைக்கப்பட்ட போதும் இவை ஒன்றினால் கூட ஆங்காங்கே நடைபெறும் இனக் கொலைகளை,இன சுத்திகரிப்புகளை தடுக்கமுடியாதுள்ளன என்பது தான் நிதர்சனம்.இவை அனைத்தும் ஓரளவேனும் நிர்வாக நடவடிக்கைகளை சரியாக செய்வதாக தெரிந்தாலும் உண்மையில் இவை பெயரளவில் இயங்கும் அமைப்புக்கள் என்றால் மிகையாகாது.
ஒரு நாட்டின் இறையான்மையில் தலையிடக்கூடாது என கூறிக்கொண்டு பயங்கரவாதம்,ஆயுதம் களைதல் போன்ற நொண்டிக் காரணங்களை சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்து முஸ்லிம் நாடுகளில் உட்புகுந்து சிறுவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகதிற்குட்படுத்தி பெண்களை கற்பலித்து கட்டிடங்களை தகர்த்தெறிந்து வளங்களை சூறையாடி நாடுகளை ஆக்கிரமிப்பது தான் ஏகாதிபத்திய அமெரிக்கா அறைகூவல் விடுக்கும் உலக சமாதானமா?.அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு நாடு என்பதால் இச்சபை உருவாக்கப்பட்ட தோக்கத்தை புறந்தள்ளி சர்வதேசத்திற்கு பல வெளிப்படையான மழுப்புக் காரணங்களை தெரிவித்துக் கொண்டு உள்ளால் ஆக்கிரமிப்பையும் அதிகாரத்தையும் இலக்காக செயற்பட்டு நாடுகளை ஆக்கிரமித்து தனது அதிகாரங்களுக்கு அவை கட்டுப்பட வேண்டும் என ஆதிக்கம் செலுத்துவது எந்தவகையில் நியாயமாகும்?
மனித உரிமைகளுக்கு நிறுவப்பட்ட அனைத்து சபைகளும் சர்வதிகாரத்திற்கு முன் செயலிழந்து கை கட்டி வேடிக்கை பார்க்கின்றனவே தவிர இவை ஒன்றால் கூட எந்த பயனுமில்லை என்றே கூறத் தோன்றுகிறது;ஏனெனில் பலஸ்தீன்,சிரியா,கஷ்மீர்,பர்மா, ஈராக் போன்ற நாடுகளில் மக்கள் ஈன இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடமைகள் அபகரிக்கப்படும் நிலையைக் காணுகையில் மேற்குறித்த மனித உரிமைகள் சபைகள்,ஆணைக் குழுக்கள்,குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை இருப்பதில் என்ன பயனிருக்கின்றது?தொழில்நுட்பம், அறிவியல் முன்னேற்றமடைந்த இக்காலத்தில் கூட இந்தியா போன்ற நாடுகளில் சாதி வாதம் குறைந்தபாடில்லை.தலித்,பறையன் போன்று கீழ் சாதிகளாக மக்கள் மக்களையே தரம் பிரித்து அவர்களுக்கு எவ்வித உரிமைகளையும் வழங்காது,பகிரங்கமாக அடக்கியொடுக்குவதை மனிதமற்ற மனிதன் கண்டு புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் பதிவேற்றி மகிழ்வடைவது யாவரும் அறிந்ததே.நிதர்சனமாக கூறுமிடத்து இத்தலித் சாதி மக்களை மனித இனமாகக் கூட மதிப்பதில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.
தென்னாசிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் மக்கள் அந்தந்த நாடுகளில் இனத்துவேசத்திற்கு உள்ளாக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்படுவதை நாளாந்தம் நாம் செய்திகள் வாயிலாக அறிந்து வருகிறோம்,எப்பொழுது முகநூல்,வட்ஸ்அப்,டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை திறந்தாலும் அங்கு இனப்படுகொலைகளாகவே செய்திகள் மலிந்து நிறைந்து காணப்படுகின்றன.அதிகாரமுள்ள வர்க்கத்தினர் அதிகாரமற்ற வர்க்கத்தினரை அடக்கியாள்வதை தான் கௌரவம்,பெருமை என நினைத்து மனித இனத்தை அழித்து வருகின்றனர்.
தாயின் வயிற்றிலும் பிறக்கும் பொழுதும் சுதந்திரமாக இருக்கும் மனிதன் வாழ்கின்ற காலத்தில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு கல் நெஞ்சமுள்ள மற்றுமொரு மனிதனுக்கு அடிமைப்பட்டு நடப்பது தான் ஆறறிவுள்ள மனிதனது பரிதாப நிலை.பறவைகள்,மிருகங்களை ஒப்பிடுகையில் தன் இனத்தோடு நிம்மதியாக வாழ்க்கை நடாத்துவதை நன்றாக அவதானிக்க முடிகின்றது.தனது இனத்தை அழித்து அதன் சடலங்களை தீ மூட்டி குளிர் காயும் மனிதனை விட ஐந்தறிவுள்ள ஜீவன்கள் எவ்வளவோ மேலானவை!
மொத்ததில் வரட்டு கௌரவம்,பொறாமை,இனத்துவேச சிந்தனைகள் போன்ற தீய குணங்கள் தான் மனிதனது இயற்கையான அழகிய குணங்களை விட்டும் அவனை தூரம் தள்ளி அதலபாதாளத்தில் வீழ்த்தி விடுகின்றன,ஆதலால் மனிதன் மற்றவனை கொலை செய்வதில் வெறிபிடித்து அலைகிறான்.
எனவே நாம் எம்மைப் போன்ற மற்ற மனிதர்களை மதித்து உணர்வுகளைப் பேணி உரிமைகளைக் கொடுத்து சுதந்திரத்தை வழங்கி சிறந்த எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்வோம்.
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியா புரம்-பாலாவி