(JM) மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பில் சிக்கி, நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான குரங்குகள் உயிரை மாய்ப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தென் மாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக, மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை மகிந்த ராஜபக்ச சீனாவின் உதவியுடன் கட்டியுள்ளார்.
இந்த விமான நிலைய கட்டுமானத்தினால், பறவைகள், மயில்கள், முதலைகள், யானைகள், போன்றவற்றின் வாழ்விடங்கள் இழக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்த விமான நிலையத்தினால் குரங்குகள் நாளாந்தம் பெருமளவில் உயிரிழந்து வருவதாகவும், இதுவரை பல நூற்றுக்கணக்கான குரங்குகள் உயிரைக் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாந்தோட்டையில் இருந்து மத்தல விமான நிலையத்துக்காக - 33 ஆயிரம் வாட்ஸ் திறனுள்ள உயர் அழுத்த மின்சார இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைப்பதற்காக, இந்த இணைப்பு சரணாலயம் வழியாக கொடுக்கப்பட்டுள்ளது.
சரணாலயப் பகுதியில் 13 கி.மீ வரை அமைக்கப்பட்டுள்ள இந்த மின்சார இணைப்புகளில் பாயும் உயர் அழுத்த மின்சாரத்தை அறியாமல், குரங்குகள் அவற்றின் மீது ஏறித் தாவுகின்றன.
இதனால் நாளன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான குரங்குகள் உயிரிழந்து வருகின்றன.
ஒவ்வொரு முறையும் குரங்கு மின்சாரத்தினால் தாக்கப்படும் போதும், விமான நிலையத்துக்கான மின்சாரம் சில நிமிடங்களுக்கு தடைப்படுகிறது.
மின்சார இணைப்பு வழங்கப்பட்டதில் இருந்து விமான நிலையத்துக்கான மின்சாரம் நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 தடவைகள் வரை தடைப்படுகிறது.
இதனால் விமான நிலையத்தில் உள்ள உயர்திறன் கொண்ட ரேடர் கருவி பாதிக்கப்படுகிறது. மார்ச் 18ம் நாள் தொடக்கம் நாளாந்தம் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், விமான நிலையத்துடன்மின்சார இணைப்புத் தொகுதி செயலிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்தல விமான நிலைய அதிகாரிகள், மின்சார சபைஅதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர். எனினும் இது தொடர்பான தகவல்களை இரகசியமாக பேணும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்றில் விமான நிலையத்துக்கான மின் இணைப்பை, சரணாலயத்துக்கு வெளியே வேறு மார்க்கத்தில்அமைக்க வேண்டும் என்றும், அல்லது சரணாலயத்தில் உள்ள அத்தனை குரங்குகளையும் சுட்டுக்கொன்று விட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலங்குகள் விமான நிலையப் பகுதிக்குள் வருவதைத் தடுக்க அருகில் உள்ள நீர் நிலைகளை மூடிவிடும்படி மேலிடத்தில் இருந்து உத்தரவு வழங்கப்பட்டது போன்று, குரங்குகளுக்கு நஞ்சுவைத்துக் கொல்லும்படி உத்தரவு வழங்கப்படலாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள்எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.
