Sunday, July 28, 2013

ஹலால் சான்றிதழை முழுமையாக நீக்காவிடின் போராட்டம் வெடிக்கும்: பொது பலசேனா தெரிவிப்பு

(VR)ஹலால் இலட்சனைகள் பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் இன்னும் விற்பனை நிலையங்களில் உள்ளன. எனவே அவற்றை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லாவிடின் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும் என பொது பலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிடின் தாம் நிச்சயமாக அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும். அவர் மேலும் தெரிவித்தார்.

ஹலால் சான்றிழை நிறுத்த வேண்டும் என கோரி நாம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதன் விளைவாக பேச்சுவார்த்தைகளும் பல்வேறு மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டதுடன் அதனை நீக்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதி தற்போது மீறப்பட்டுள்ளது.

சந்தைகளுக்குச் சென்றுபார்த்தால் ஹலால் இலட்சனைகள் பொறிக்கப்பட்ட உணவுப்பொருட்களைக் காணமுடிகின்றது. எனவே, அது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

எமது இந்த கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு கிடைக்கவில்லையெனில் மீண்டும் ஹலால் சான்றுக்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தி அதனை நிறுத்தியே தீருவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Disqus Comments