Friday, August 23, 2013

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் விடுதலை செய்யப்ட்டார்!

எகிப்து முன்னாள் ஜனாதிபதியும், 30 ஆண்டுகாலம் சர்வாதிகார ஆட்சி நடத்தியவருமான ஹோஸ்னி முபாரக் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படலாம் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எகிப்து நாட்டில் 30 ஆண்டுகள் ஜனாதிபதியாக ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக் (84), 2011-ம் ஆண்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் முபாரக் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். பின்னர் ஊழல் உள்ளிட்ட குற்றசாட்டுகளால் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் 2 ஆண்டுகள் வரை முபாரக் சிறையில் இருந்துள்ளார். எனினும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. எனவே இறுதித் தீர்ப்பு வரும் வரை அவர் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 2011-ல் நிகழ்ந்த 18 நாள் புரட்சியின் போது 800 பேரை கொலை செய்ததாகவும் முபாரக் மீது குற்றச்சாட்டு உள்ளது.

அரசு தரப்பு செய்தித்தாள் நிறுவனத்திடமிருந்து 11 மில்லியன் டாலர் அன்பளிப்புகள் பெற்றதாக அவர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இருந்து அவரை நீதிபதி விடுவித்து உத்தரவிட்டார்.

முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின் ஜனாதிபதியான மோர்ஸி ராணுவத்தால் பதவி நீக்கப்பட்டதால், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வன்முறைக் களமாகியுள்ள எகிப்தில் முபாரக் விடுவிப்பால் பதற்றம் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Disqus Comments