Thursday, September 5, 2013

உலக சாதனை நாயகன் உசேன் போல்ட் 2016ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார்!

பிரஸ்செல்ஸ்: தடகள உலகில் சாதனைப் படைத்த மின்னல் வேக வீரர் உசேன் போல்ட் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.
100 மீட்டர் (9.58 விநாடிகள்)  மற்றும் 200 மீட்டர் (19.19 விநாடிகள்)  ஓட்டப்பந்தயங்களில் உலக சாதனைப் படைத்த ஜமைக்காவின் உசேன் போல்ட் டையமண்ட் லீக் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டி, பெல்ஜியத்தின் பிரஸ்செல்ஸ் நகருக்கு சென்றுள்ளார். அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்த உசேன் போல்ட், "2016ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீராவில் நடைபெற இருக்கிற ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு நான் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். காரணம் புகழுடன் இருக்கும் போதே ஓய்வு பெற்று விட வேண்டும்.
ஒலிம்பிக் போட்டியில் மேலும் தங்க பதக்கங்களை பெற்று, ஓய்வு பெறுவதே சிறந்ததாக இருக்கும். எனவே 2016ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் எனது அதிகபட்ச திறனை வெளிப்படுத்தி சாதனை படைக்க முயல்வேன். குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி மற்றும் கால்பந்து வீரர் பீலே போன்று தலை சிறந்த வீரராக விளங்க வேண்டும் என்றால், ஓய்வு பெறும் வரை எனது போட்டிகளில் நான் ஆதிக்கம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.
உசேன் போல்ட் ஒலிம்பிக்-ல் 6 தங்கம் மற்றும் உலக தடகளப்போட்டியில் 8 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.(INRM)
Disqus Comments