Saturday, October 5, 2013

7ம் திகதி முதல் 13ம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமாக பிரகடனம்

அடுத்து வரும் மாதங்களில் எதிர்கொள்ள நேரும் காலநிலை மாற்றத்தைக் கருத்திற் கொண்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேலும் வலுப்படுத்த சுகாதார அமைச்சு காத்திரமான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. இதற்கிணங்க இம்மாதம் 7ம் திகதி முதல் 13ம்திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு பாரிய பல செயற்றிட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சும் டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியும் 15 அமைச்சுக்களுடன் இணைந்து மேற்கொள்ளும் இச் செயற்றிட்டத்துக்கு அனைத்து தரப்பினரதும் பூரண ஒத்துழைப்பு அவசியமெனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். உயிர்களைப் பாதுகாக்க மேற்கொள்ளும் இத்திட்டத்திற்கு அர்ப்பணிப்புள்ள பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் ஊடகங்களும் ஏனைய அனைத்துத் துறையினரும் வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த வருடங்களோடு ஒப்பிடும் போது இவ்வருடம் டெங்கு நோயினால் ஏற்படும் மரணங்கள் 50 வீதமாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் 2012ம் ஆண்டு டெங்கு நோயினால் 150 பேர் பலியாகியுள்ளதாகவும் இந்த ஆண்டில் இந்த தொகை 68 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். டெங்கு நோயினால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என்ற நோக்கிலேயே சுகாதார அமைச்சு அர்ப்பணிப்புடன் பல திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை 2012ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் 33,608 பேர் டெங்கு நோயினால் பாதிக் கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கையை கடந்த 9 மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,574 பேர் ஆகும். மரணங்கள் கடந்த ஆண்டில் 150 ஆகவும் இந்த வருடத்தில் 68 ஆகவும் குறைவடைந்துள்ளன.

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இம்மாதம் 7ம் திகதி முதல் 13ம் திகதி வரை தேசிய ரீதியில் பிரகடனப்படுத் தப்பட்டுள்ளதுடன் இக்காலங்களில் அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் சுகாதார அமைச்சு சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. சகல அமைச்சுக்கள் நிறுவனங்களுக்கும் இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 7ம் திகதி சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் டெங்கு ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறும். நிறுவனத்தின் டெங்கு ஒழிப்புப் பிரிவு குழுவினரும் சுகாதர அலுவலர்களும் பொலிஸ் மற்றும் முப்படையினரும் இந்த செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர். 8ம் திகதி சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு பேரூந்து வண்டி சாலைகள், பொது இடங்கள், மயானங்களில் கிராமக் குழுவினர், சுகாதார அலுவலர்கள், உள்ளூராட்சி நிறுவனங்ளின் அலுவலர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

9ம் திகதி உள்ளூராட்சி சபை தினத்தில் நகர வடிகாலமைப்பு முறைமைகள் மற்றும் பொது இடங்களில் சுகாதார அலுவல்கள், உள்ளூராட்சி சபை நிறுவன அலுவலர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

10ம் திகதி (வியாழன்) கூடிய கவனம் செலுத்த வேண்டிய தினமாகவும் கட்டட நிர்மாணம், வேலைத் தளங்கள், கைவிடப்பட்ட காணிகள், வீதி ஓரங்கள், பாதுகாப்பற்ற அவதானம் செலுத்த வேண்டிய வலயங்கள் டெங்கு சுகாதார அலுவலர்கள், உள்ளூராட்சி சபை நிறுவன அலுவலர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் இணைந்து டெங்கு ஒழிப்பில் ஈடுபடுவர்.

11ம் திகதி கல்விசார் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு சகல அரசாங்க மற்றும் தனியார் கல்விசார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், உள்ளடங்கலாக ஏனைய உயர் கல்வி நிறுவனங்கள், மாணவ விடுதிகள், முன் பள்ளிகளைச்சூழவுள்ள சுற்றுப்புற சூழல்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிறுவனத்தின் டெங்கு ஒழிப்பு குழு மற்றும் உத்தியோகத்தர்கள், சுகாதர அலுவலர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் இணைந்து டெங்கு ஒழிப்பை மேற்கொள்வர்.

12ம் திகதி வசிப்பிடங்களை சோதனையிடும் தினமாகையால் சகல வீடுகளும், வளவுகளும் சுத்தப்படுத்தப்படும். குடியிருப்பாளர்கள், கிராம குழுவினர், சுகாதார அலுவலர்கள் பொலிஸ், முப்படையினர் ஆகியோர் துப்புறவு நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

13ம் திகதி வீடுகள், மத ஸ்தானங்கள், தனியார் கல்வி நிலையங்கள் (ரியூசன் வகுப்புகள்) உள்ளிட்ட பிரதேசங்களில் குடியிருப்பாளர்கள், மாணவர்கள், ஆசிரி யர்கள், கிராமக் குழுவினர், பெற்றோர்கள், நிறுவன உத்தியோகத்தர்கள், சுகாதார அலுவலர்கள், பொலிஸ் முப்படையினரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்படவுள்ளது.
Disqus Comments