சோமாலியாவை நேற்று தாக்கிய புயலில் சிக்கி 1 லட்சம் வீடுகளை இழந்துள்ள நிலையில், 100 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்திய பெருங்கடலில் உருவான புயல் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் புந்த் லேண்ட் பகுதியில் நேற்று கரையை கடந்தது.
இதன் எதிரொலியாக கனமழையும், கடும் சூறாவளியும் அதனைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
பலமாக வீசிய சூறைக் காற்றில் சிக்கி மரங்கள் வேரோடு சாய்ந்தன, வீடுகள் இடிந்தன, சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
மேலும், தொலை தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன, இதனால் மின்சாரம் இல்லாமல் புந்த் லேண்ட் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இந்நிலையில் புயல் மற்றும் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கான மக்களைக் காணவில்லை என மீட்புப் பணியில்
ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும்
அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கன மழையால் ஏற்கனவே, சுமார் 1 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வரும்
நிலையில், மழை நாளை வரை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம்
எச்சரித்துள்ளது.