Tuesday, November 5, 2013

இலங்கையில் வேலைவாய்ப்பின்றி 50,000 இற்கும் அதிகமான பட்டதாரிகள் உள்ளனர்: ரிசாட்

எமது நாட்டில் 50,000 இற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் என கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'வேலைவாய்ப்பின்றி உள்ள பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஆனால், அரசாங்கத் திணைக்களங்களில் அதற்கான வெற்றிடங்கள் இல்லை.  இருந்தபோதிலும் அரசாங்கம் வேலைவாய்ப்பை உருவாக்கி பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்க்க முனைவதுடன், அவர்களின் வறுமை நிலையையும் இல்லாதொழிக்க முனைகின்றது.

பட்டதாரிகள் வேலை இல்லாதிருப்பது என்பது அந்தந்த குடும்பங்களுக்கும் பிரதேசங்களுக்கும் கிராமங்களுக்கும் நாட்டிற்கும் பொருளாதார ரீதியாக பாரிய நஷ்டமாக இருக்கின்றது.  எனவே தான் அரசாங்கம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குகின்றது.

பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குவதற்காக  ஜனாதிபதி 75 பேரின் பெயர்களை தாருங்கள் எனக் கேட்டிருந்தார். 75 பேரை ஆளும் கட்சியில் உள்ள 150 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து கொடுத்தால் ஒரு குறிப்பிட்ட அளவினரே  நியமனங்களை பெறும் வாய்ப்பு இருந்தது.

இந்த நிலையில், அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  இணைந்து கலந்துரையாடினோம். இதன்போது அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதாக இருந்தால் பல மில்லியன் ரூபா நிதி தேவை என ஜனாதிபதி கூறினார். இதனால், பல அபிவிருத்திகளை நிறுத்த வேண்டும் எனவும் அவர்  கூறினார். எனினும், இதற்கு நாம் இடம் கொடுக்காமல் ஆளும் கட்சியில் உள்ள அத்தனை பேரும் உங்களைப் போன்ற பட்டதாரிகளுக்காக கலந்துரையாடினோம்.

இதன் காரணமாக வடக்கில் நாம் அத்தனை பேரையும் உள்வாங்கினோம். ஆனால் நாங்கள் ஏனைய மாவட்டங்களைப் போல் அரசியல் ரீதியாக பணி புரியும் பிரதேசங்களை பிரிக்கவில்லை. அதற்கு முழுமையான சுதந்திரத்தை உங்களுக்கு நாம் தந்திருந்தோம். ஏனெனில் நாம் உங்களின் துன்பங்களையும்  வேதனைகளையும் அறிந்தவர்கள் என்பதனால் அவ்வாறாகச் செய்தோம்' என்றார்.
Disqus Comments