Wednesday, November 13, 2013

ஆஷுரா நோன்பின் சிறப்புக்கள்.

முஹர்ரம் மாதம் சிறப்புக்குரிய மாதமாகும். புனித மாதங்களில் ஒன்றாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 9:36)

‘ஹஜ்ஜத்துல் வதாவில்’ உரையாற்றிய போது) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்துவருகின்றவையாகும். அவை ஃதுல் கஅதா, ஃதுல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து ‘ரஜப்’ மாதம் ஆகும்.

அறிவிப்பவர் : அபூபக்ர்(ரலி) நூல் : புகாரி 4662

இம்மாதத்தில் உபரியான நோன்பு அதிகம் நோற்பது சிறப்பு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானுக்கு பின் மிகச் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரமில் நோற்பதாகும்.
நூல் : முஸ்லிம் 1982

வரலாற்றில் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாள்) நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ”இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ”உங்களை விட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 2004.

ஆஷூரா நாள் நோன்பின் சிறப்பு:
”ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!”
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : புகாரி 2006

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆஷூரா நாள் நோன்பு முந்தைய ஒரு வருட தவறுகளுக்கு பரிகாரமாகும் என்று நான் அல்லாஹ்விடம் நம்பிக்கை வைக்கின்றேன்.
நூல் : முஸ்லிம் 1976

9-ம் நாளும் நோன்பு வைப்பது சிறப்பு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்று அதில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்ட போது, அல்லாஹ்வின் தூதரே இது யூதர்களும் கிருத்தவர்களும், மகத்துவப் படுத்தும் நாளாக உள்ளதே? என நபித்தோழர்கள் கேட்டனர். அப்போது அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் வருடம் 9வது நாளும் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். அடுத்த வருடம் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் மரணித்திருந்தார்ர்கள்.
நூல் : முஸ்லிம் 1916
Disqus Comments