காஞ்சிபுரம் காமாட்சியம்மன்
கோயில் அருகில் உள்ள கொல்லாசத்திரம் திருமண மண்டபத்தில் நேற்று காலை சென்னை
நங்கநல்லூரை சேர்ந்த ரங்கா நாயுடு – மல்லிகா தம்பதி மகன் சென்னை அடையாறு
லஞ்ச ஒழிப்பு துறையில் போலீசாக உள்ள கார்த்திகேயனுக்கும் (25),
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெங்களத்தூரை சேர்ந்த ஒரு
பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
காலை 7.30 முதல் 9.30 மணிக்குள் முகூர்த்தம் நடைபெறுவதாக இருந்தது. காலை
6 மணியளவில் இளம்பெண் ஒருவர் மண்டபத்திற்குள் நுழைந்தார். மாப்பிள்ளை
தங்கியிருந்த அறைக்கு சென்ற அந்த பெண் கார்த்திகேயனிடம், என்னை காதலித்து
திருமணம் செய்துவிட்டு, இப்போது, வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாயா
என்று வாக்குவாதம் செய்தார்.
இதை பார்த்ததும், திருமண மண்டபத்தில் இருந்த இருவீட்டாரின் உறவினர்களும்
மாப்பிள்ளை அறைக்கு விரைந்து வந்தனர். அங்கு நடந்த வாக்குவாதத்தை பார்த்த
பெண் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்தனர். விசாரித்தபோது, மண்டபத்திற்கு வந்த
பெண் பரங்கிமலையை சேர்ந்த பிலோமினா (22). கால்சென்டர் ஊழியர் என
தெரிந்தது. திருமண மண்டபத்திற்கு வரும் முன்பாக பிலோமினா சிவகாஞ்சி
போலீசில் ‘கார்த்திகேயன் என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம்
செய்து கொள்கிறார். அதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று
புகார்கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து விஷ்ணு காஞ்சி இன்ஸ்பெக்டர்
பிரபாகரன் மற்றும் போலீசார் மண்டபத்திற்கு வந்தனர். கார்த்திகேயனை
விசாரணைக்காக அழைத்து சென்றனர். திருமணம் நின்று போனதால் மணமகள் கதறி
அழுதார்.
பிலோமினா கூறியதாவது: நானும் கார்த்திகேயனும் கடந்த 6 ஆண்டாக காதலித்து
வருகிறோம். கடந்த 6ம் தேதி சென்னையில் உள்ள கோயிலில் இருவரும் திருமணம்
செய்து கொண்டோம். நேற்று முன்தினம் காலையில்தான் ராயபுரம் சார்பதிவாளர்
அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தோம். இரவுதான் கார்த்திகேயனுக்கு
காஞ்சிபுரத்தில் 2வது திருமணம் நடப்பது தெரியவந்தது. எனது கணவரை வேறு எந்த
பெண்ணிற்கும் விட்டு தரமாட்டேன் என்று கூறினார். திருமணம் நின்று போன
சோகத்துடன் பெண் வீட்டார் மண்டபத்தில் இருந்தனர். இந்த சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மணப்பெண் கூறுகையில், நான் எம்.எஸ்.சி வரை படித்துள்ளேன்.
எனது திருமணம் திடீரென இப்படி நின்றுவிட்டது என கூறி கதறி அழுதார்.
இதுகுறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்ஸ்பெக்டர் பிரபாகர் தலைமையில்
காவல் நிலையத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் பெண் வீட்டார் தரப்பில்
‘இனி இந்த திருமணம் நடந்தால் சரியாக அமையாது. எனவே இதுவரை திருமணத்துக்காக
செலவு செய்த பணத்தை தரவேண்டும் என கூறி சென்றனர்.
கார்த்திகேயன் கூறுகையில், ‘எனது உறவினர்களும் பெற்றோரும் என் மீது
ஆத்திரமடைந்துள்ளனர். எனக்கு ஒன்றரை மாதம் அவகாசம் தரவேண்டும். அதற்குள்
அனைவரையும் சரிசெய்து பிலோமினாவுடன் குடும்பம் நடத்துவேன் என கூறி,
பிலோமினாவுடன் புறப்பட்டு சென்றார்.