Tuesday, November 5, 2013

பொது நலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்பது அசாத்தியம்

தமிழக அரசு மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், மத்திய அமைச்சர்களின் நெருக்கடியால் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளமாட்டார் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன,

இது தொடர்பில் இந்திய இணையத்தளம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை பொதுநலவாய மாநாடு நடைபெற உள்ளது. தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பது தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

கொழும்பு மாநாட்டில் கலந்து கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று திமுக தலைவர் கருணாநிதியோ எச்சரித்திருந்தார்.

அத்துடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், ஏ.கே. அந்தோணி ஆகியோரும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கருணாநிதியை ப.சிதம்பரம் நேரில் சந்தித்தும் பேசியிருந்தார். லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி சேர வாய்ப்பு அதிகம் இருக்கும் தி.மு.க.வின் கடும் எதிர்ப்பை புறக்கணிக்க முடியாத நிலையில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதனால் பிரதமர் மன்மோகன்சிங் இம்மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

இதை உணர்த்தும் விதமாகவே அண்மையில் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தின் உணர்வுகள் மதிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்தார் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.

அதே நேரத்தில் இலங்கை மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது அவசியம் என்பதால் அனேகமாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அல்லது துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி இம்மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் எதிர்ப்பை ஓரளவு சமாளிக்க முடியும் என்பது காங்கிரஸ் கட்சியின் கணக்கு என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.
Disqus Comments