Sunday, November 10, 2013

பொதுநலவாய மாநாட்டு உத்தியோகபூர்வ நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

கொழும்பில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் 23ஆவது உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இன்று (10) இரண்டு மாநாடுகள் ஆரம்பமாகின்றன.

உலகத்தை ஒன்றிணைக்கும் தேசம் என்ற மகுடத்தில் இலங்கையில் முதற் தடவையாக நடைபெறும் பொதுநலவாய அமைப்பின் மாநாட்டின் தொடக்கமாக இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டையிலும், பொதுநலவாய மக்கள் மன்றம் ஹிக்கடுவையிலும் இன்று ஆரம்பமாகின்றன.

இரண்டு மாநாடுகளும் எதிர்வரும் 14ஆம் திகதி நிறைவடையவுள்ளன. பொதுநலவாய இளைஞர் மாநாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கிறார். இன்று மாலை காலியில் நடைபெறும் பொது நலவாய மக்கள் மன்றத்திலும் ஜனாதிபதி பங்கேற்கிறார். இவற்றையொட்டி காலி, ஹிக்கடுவை மற்றும் ஹம்பாந்தோட்டை நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளதோடு விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுநலவாய இளைஞர் மாநாடு கடந்த வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு வைபவ ரீதியாக ஆரம்பித்து காலை 11.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் தலைவர்களும், வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்களும் வாய்ப்புக்களும் என்ற தலைப்பில் ஆராயவுள்ளனர்.

எதிர்வரும் 14 ஆம் திகதி பல்வேறு மட்ட சந்திப்புக்களும் கூட்டங்களும் நடைபெறவுள்ளன. இதேவேளை பொதுநலவாய மக்கள் மன்றத்தின் மாநாடு இன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு காலி கோட்டையிலுள்ள நீதிமன்ற சதுக்கத்தில் ஆரம்பமாகி இரவு 7.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இலங்கை மற்றும் வெளிநாடுகளின் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளதுடன் பொதுநலவாய நாடுகளில் வாழும் சிவில் சமூகத்தினர் எதிர்கொள்ளும் விடயங்கள் தொடர்பாக இந்த மாநாட்டின் போது ஆராயவுள்ளனர்.

இதேவேளை பொதுநலவாய இளைஞர் மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ருகுனுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிறது. இதில் 53 நாடுகளைச் சேர்ந்த 106 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணி உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். இலங்கையிலிருந்து 25 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணிக் குழு உறுப்பினர்களும் பங்குபற்றவுள்ளனர்.

எட்டு முக்கிய தலைப்புகளில் இங்கு விடயங்கள் ஆராயப்பவுள்ளதோடு இலங்கை அரச தலைவர்களுக்கும் இளைஞர் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பும் நடைபெறவுள்ளன. பொதுநலவாய வர்த்தக மாநாடு 12 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் 60 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 1300 முக்கிய வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்று சனிக்கிழமை முதல் அரச தலைவர்களின் வருகை ஆரம்பமானது.

பொதுநலவாய உச்சி மாநாட்டை முன்னிட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் தொடக்கம் அரச தலைவர்கள் கொழும்பில் தங்கியிருக்கவுள்ள ஹோட்டல்கள் வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

விசேட பாதுகாப்பு கடமைகளில் மாத்திரம் சுமார் 20,000 பொலிஸார் மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் இலங்கை வரும் அரச தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் தங்கு தடையின்றிய பயணத்தை கவனத்திற் கொண்டு மாத்திரம் 5000 போக்குவரத்து பிரிவு பொலிஸார் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் சுமார் ஆயிரம் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பங்கேற்கின்றனர்.

உள்நாட்டிலிருந்து 535 ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். ஊடகவியலாளர்களுக்குத் தேவையான வசதிகளை வெளிவிவகார அமைச்சும் தகவல் ஊடகத்துறை அமைச்சும் ஏற்படுத்தியுள்ளன.
Disqus Comments