Thursday, December 5, 2013

56 இலட்சம் மாணவர்களுள் 31,000 மாணவர்கள் பாடசாலை இடைவிலகியுள்ளனா்

இலங்கையில் கல்வி கற்கும் 56 இலட்சம் மாணவர்களுள் 31 ஆயிரத்து 504 மாணவர்கள் மட்டுமே பாடசாலை செல்லாது இடைவிலகியுள்ளனர். இவர்களில் ஆயிரத்து 841 மாணவர்கள் மாத்திரமே பொருளாதார பிரச்சினையால் பாடசாலை செல்லாதுள்ளனர் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையின் ஆரம்ப கல்வி வளர்ச்சியானது தெற்காசியாவில் முதல் இடத்திலும் ஆசியா மற்றும் சர்வதேச மட்டத்தில் அதிஉயர் இடத்திலும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இலங்கையின் கல்வி நிலை தொடர் பில் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் தெளிவுபடுத்தும் பொருட்டு விசேட கூற்று ஒன்றை முன்வைத்த அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் மொத்தமாக 56 இலட் சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 

இவர்களில் 31 ஆயிரத்து 504 பேர் மட்டுமே பாடசாலைக்கு செல்லவில்லை. எனவே, பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக் கையுடன் ஒப்பிடுகையில் செல்லாதவர் களின் வீதம் 0.55 சதவீதமாகும்.

இவர்களுள் ஆறு ஆயிரத்து 147 மாணவர்கள் வறுமையின் காரணமாக பாடசாலை செல்லாதுள்ளனர். இவர்களில் 1841 மாணவர் பொருளாதார பிரச்சினை காரணமாக பாடசாலைக்குச் செல்லாது உள்ளனர். எமது நாட்டின் ஆரம்பக் கல்விக்கு 98.3 வீதமான மாணவர்கள் பிரவேசிக்கின்றனர். இவர்களுள் 0.23 வீதமானோர் மட்டுமே விலகுகின்றனர். அத்துடன், இரண்டாம் நிலைக் கல்வியை 99 வீதமான மாணவர்கள் தொடர்கின்றனர்.

இலங்கையைப் பொதுத்தமட்டில் 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் இருக்கின்றனர். இது உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சர்வதேச மட்டத்தில் எமது ஆரம்பக் கல்வி நிலை உயர்தரத்தில் உள்ளதை காண்பிக்கிறது.

ஆரம்பக் கல்வி மட்டமானது இந்தியாவில் 96 வீதமாக இருக்கின்ற அதேவேளை, இலங்கையிலும் அதே 96 வீதமே இருக்கின்றது. அத்துடன் 5ம் தரக் கல்வியை எடுத்துக் கொண்டால். இந்தியாவில் 97 வீதமாகவும், அவுஸ்திரேலியாவில் 98.1 வீதமாகவும், ஜேர்மனி, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் 100 வீதமாகவும் இருக்கின்ற அதேவேளை, இலங்கையில் 99.5 வீதமாக காணப்படுகிறது.

எனவே கல்வி மட்டத்தில் இலங்கை தெற்காசியாவில் முதலாவது இடத்திலும் சர்வதேச மட்டத்தில் உயர்ந்த இடத்திலும் உள்ளது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப கல்வி வளர்ச்சி துரிதமாகக் காணப்படுகிறது என்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
Disqus Comments