Friday, December 6, 2013

புத்தளத்தில் பாடசாலை மேசை, கதிரைகளை விற்ற அதிபர் கைது!

புத்தளத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பாடசாலைக்குச் சொந்தமான தளபாடங்களை பழைய இரும்புக் கடைக்கு விற்பனை செய்த சம்பவத்தில் குறித்த அதிபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவர் 2013-10-31ஆம் திகதியன்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அதிபரை கைது செய்துள்ளனர்.

கல்பிட்டி பிரதேசத்தில் வேறு ஒரு பாடசாலையில் நடைபெற்ற நிகழ்விற்கு கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன் கொண்டு சென்ற தளபாடங்கள் மீண்டும் அதிபரின் பாடசாலைக்கு கொண்டுவரப்படாது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

அதன்படி விசாரணை செய்தபோது புத்தளம் பிரதேச பழைய இரும்புக் கடையில் 35 ஆயிரம் ரூபாவிற்கு மேசை, கதிரை, இரும்பு என்பவற்றை அதிபர் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி, பாடசாலை அதிபர் சுமனசிறி அமரசிங்க (52வயது) இன்று (06) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சந்தேகநபர் நாளை (07) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(அத தெரண – தமிழ்)
Disqus Comments