Wednesday, January 29, 2014

வடமேல் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் 481 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. - முதலமைச்சா்

வடமேல் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் 481 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதுவொரு பாரிய பிரச்சினையாகும். இந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

'புத்தளம் மாவட்டத்திலுள்ள ஆசிரியர்கள் வெற்றிடங்கள் தொடர்பாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் நான் சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக 2005 ஆம் ஆண்டு முதல் சேவையாற்றும் தொண்டர் ஆசிரியர்களை நிரந்தரமாக்க சகல அங்கிகாரங்களும் பெறப்பட்டுள்ளன' என்றும் அவர் தெரிவித்தார்.

குருநாகல் மாட்டத்திலுள்ள தமிழ்மொழி மூலப் பாடசாலை அதிபர்களின் கூட்டம்  வடமேல் மாகாண கல்விப் பணிமனையின் பணிப்பாளர் ஜே.ஜீ.என்.திலக்கரத்ன தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'வடமேல் மாகாணமான  குருநாகல் , புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மாஹோ கல்வி வலயத்தில் 35 ஆசிரியர் வெற்றிடங்களும் நிகவெரடிய வலயத்தில் 5 ஆசிரியர் வெற்றிடங்களும், ஹிரிஉல்ல கல்வி வலயத்தில் 33 ஆசிரியர் வெற்றிடங்களும், குளியாப்பிட்டிய கல்வி வலயத்தில் 27 ஆசிரியர் வெற்றிடங்களும், இப்பாகமுவ கல்வி வலயத்தில் 26 ஆசிரியர் வெற்றிடங்களும், குருநாகல் கல்வி வலயத்தில் 53 ஆசிரியர்கள் வெற்றிடங்களும், சிலாபம் கல்வி வலயத்தில் 160 ஆசிரியர்கள் வெற்றிடங்களும் புத்தளம் கல்வி வலயத்தில் 162 வெற்றிடங்களும் உள்ளன.

வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்து தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுக்கும் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தத்தம் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இதனைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷh, புத்தளம் நகர முதல்வர் கே.எம்.ஏ.பாயிஸ். குருநாகல் நகரசபை உறுப்பினர் அப்துல் சத்தார், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் முஹமட் தஸ்லிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Disqus Comments