Friday, May 23, 2014

அரசாங்க அலுவலகங்களை நாடி மக்கள் வருவது 81வீதம் வீழ்ச்சி

நடமாடும் சேவைகள் மற்றும் சமூகநலன் சேவைகள் ஊடாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதையடுத்து, கிராமப்புறத்து மக்கள் அரச அலுவலகங்களைநாடி வருவது 81 வீதம் வீழ்ச்சியடைந்திருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.

கிராமப்புறத்து மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரச அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக அரச அலுவலகங்களை நோக்கி வரவேண்டிய தேவை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடமாடும் சேவைகள் மற்றும் சமூகநலன் சேவைகளால் வெகுவாகக் குறைந்துள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது.

குருநாகல், கேகாலை, புத்தளம் மாவட்டங்களில் கிராம சேவகர் பிரிவுகள் மட்டத்தில் நடத்தப்பட்ட நடமாடும் சேவைகள், சமூகநலன் சேவைகள் ஊடாக பொதுமக்களின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன. இதனாலேயே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மொனராகல, பதுளை மாவட்டங்களில் நடத்தப்பட்டதைப்போன்று எதிர்வரும் 2015ம் ஆண்டில் நடத்தவுள்ள தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியின் முன்னோடியாக காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கிராம சேவகர் மட்டங்களில் நடமாடும் சேவைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேற்படி ஆறு மாவட்டங்களிலும் 3582 பிரதேச கிராமசேவர் பிரிவுகள் உள்ளன. 90 பிரதேச செயலக பிரிவுகளும், 41 தேர்தல் தொகுதிகளும் உள்ளடங்குகின்றன. எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள நடமாடும் சேவைகள் தொடர்பாக எதிர்வரும் 24,25,26ம் திகதிகளில் மொனராகலை மாவட்டத்தில் 12 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாக அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்தும் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும். முழுமையான அரச நிர்வாகக் கட்டமைப்பை கிராமங்களுக்குக் கொண்டுசெல்வதன் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கும், அவர்களின் தேவைகளையும் கண்டறிவதற்கு முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிர்காலத்தில் நடத்தப்படும் நடமாடும் சேவைகள் மூலம் இனங்காணப்படும் மக்களின் தேவைகளை உச்ச அளவில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்குத் தேவையான நிதி வழங்கப்படுவதுடன் அதற்குரிய அதிகாரிகள் நியமிப்பது மிகவும் அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பவித்திரா வன்னியாராச்சி, சுமேதாஜீ ஜயசேன, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உட்பட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர்கள், அரச நிறுவனத் தலைவர்கள் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Disqus Comments